தேர்தலில் போட்டியிட 2 குழந்தைக்கு மேல் இருக்க வேண்டும்.. சட்டம் கொண்டு வரும் சந்திரபாபு நாயுடு
அமராவதி: ஆந்திராவில் குழந்தை பிறப்பு சதவீதம் ஆண்டுதோறும் குறைந்து வருகிறது. இதனால் 2 குழந்தைகளுக்கு மேல் உள்ளவர்கள் மட்டுமே உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட முடியும் என்ற சட்டத்தை கொண்டு வர அரசு யோசித்து வருகிறது என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
ஆந்திராவில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் ஆளும் கட்சியாக இருந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்தது. தெலுங்கு தேசம் + ஜனசேனா + பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்றது.

இதையடுத்து தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு புதிய முதல்வராக பொறுப்பேற்று செயல்பட்டு வருகிறார். துணை முதல்வராக ஜனசேனா கட்சியின் தலைவரான நடிகர் பவன் கல்யாண் இருக்கிறார்.
ஆந்திராவில் இருந்து தெலுங்கானா தனி மாநிலமாக பிரிக்கப்பட்டபோது ஹைதரபாத் தெலுங்கானாவுக்கு சென்றது. இதையடுத்து ஆந்திராவின் தலைநகராக அமராவதியை உருவாக்க சந்திரபாபு நாயுடு முடிவு செய்து உள்கட்டமைப்புகளை மேம்படுத்த திட்டங்களை செயல்படுத்தினார். ஆனால் முந்தைய ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சியில் முதல்வராக இருந்த ஜெகன்மோகன் ரெட்டி அதனை விரும்வில்லை. இதனால் அமராவதிக்காக சந்திரபாபு நாயுடு போட்ட திட்டம் என்பது முடங்கியது.
இந்த முடங்கிய திட்டங்களை மீண்டும் சந்திரபாபு நாயுடு இப்போது தொடங்கி வைத்துள்ளார். அந்த விழாவில் சந்திரபாபு நாயுடு பேசியதாவது: ஆந்திராவில் பல மாவட்டங்களில் உள்ள கிராமங்களில் முதியர்கள் தான் அதிகம் உள்ளனர். கிராமங்களில் வசித்த இளைஞர்கள் வேலை நிமித்தமாக வெளிநாடு, வெளி மாநிலங்கள் என்று பிற இடங்களுக்கு இடம்பெயர்ந்தது தான் இதற்கு காரணமாகும். 1950ம் ஆண்டில் இந்தியாவின் குழந்தை பிறப்பு சதவீதத்தின் சராசரி என்பது 6.2 என்ற அளவில் இருந்தது. இது கடந்த 2021ல் 2.1 என்ற அளவில் குறைந்துள்ளது. ஆந்திராவை எடுத்து கொண்டால் குழந்தை பிறப்பு சதவீத சராசரி 1.6 என்ற அளவில் தான் இருக்கிறது.
மக்கள் தொகை அடிப்படையில் பார்த்தால் நம் நாட்டுக்கு 2047 வரை தான் நன்மையானதாக இருக்கும். அதன்பிறகு முதியவர்களின் எண்ணிக்கை தான் நம் நாட்டில் அதிகமாக இருக்கும். ஆந்திராவை எடுத்து கொண்டால் இளைஞர்களை விட முதியவர்கள் தான் அதிகம் இருப்பார்கள். ஜப்பான், சீனா, ஐரோப்பாவில் தற்போதே இதுபோன்ற சூழல் உள்ளது. அதிக குழந்தைகளை பெற்றெடுப்பது உங்களின் (மக்கள்) பொறுப்பு. அதனை உங்களுக்கு செய்ய வேண்டாம். நாட்டின் நலனுக்காகவும், சமூக சேவையாகவும் செய்ய வேண்டும்.
நான் ஒரு காலத்தில் மக்கள்தொகை கட்டுப்படுத்தும் நடவடிக்கைக்கு ஆதரவாக இருந்தேன். அதோடு 2 குழந்தைகளுக்கு மேல் குழந்தைகள் பெற்றால் அவர்கள் தேர்தலில் போட்டியிடுவதை தடுக்கும் வகையில் சட்டத்தை கொண்டு வந்தேன். மக்கள்தொகை அதிகரித்தால் தண்ணீர், உணவு தட்டுப்பாடு ஏற்படும் என்று நான் பயந்தேன். நான் சொன்னதை கேட்டு 10 ஆண்டுகளாக ஆந்திராவில் மக்கள்தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்தினீர்கள்.
ஆனால் இன்று நிலைமை மாறிவிட்டது. நம் மாநிலத்தில் இளைஞர்கள் இல்லையே என்ற பயம் என்னிடம் உள்ளது. இதனால் அதிக குழந்தைகள் பெற்றெடுக்கும் குடும்பங்களுக்கு ஊக்கத்தொகைகளை வழங்க அரசு யோசித்து வருகிறது. இது குழந்தைகள் பெற்றேடுக்க தம்பதிகளை ஊக்கப்படுத்தும். அதுமட்டுமின்றி 2 குழந்தைகளுக்கு மேல் இருந்தால் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட முடியாது என்ற சட்டத்துக்கு பதில் இரண்டு குழந்தைகளுக்கு மேல் உள்ளவர்கள் மட்டுமே உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வகையில் புதிய சட்டத்தை கொண்டு வருவோம்'' என்றார்.
ஆந்திர மாநிலத்தை எடுத்து கொண்டால் தற்போதைய மக்கள் தொகையின் சராசரி வயது என்பது 32 என்ற அளவில் உள்ளது. இது 20247 ம் ஆண்டில் 40 என்ற வயதாக அதிகரிக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இத்தகைய சூழலில் தான் தம்பதிகள் அதிக குழந்தைகளை பெற்றேடுக்க வேண்டும் என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications