காமன்வெல்த் மாநாடு.. முடிவெடுக்க முடியாத குழப்பத்தில் காங்கிரஸ்!

தமிழர்களை இனப்படுகொலை செய்த இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது என்பது தமிழக அரசு மற்றும் தமிழக அரசியல் கட்சிகளின் கருத்து. அத்துடன் முன் எப்போதும் இல்லாத வகையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மத்திய அமைச்சர்களான ப.சிதம்பரம், ஜி.கே.வாசன், ஜெயந்தி நடராஜன், ஏ.கே. அந்தோணி ஆகியோரும் காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் பங்கேற்க எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
தமிழகத்தில் நாமக்கல் மாவட்ட இளைஞர் காங்கிரஸாரும் மத்திய அமைச்சர்கள் ராஜினாமா செய்ய வலியுறுத்தி தீர்மானம் போட்டுள்ளனர். ஆனால் இத்தனை எதிர்ப்புகளையும் மீறி எப்படியும் பிரதமர் மன்மோகன்சிங்கை இலங்கை காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்க வைப்பது என்பதற்கான லாபி ஒன்றும் வெளியுறவுத் துறை அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தமிழக எதிர்ப்பை சமாளிக்கும் வகையில் கொழும்புவுக்கும் சென்றுவிட்டு தமிழர்கள் வாழும் வடக்கு மாகாணத்துக்கும் பிரதமர் செல்லலாம் என்று சுதர்சன நாச்சியப்பன் போன்ற மத்திய அமைச்சர்கள் யோசனை ஒன்றை முன்வைத்தனர். அதையும் வெளியுறவுத் துறை ஆராய்ந்து வருகிறது.
லோக்சபா தேர்தல் நெருங்கும் நிலையில் தமிழகத்தில் கடுமையாக எதிர்ப்பு நிலவி வருகிறது. இதனை எப்படி சமாளிப்பது என்ற இடியாப்ப சிக்கலில் காங்கிரஸ் கட்சி தத்தளித்து வருகிறது.
இதைத் தொடர்ந்து இன்று காலை காங்கிரஸ் கட்சியின் உயர்நிலைக் குழு கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் இலங்கை காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் மன்மோகன்சிங் பங்கேற்பது குறித்து விவாதிக்கப்பட்டது.
காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் மன்மோகன்சிங் பங்கேற்க கூடாது என்று மத்திய அமைச்சர்கள் ப. சிதம்பரம், நாராயணசாமி ஆகியோர் வலியுறுத்தியதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே நேரத்தில் ஒரு சில காங்கிரஸ் தலைவர்கள் இலங்கை காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் கலந்து கொள்ளலாம் என்றும் கூறியுள்ளதாக தெரிகிறது.
இந்த கூட்டம் ஒன்றரை மணி நேரம் நடைபெற்றது. கூட்டத்துக்குப் பின்னர் ப.சிதம்பரம் உள்ளிட்ட எவரும் செய்தியாளர்களை சந்திக்கவில்லை. இந்த ஆலோசனைக் கூட்டத்தைத் தொடர்ந்து பிரதமர் மன்மோகன்சிங்கை அமைச்சர் நாராயணசாமி தனியே சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு 15 நிமிடங்கள் நீடித்தது.
இருப்பினும் இந்த விவகாரத்தில் முடிவு எடுப்பதில் காங்கிரஸ் கட்சியும் பிரதமர் மன்மோகன்சிங்கும் கடுமையான குழப்பத்தில் இருப்பதாகவே டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அப்படியே இறுதி முடிவு ஒன்று எடுத்தாலும் அதை உடனேயே மத்திய அரசு அறிவித்துவிடாது என்றும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications