அனைத்து சாதியை சேர்ந்தவர்களும் அர்ச்சகராகும் விவகாரம்: அரசின் விதி செல்லுமெனத் தீர்ப்பு
அனைத்து சாதியைச் சேர்ந்தவர்களும் கோவில்களில் அர்ச்சகராகும் விவகாரத்தில், தமிழ்நாடு அரசின் விதிகள் செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஆகம விதிப்படி இயங்கும் கோவில்களைக் கண்டறிய ஐந்து பேர் கொண்ட குழுவை நியமிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் கோவில்களில் அனைத்து சாதியைச் சேர்ந்த 28 பேரை பல்வேறு கோவில்களில் கடந்த ஆகஸ்ட் 14ஆம் தேதி அர்ச்சகர்களாக தமிழ்நாடு அரசு நியமனம் செய்தது. இவர்களில் 4 பேர் பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள். மேலும், 2020ஆம் ஆண்டில் இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் உள்ள கோவில்களில் அர்ச்சகர்கள் நியமனத்திற்கென புதிய விதிகள் கொண்டுவரப்பட்டன. அந்த புதிய விதிகளின்படி, அர்ச்சகராக சேருவோர் 18 வயதிலிருந்து 35 வயதுக்குட்பட்டவராக இருக்க வேண்டுமென்றும் ஆகமப் பள்ளிகளில் பயிற்சி பெறுவோராக இருக்க வேண்டுமென்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
- அனைத்து சாதியினரும் அர்ச்சகராக தமிழ்நாடு எதிர்கொண்ட சவால்கள் என்ன?
- 'இந்துக்கள் எண்ணிக்கை குறைகிறது, உண்டியலில் பணம் செலுத்த வேண்டாம்' - ஆதீனங்கள் கூற்று சரியா?
- ஆதீனங்கள் Vs தமிழ்நாடு அரசு: காக்க வேண்டியது பாரம்பரியமா, மனித உரிமையா? ஆர்வலர்கள் கேள்வி
அனைத்து சாதி அர்ச்சகர்கள் நியமனத்தை எதிர்த்தும் இந்த புதிய விதிகளை எதிர்த்தும் அகில இந்திய ஆதி சிவாச்சாரியார்கள் சேவா சங்கம் உள்பட பத்துக்கும் மேற்பட்ட தரப்பினர் சென்னை உயர் நீதிமன்றத்தை நாடினர்.
இந்த வழக்கு கடந்த ஓராண்டாக நடந்துவந்த நிலையில், வழக்கை விசாரித்துவந்த தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி மற்றும் மாலா அடங்கிய அமர்வு இன்று (ஆக. 22) தீர்ப்பளித்தது. அதில் அர்ச்சகர் நியமனம் தொடர்பாக தமிழ்நாடு அரசு விதித்த விதிகள் செல்லும் என்றும் ஆகம விதிப்படி இயங்கும் கோவில்களில் அந்த ஆகம விதிப்படி அர்ச்சகர்களை நியமிக்க வேண்டும் என்றும் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் எந்தெந்தக் கோவில்கள் ஆகம விதிகளைப் பின்பற்றுகின்றன, எந்தெந்தக் கோவில்கள் ஆகம விதிகளைப் பின்பற்றவில்லை என்பது குறித்துக் கண்டறிய ஐந்து பேர் குழுவை அமைக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அந்த ஐந்து பேர் கொண்ட குழுவில், இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் ஒருவரும் அரசு நியமிக்கக்கூடிய இரண்டு பேரும் இருப்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்














Click it and Unblock the Notifications