சிரஞ்சீவிக்கு நேர்ந்த அவமானம்! தம்பிக்கு விழா; அண்ணனுக்கு மரியாதை! பவன் பச்சைக் கொடி!
ஆந்திரா: தெலுங்கு திரைப்படத் தயாரிப்பாளர் குழு ஒன்று பவன் கல்யாணை திடீரென்று சந்தித்திருந்தது. அந்தச் சந்திப்பின் பின்னணி என்ன என்பது பற்றி தற்போது செய்தி வெளியாகியுள்ளது.
தெலுங்கு திரையுலகில் இப்போது உள்ள மூத்த நடிகர்களில் ஒருவரான சிரஞ்சீவி, கடந்த 1978 ஆம் ஆண்டு புனாதிரல்லு திரைப்படத்தின் மூலம் தொடங்கினார். ஆனால், அந்தப் படத்திற்கு முன்பாகவே பிராணம் கரீடு வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இவரது நடிப்பில் 1987 ஆம் ஆண்டு வெளியான ஸ்வயம்க்ருஷி என்ற திரைப்படம் ரஷ்ய மொழியில் டப்பிங் செய்யப்பட்டு மாஸ்கோவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது.

டோலிவுட் திரையுலகில் மிகப்பெரிய ஸ்டாராக வலம் வந்த சிரஞ்சீவி, கடந்த 2008இல் ஆந்திராவில் பிரஜா ராஜ்யம் என்ற பெயரில் தனிக்கட்சி தொடங்கினார். அதற்கு அடுத்த ஆண்டே நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பலேகொல் மற்றும் திருப்பதி ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட்டார். ஆனால், திருப்பதியில் மட்டுமே வெற்றிபெற்றார். அதன் பின்னர் அவரது அரசியல் கட்சியை ஆந்திர மக்கள் ஆட்சிக்கட்டிலில் அமர்த்தவில்லை. இறுதியாக 2011இல் தனது கட்சியை காங்கிரஸ் கட்சியுடன் இணைத்தார் சிரஞ்சீவி. அதன் பின்னதாக அவர் தீவிர அரசியலிலிருந்து விலகியே இருந்து வருகிறார்.
இந்நிலையில்தான் அவரது தம்பி பவன் கல்யாண், ஜனசேனா என்ற பெயரில் கட்சியைத் தொடங்கிப் பல கட்டப் போராட்டங்களுக்குப் பிறகு தெலுங்கு தேசம், பாஜக ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து 2024 சட்டமன்றத் தேர்தலில் 21 இடங்களில் போட்டியிட்டு அனைத்து இடங்களிலும் வெற்றிபெற்றது அவரது கட்சி. அதே மாதிரி போட்டியிட்ட 2 மக்களைத் தொகுதிகளிலும் வென்று 100% வெற்றியை தேர்தல் ஆணையம் மூலம் ஜனசேனாவுக்கு அங்கீகாரம் பெற்று தந்துள்ளார் இவர். எந்த அரசியல் வாழ்க்கையில் அண்ணன் தோல்வியடைந்தாரோ, அதே அரசியல் களத்தில் அசைக்க முடியாத சக்தியாக உருவெடுத்துச் சாதித்துக் காட்டி இருக்கிறார் தம்பி பவன் கல்யாண். இவரது கட்சி ஆளும் கட்சியாக இருந்த ஒய்.எஸ்.ஆர்.சி.பி கட்சியை மூன்றாவது இடத்திற்குத் தள்ளி இருப்பதுதான் இந்தத் தேர்தல் அதிரடி மாற்றமாகக் கருதப்படுகிறது.
தேர்தல் களத்தில் வெற்றி பெற்றவுடன் அண்ணன் சஞ்சீவியைச் சந்தித்து ஆசீர்வாதம் பெறுவதற்காக அவரது வீட்டுக்கு குடும்பத்தினருடன் சென்றார். அப்போது ஒட்டுமொத்த குடும்பமும் சேர்ந்து நின்று பவனை வரவேற்றது. அங்கே நின்றிருந்த அண்ணன் சிரஞ்சீவி காலில் விழுந்து பவன் கல்யாண் ஆசீர்வாதம் பெற்ற வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் பரவலான கவனத்தைப் பெற்றிருந்தது.
தனது தம்பியின் வெற்றி குறித்து பேசியிருந்த சிரஞ்சீவி, “பல ஆண்டுகளுக்கு முன்பு பவன் திரைத்துறைக்கு வர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஆனால் அவரே அரசியலில் சுதந்திரமாக அடி எடுத்து வைத்தார். அவரைக் குறித்துத் தாக்கியபோது ஒரே குடும்பத்தைச் சேர்ந்த எங்களுக்கு வலித்தது. ஆனால் இது நாட்டில் உள்ள தாய்மார்களுக்காக அவர் செய்ய வேண்டிய தியாகம் என்று நான் என் அம்மாவிடம் சொன்னேன். அநீதி தலையெடுக்கும் போது அவர் ஒருபோதும் அமைதியாக இருந்தது இல்லை. அவரது குரல் ஓங்கி ஒலித்தது. எங்கள் குடும்பத்தில் கடைசியாகப் பிறந்த பிள்ளை அவர், ஆனால், எப்போதும் மற்றவர்களுக்குச் சேவை செய்வதில் முதல் ஆள் அவர்தான்” என்று சொல்லியிருந்தார்.
இந்நிலையில்தான் தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர்கள் குழு ஒன்று இரண்டு நாட்கள் முன்னதாக பவன் கல்யாணைச் சந்தித்தது. அதில், அஸ்வினி தத், அல்லு அரவிந்த், சுரேஷ் பாபு, மைத்ரி நவீன், விஸ்வ பிரசாத் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். இந்தச் சந்திப்பில் கூடுதலாக ஒரு சுவாரஸ்யமான சம்பவம் இடம்பெற்றிருந்தது. அது என்னவென்றால், நாகார்ஜுனாவின் மருமகள் யர்லகட்டா சுப்ரியா துணை முதல்வர் பவன் கல்யாணைச் சந்தித்திருந்தார்.இவர் "அக்கடா அம்மாயி இக்கட அப்பா" படத்தின் மூலம் திரை வாழ்க்கையை தொடங்கியவர். அவர் நடித்த ஒரே படம் அதுதான். இதில்தான் பவன் கல்யாண் முதன்முதலாக ஹீரோவாக அறிமுகமானார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு பவனை முதல் பட கதாநாயகியான சுப்ரியா சந்தித்த செய்தி கவனம் பெற்றிருந்தது.
துணை முதல்வரை இந்தக் குழு ஏன் சந்தித்தது? அதற்கான நோக்கம் என்ன என்பது பற்றி செய்தி இப்போது வெளியாகியுள்ளது. இந்தச் சந்திப்பு பற்றி அல்லு அரவிந்த் விளக்கம் அளித்துள்ளார். சந்திரபாபு நாயுடுவுக்கும் பவன் கல்யாணுக்கும் ஒரு பாராட்டு விழா நடத்துவதற்காக முதல்வரின் தேதியைக் கேட்க சென்றதாக அவர் கூறியுள்ளார். அதில் கூடுதலான குட் நியூஸ் ஒன்று அதில் சேர்ந்துள்ளது. சிரஞ்சீவிக்குக் கடந்த ஜனவரியில் பத்ம விபூஷன் வழங்கப்பட்டது. அதைக் கொண்டாடும் விதமாக தெலுங்கு திரைப்பட வர்த்தக சபைத் தலைவர் தில் ராஜு, சிரஞ்சீவியைச் சந்தித்து, சிரஞ்சீவிக்குப் பாராட்டு விழா திட்டமிட்டு உள்ளதாக அறிவித்திருந்தார்.
ஆனால், கடந்த ஆறு மாதங்களாக அப்படி எந்த விழாவும் நடக்கவில்லை. தேர்தல் காலமாக இருந்ததால் விழா தள்ளி வைக்கப்பட்டது. பழம்பெரும் எஸ்.பி.பாலசுப்ரமணியம் மறைந்தபோது அவருக்கு அஞ்சலிக் கூட்டத்தைக் கூட நடத்த முடியவில்லை. சிரஞ்சீவி தெலுங்கு சினிமாவை பெரிய அளவில் வணிகமயமாக்கியவர், அவர் பத்ம பூஷன் விருது பெற்றதை கூட திரைத்துறை முறையாகக் கொண்டாடவில்லை. எனவே இப்போது அண்ணன் சிரஞ்சீவிக்கும் துணை முதல்வராகப் பதவியேற்றுள்ள பவன் கல்யாணுக்கும் முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கும் சேர்த்து ஒரு பிரம்மாண்ட விழா நடத்தப் பவனைச் சந்தித்து அனுமதி பெற்றுத் திரும்பியுள்ளது இந்த டோலிவுட் குழு.












Click it and Unblock the Notifications