எங்க கோட்டை.. மீண்டும் வெற்றிக்கொடி நட்ட பாஜக! கடந்த 20 ஆண்டுகளில் 19 ஆண்டுகாலம் ம.பியில் பாஜக ஆட்சி
போபால்: கடந்த 20 ஆண்டுகளில் 19 ஆண்டுகள் மத்திய பிரதேசத்தை ஆட்சி செய்த பாஜக, தங்கள் கோட்டையை தக்க வைத்துள்ளது. பாஜக மெஜாரிட்டியுடன் ம.பியில் ஆட்சி அமைக்க உள்ளது தற்போதைய நிலவரப்படி உறுதியாகியுள்ளது.
மத்திய பிரதேசத்தில் மொத்தம் உள்ள 230 சட்டப் பேரவை தொகுதிகளுக்கு கடந்த நவம்பர் 17ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இதில் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், ம.பி மாநில காங்கிரஸ் தலைவர் கமல்நாத் உட்பட 2,533 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். மத்திய பிரதேசத்தில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 5.6 கோடி. மாநிலம் முழுவதும் மொத்தம் 77.15 சதவிகித வாக்குகள் பதிவாகின. கடந்த 2018ஆம் ஆண்டு 75.6 சதவிகிதமாக வாக்குகள் பதிவாகியிருந்தன.

பாஜக நீண்ட காலமாக வலுவாக உள்ள மாநிலங்களில் ஒன்று மத்திய பிரதேசம். கடந்த 20 ஆண்டுகளில் 19 ஆண்டுகளாக பாஜக ஆட்சி செய்து வருகிறது. கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில், யாருக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. 114 இடங்களில் காங்கிரஸ் கட்சியும் 109 இடங்களில் பாஜகவும் வெற்றி பெற்றது. காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றி பெற்றிருந்தாலும், ஒரே ஆண்டில் எம்எல்ஏக்களின் அணி தாவலால் ஆட்சி பறிபோனது.
முதலமைச்சர் பதவியைப் பெறுவதில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கமல் நாத், இளம் தலைவரான ஜோதிராதித்ய சிந்தியா ஆகியோருக்கிடையே தொடர் போட்டி நிலவி வந்தது. கமல் நாத்துக்கு முதலமைச்சர் பதவி வழங்கப்பட்டதால் சிந்தியா அதிருப்தியில் இருந்து வந்தார். இறுதியில், சிந்தியா, தன்னுடைய ஆதரவு எம்எல்ஏக்களுடன் பாஜகவில் இணைந்தார். இதனால், ஆட்சி அமைத்த 16 மாதங்களில் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்தது.
பாஜகவின் சிவராஜ் சிங் சவுகான் மீண்டும் முதலமைச்சராக பதவியேற்று, ஆட்சி நடத்தி வருகிறார். இந்த முறை பெரும்பான்மை தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் நோக்கில், பெண்களுக்கு மாத உதவித் தொகை, இலவச பேருந்து சேவை, இலவச மின்சாரம் போன்ற அடுக்கடுக்கான வாக்குறுதிகளை காங்கிரஸ் வழங்கியது. எனினும் தற்போதைய ரிசல்ட் ட்ரெண்ட்படி, பாஜக, அதிக இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.
இதன் மூலம், மீண்டும் பாஜக ஆட்சி மத்திய பிரதேசத்தில் அமைய உள்ளதாகத் தெரிகிறது. தற்போதைய நிலவரப்படி பாஜக 127 தொகுதிகளிலும், காங்கிரஸ் கட்சி 98 தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வருகின்றன. கடந்த 20 ஆண்டுகளில் 19 ஆண்டுகளாக மத்திய பிரதேசத்தை ஆண்டு வரும் பாஜக, மீண்டும் தங்கள் காவிக்கொடியை ம.பியில் நாட்டியுள்ளது.
மத்திய பிரதேசத்தில், 1990-இல் நடந்த சட்டசபை தேர்தலில் பெரும் எண்ணிக்கையில் இடங்களைப் பிடித்த பா.ஜ.க முதல் முறையாக ஆட்சியைப் பிடித்தது. சுந்தர்லால் பட்வா முதல்வரானார். மூன்று ஆண்டுகள் கடந்த நிலையில், பாபர் மசூதி இடிக்கப்பட்டதைத் தொடர்ந்து பாஜக ஆட்சி செய்த மாநிலங்களில் எல்லாம் ஆட்சி கலைக்கப்பட்டபோது ம.பியிலும் பாஜக ஆட்சி கலைக்கப்பட்டது. அதன்பிறகு, மீண்டும் காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்தது.
அதற்குப் பிறகு, 2003ல் நடந்த தேர்தலில் ஆட்சியைப் பிடித்த பாஜக அதை 2018 வரை தக்கவைத்தது. உமாபாரதி, பாபுலால் கௌர், சிவராஜ் சிங் சௌகான் ஆகியோர் பாஜக சார்பில் முதலமைச்சர்களாக இருந்தனர். இந்த பதினைந்து ஆண்டுகளில் 13 ஆண்டுகள் சிவராஜ் சிங் சௌகான் ம.பியின் முதல்வராக இருந்தார். பின்னர், 2018ல் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தாலும், அது வெகுகாலம் நீடிக்கவில்லை. 2020ல் ஆட்சி கலைக்கப்பட்டு மீண்டும் சவுகான் முதல்வர் ஆனார்.
இந்நிலையில், மீண்டும் மத்திய பிரதேசத்தில் வெற்றியை உறுதி செய்து ம.பி எங்கள் கோட்டை என்று நிறுவியுள்ளது பாஜக. மத்திய பிரதேசத்தில் கடந்த முறை ஓரளவுக்கு அதிக இடங்களைப் பெற்றிருந்த காங்கிரஸ், இந்த முறை அதைவிட குறைவாகச் சென்றுள்ளது. தற்போதைய நிலவரப்படி, காங்கிரஸ் கட்சியை விட சுமார் 30 தொகுதிகளில் அதிகமாக முன்னிலை வகிக்கிறது பாஜக.












Click it and Unblock the Notifications