ஒடிசா ரயில் விபத்துக்கான காரணம் என்ன? மத்திய ரயில்வே அமைச்சர் பதில்
புவனேஷ்வர்: ரயில் விபத்து தொடர்பாக உயர் மட்ட குழு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. இந்தக் குழு விரிவான விசாரணை நடத்தும். இதன் பின்னரே விபத்துக்கான காரணம் தெரியவரும் என்று மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் இருந்து சென்னைக்கு ஷாலிமர் - சென்னை சென்ட்ரல் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் நேற்று மாலை ஒடிசா மாநிலம் பாலசோர் அடுத்த பாஹாநாகா பஜார் ரயில் நிலையம் அருகே வந்தபோது விபத்தில் சிக்கியது. ரயிலின் 12 பெட்டிகள் வரை தடம் புரண்டு கவிழ்ந்தது.

சற்று நேரத்தில், அந்த வழியாக வந்த யஷ்வந்த்பூர் - ஹவுரா ரயில், கவிழ்ந்து கிடந்த கோரமண்டல் ரயிலின் பெட்டிகள் மீது மோதியுள்ளது. இதில் ஹவுரா ரயிலின் 4 பெட்டிகள் தடம்புரண்டு சரிந்தன. இந்த 2 பயணிகள் ரயிலுடன், மூன்றாவதாக சரக்கு ரயில் ஒன்றும் விபத்தில் ஈடுபட்டுள்ளது. இந்த கோர விபத்தில் ரயில் பெட்டிகள் ஒன்றுடன் ஒன்று மோதி உருக்குலைந்து கிடந்தது.
ரயிலில் பயணம் செய்த பயணிகள் விபத்தில் சிக்கி அபயக்குரல் எழுப்பினர். நேற்று இரவு 6.50 மணியில் இருந்து 7.10 க்குள் இந்த விபத்து நடைபெற்றுள்ளது. ரயில் பெட்டிகள் ஒன்றுக்கொன்று மோதி உருக்குலைந்து சிதைந்து கிடந்தன. இந்த இடிபாடுகளுக்குள் இருந்து படுகாயத்துடனும் பயணிகள் பலர் மீட்கப்பட்டுள்ளனர். சடலங்களும் சிதைந்த நிலையில் கிடந்தன.
இந்த விபத்தில் சுமார் 261 பயணிகள் பலியானதாகவும் 900 க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளதாகவும் ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீட்பு பணிகள் தற்போது நடைபெற்று மறு சீரமைப்பு பணிகள் தொடங்கியுள்ளன. முன்னதாக நடைபெற்ற இடத்திற்கு இன்று நேரில் சென்று மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அஸ்வினி வைஷ்ணவ், ரயில் விபத்து தொடர்பாக உயர் மட்ட குழு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. இந்தக் குழு விரிவான விசாரணை நடத்தும். ரயில் பாதுகாப்பு ஆணையர் சுதந்திரமான விசாரணை நடத்துவார். விபத்துக்கான காரணம் விசாரணை முடிந்து ரயில்வே பாதுகாப்பு ஆணையர் அறிக்கை சமர்பித்த பிறகே தெரியவரும். விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு சிறந்த சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்" என்றார்.
நாட்டையே உலுக்கிய இந்த ரயில் விபத்தை அடுத்து அவசர ஆய்வு கூட்டத்தை பிரதமர் மோடி கூட்டினார். அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பிரதமர் மோடி இன்றே ஒடிசாவுக்கு புறப்பட்டுள்ளார். ஒடிசாவில் விபத்துப் பகுதிக்குச் சென்று பார்வையிட்டுவிட்டு பின்னர் பாலாசோர் மருத்துவமனைக்கு சென்று காயம் அடைந்தவர்களை சந்தித்து நலம் விசாரித்து ஆறுதல் கூற உள்ளார்.












Click it and Unblock the Notifications