ஹேமந்த் முதல் பாபுலால் வரை! ஜார்க்கண்ட் தேர்தலில் சோரன் குடும்பத்தினர் 5 பேரின் நிலை என்ன?
ராஞ்சி: ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட சோரன் குடும்பத்தை சேர்ந்த வேட்பாளர்கள் 5 பேரில் மக்கள் 3 பேரை வெற்றி பெற வைத்திருக்கிறார்கள். மீதமுள்ள இருவர் பாஜக சார்பில் போட்டியிட்டு தோல்வியை சந்தித்துள்ளனர்.
ஹேமந்த் சோரன்: இந்த தேர்தலில் மாநில முதல்வரான ஹேமந்த் சோரன், பர்ஹைட் தொகுதியில் போட்டியிட்டார். இவர் ஜார்க்கண்ட் மாநிலத்தின் 5ஆவது முதல்வர் ஆவார். இவர் 2019- 2024, 2013- 2014 ஆகிய ஆண்டுகளில் முதல்வராக இருந்தார். இவர் துணை முதல்வராக 2010 - 2013 ஆம் ஆண்டு வரை இருந்தார்.

முன்னாள் முதல்வர் சிபு சோரனுக்கும் ரூபிக்கும் பிறந்தவர்தான் ஹேமந்த். மெக்கானிக்கல் என்ஜினியரிங் படிப்பில் சேர்ந்த ஹேமந்த் பாதியிலேயே படிப்பை விட்டுவிட்டார். நடந்து முடிந்த தேர்தலில் ஹேமந்த் சோரன் 95612 வாக்குகளை பெற்று தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் கம்லியெல் ஹெம்ப்ராமை9,791 வாக்கள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளார்.
கல்பனா சோரன்- கண்டே தொகுதியில் இவர் போட்டியிடுகிறார். இவர் ஹேமந்த் சோரனிந் மனைவி. இவரது குடும்பம் அரசியல் பின்னணியை சேர்ந்தவர் அல்ல. ஹேமந்த் சோரன் சிறைக்கு செல்லும் போதுதான் கல்பனா அரசியலுக்குள் வந்தார். இவர் ஒடிஸாவின் மயூர்பஞ்ச் மாவட்டத்தைச் சேர்ந்தவர். இவருடைய தந்தை தொழிலதிபர், தாய் இல்லத்தரசி.
21ஆவது மற்றும் கடைசி சுற்று வாக்கு எண்ணிக்கையில் கல்பனா சோரன் 119372 வாக்குகளையும் முனியா தேவி 102230 வாக்குகளையும் பெற்றுள்ளனர். கல்பனா 17142 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். நோட்டாவுக்கு 3047 பேர் வாக்களித்தனர்.
சம்பய் சோரன்- ஜார்க்கண்ட் மாநிலத்தின் முன்னாள் முதல்வரும் ஜேஎம்எம் கட்சியின் முக்கிய நிர்வாகியாக இருந்தவருமான சம்பய் சோரன், இந்த முறை பாஜக சார்பில் சேரைகெல்லா தொகுதியில் போட்டியிடுகிறார். ஹேமந்தை அமலாக்கத் துறை கைது செய்ததை அடுத்து சம்பய் சோரன் மாநிலத்தின் 7ஆவது முதல்வராக பதவியேற்றார். இவர் சேரைகெல்லா தொகுதியில் 5 முறை எம்எல்ஏவாக இருந்தவர்.
மொத்தம் 16 சுற்றுகள் முடிவில் சம்பய் சோரன் 119379 வாக்குகளை பெற்று வென்றார். அது போல் ஜேஎம்எம் கட்சியின் கணேஷ் மஹாலி 98032 வாக்குகளை பெற்று தோல்வி அடைந்தார்.
சீதா சோரன்- இவர் ஹேமந்த் சோரனின் அண்ணன் துர்கா சோரனின் மனைவியாவார்.துர்கா மறைந்தவுடன் சீதா அரசியலில் குதித்தார். கடந்த 2012 ஆம் ஆண்டு நடந்த ராஜ்யசபா தேர்தலின் போது ஆர்.கே அகர்வாலிடம் பணம் பெற்றதாக சீதா மீது குற்றச்சாட்டு எழுந்தது.
அவருடைய வீட்டில் நடத்தப்பட்ட ரெய்டில் ரூ 2000 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் 7 ஆண்டுகள் சிறையில் இருந்த இவர் ஜாமீனில் வெளியே இருக்கிறார்.
ஜம்தாரா தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட சீதா சோரன் 89590 வாக்குகளை பெற்று தோல்வி அடைந்தார். காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட இர்பான் அன்சாரி 133266 வாக்குகளை பெற்று வென்றார்.
பாபுலால் சோரன்- இவர் சம்பய் சோரனின் மகன் ஆவார். இவர் கடிசிலா தொகுதியில் போட்டியிடுகிறார். இவர் கடந்த சில ஆண்டுகளாக அந்த தொகுதியில் நலத்திட்டங்களை செய்து முடித்தவர். 20ஆவது சுற்று மற்றும் கடைசி சுற்றின் முடிவில் ஜேஎம்எம் கட்சி சார்பில் போட்டியிட்ட ராம்தாஸ் சோரன் 98356 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளார். பாஜக சார்பில் போட்டியிட்ட பாபுலால் சோரன் 75910 வாக்குகளை பெற்று தோல்வி அடைந்தார்.
சோரன் குடும்பத்தில் போட்டியிட்டவர்களில் 5 பேரில் சீதா சோரனும் பாபுலால் சோரனும் தோல்வியை தழுவியுள்ளனர்.












Click it and Unblock the Notifications