பாஜக எம்.எல்.ஏ ஆன முன்னாள் ஜெயிலர்.. பாலியல் சாமியார் ராம் ரஹீமுக்கு 6 முறை பரோல் வழங்கியது இவர்தான்
சண்டிகர்: பாலியல் குற்றவாளி சாமியார் ராம் ரஹீம் இருக்கும் சிறையில் ஜெயிலராக இருந்த சுனில் சுங்வான், ஹரியானா சட்டசபை தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். சுனில் சங்வான் ரோஹ்தக் சிறையில் ஜெயிலராக இருந்த சமயத்திலேயே குர்மீத் ராம் ரஹீமுக்கு அதிகபட்சமாக 6 முறை பரோல் வழங்கப்பட்டுள்ளது. பெரும்பாலும் அவை தேர்தல் சமயங்களில் வழங்கப்பட்டவை.
ஹரியானா மாநிலம் சிர்சாவை சேர்ந்த தேரா சச்சா சவுதா ஆசிரமத்தின் தலைவராக இருப்பவர் குர்மீத் ராம் ரஹீம் சிங். ஆசிரம பெண் சீடர்களை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் குர்மீத் ராம் ரஹீமுக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. பத்திரிகையாளர் ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் குர்மீத் ராம் ரஹீமுக்கும் அவரது கூட்டாளிகள் 3 பேருக்கும் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

ஹரியானாவில் 5 ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடந்த நிலையில், அதற்கு முன்னதாக சொந்த காரணங்களுக்காக குர்மீத் ராம் ரஹீம் தன்னை 20 நாள் பரோலில் விடுவிக்குமாறு ஹரியானா அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தார். தேர்தல் அதிகாரியின் ஒப்புதலின்படி, குர்மீத் ராம் ரஹீமுக்கு 20 நாள் பரோல் வழங்கப்பட்டு, கடந்த 1 ஆம் தேதி பரோலில் வெளியே வந்தார் ராம் ரஹீம். தேர்தல் நேரத்தில் அவர் பரோலில் விடுவிக்கப்பட்டது விமர்சனங்களை சந்தித்தது.
ஜெயிலர் சுனில் சங்வான்: குர்மீத் ராம் ரஹீம் இருக்கும் ரோஹ்தக் சுனாரியா சிறையில் ஜெயிலராக இருந்தவர் சுனில் சங்வான். இவர் தற்போது நடந்து முடிந்த ஹரியானா சட்டமன்றத் தேர்தலில் பாஜக சார்பில் சார்கி தாத்ரி தொகுதியில் போட்டியிட்டு காங்கிரஸ் வேட்பாளர் மனீஷா சங்வானை 1,957 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி பெற்றுள்ளார்.
தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு சற்று முன்பாக தனது ஜெயிலர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாஜகவில் இணைந்தார் சுனில் சங்வான். பாஜகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில் இவர் பெயரும் வெளியானது. இவர் ரோஹ்தக் சிறையில் ஜெயிலராக இருந்த காலகட்டத்தில், குர்மீத் ராம் ரஹீமுக்கு 6 முறை பரோல் வழங்கப்பட்டது. கைதிக்கு பரோல் வழங்கலாமா வேண்டாமா என நீதிமன்றத்திற்கு பரிந்துரை வழங்குவதே ஜெயிலர் தான்.
அதிக முறை ரஹீமுக்கு பரோல் வழங்கிய ஜெயிலர்: ரோஹ்தக் சிறையில் ஜெயிலராக சுனில் சங்வான் இருந்த காலத்தில் சாமியார் குர்மீத் ராம் ரஹீமுக்கு 6 முறை பரோல் வழங்கப்பட்டிருந்த நிலையில், ஜெயிலர் சுனில் சங்வான், பாஜக சார்பில் போட்டியிட சீட் வழங்கப்பட்டதும், தேர்தலுக்கு முன்பாக ராம் ரஹீம் பரோலில் வந்ததும் சர்ச்சைகளை ஏற்படுத்தின.
தேரா சச்சா சவுதா ஆசிரம தலைவர் ராம் ரஹீமுக்கு 15 முறை பரோல் வழங்கப்பட்டுள்ளது. கடந்த 7 ஆண்டுகளில் 259 நாட்களுக்கு மேல் அவர் சிறையை விட்டு வெளியே இருந்துள்ளார். சுவாரஸ்யமாக, அவரது பரோல்கள் பெரும்பாலும் தேர்தல் நேரத்திலேயே வழங்கப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications