ராஜபக்சே அழைப்புக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் எதிர்ப்பு!
டெல்லி: நரேந்திர மோடி பதவியேற்பு விழாவில் இலங்கை அதிபர் ராஜபக்சேவை அழைப்பதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக டெல்லியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலர் டி. ராஜா கூறியதாவது:
ராஜபக்சேவை தனது பதவியேற்பு விழாவுக்கு அழைத்துள்ள மோடியின் செயலை எக்காரணத்தைக் கூறியும் நியாயப்படுத்த முடியாது. இலங்கையில் உள்நாட்டுப் போர் நிலவியபோது என்ன நடந்தது? யாருக்கெல்லாம் பாதிப்பு ஏற்பட்டது? அதன் பின்னணியில் இருந்தவர்கள் யார், யார்? என்பதை நன்றாக உணர்ந்த கட்சி பாஜக. எனவே, நட்பு நாடு, நல்லெண்ண அடிப்படையில் அழைப்பு அனுப்பினோம் என்றெல்லாலம் அக்கட்சித் தலைவர்கள் கூறுவதை நம்ப மக்கள் தயாராக இல்லை.
இலங்கை போர்க்குற்றங்கள் மீது சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று இந்தியா முழுவதும் பல்வேறு அரசியல் கட்சிகள் குரல் கொடுத்து வருகின்றன. அப்பாவித் தமிழர்களைக் குறி வைத்து இனப் படுகொலையும் சொல்ல முடியாத அளவுக்கு மனித உரிமை மீறல்களும் இலங்கையில் அரங்கேறின. அதற்குக் காரணமானவர்கள் மீது விசாரணை நடத்தி தண்டிக்கப்பட வேண்டும்.
இக்கோரிக்கையைத்தான் இந்தியாவில் உள்ள தமிழ் அமைப்புகளும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.
ஆனால், அதைக் கண்டும் காணாமல் போனதன் விளைவைத்தான் தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தல் முடிவில் காங்கிரஸ் கட்சி பேரழிவை சந்தித்துள்ளது.
இப்போது அதே பாணியை கடைப்பிடிக்க பாஜகவும் தயாராகி வருவதைத்தான் ராஜபக்சேவுக்கு மோடி அனுப்பியுள்ள அழைப்பிதழ் காட்டுகிறது.
மோடி நாட்டின் பிரதமராகி விட்டால் இலங்கை பிரச்னைக்குத் தீர்வு காணப்படும் என பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாமக, மதிமுக போன்ற கட்சிகளின் தலைவர்கள் கூறி வருகின்றனர். ஆனால், இலங்கை விவகாரத்தில் இந்தியா இதற்கு முன்பு கடைப்பிடித்து வந்த வெளியுறவுக் கொள்கையைத்தான் பாஜக அரசு கடைப்பிடிக்காது என அவர்களால் உறுதிபடக் கூற முடியுமா?
மொத்தத்தில் ஆட்சி மாற்றத்தின் மூலம் தமிழர் நிலையில் மாற்றம் ஏற்படும் என தமிழர்கள் கொஞ்சமாவது நம்பிக்கை வைத்திருந்தனர். ஆனால், அந்த நம்பிக்கையைத் தகர்க்கும் வகையில் மோடி செயல்பட்டிருப்பது கவலைக்குரியது.
இவ்வாறு டி. ராஜா கூறினார்.












Click it and Unblock the Notifications