மார்ட்டின் லூதர் கிங்குக்கு இணையானவர் அண்ணல் அம்பேத்கர்!- பிரதமர் மோடி
டெல்லி: அண்ணல் அம்பேத்கரை குறிப்பிட்ட எல்லைக்குள் சுருக்கிவிடக் கூடாது. சமூக உரிமைகளுக்காகப் போராடிய மார்ட்டின் லூதர் கிங்கை இந்த உலகம் எப்படிப் பார்க்கிறதோ, அதைப் போலவே அம்பேத்கரும் கவனிக்கப்பட வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
அண்ணல் அம்பேத்கருக்கு டெல்லியில் தேசிய நினைவிடம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக, அம்பேத்கர் நினைவு சொற்பொழிவு இடம்பெற்றது. இதில் பிரதமர் மோடி பேசியதாவது:
பாஜக ஆட்சி செய்த காலங்களில் தலித்கள், பழங்குடியினருக்கான இடஒதுக்கீட்டுக்கு ஒருபோதும் எந்த ஆபத்தும் ஏற்பட்டது கிடையாது.

வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது இடஒதுக்கீடு ரத்தாகிவிடும் என்று சிலர் பிரசாரம் செய்தார்கள். அவர் இரண்டு முறை பிரதமராக இருந்தும்கூட அப்படி எதுவும் நடந்துவிடவில்லை.
மத்தியப் பிரதேசம், குஜராத், மகாராஷ்டிரம், பஞ்சாப், ஹரியாணா போன்ற மாநிலங்களில் பாஜக பல ஆண்டுகளாக ஆட்சி செய்து வருகிறது. ஆனால், அங்கெல்லாம் இடஒதுக்கீட்டுக்கு ஒரு சின்ன உராய்வு கூட ஏற்பட்டதில்லை. இருப்பினும், மலிவான அரசியல் செய்வதில் ஆர்வம் கொண்டவர்கள் பொய்களைப் பரப்பி வருகின்றனர்.
இடஒதுக்கீடு என்பது தலித்துகளின் உரிமை. நான் முன்னரே கூறியதுபோல, இன்றைக்கு அம்பேத்கரே வந்தாலும்கூட இடஒதுக்கீடு உரிமையை அவர்களிடம் இருந்து பறித்துவிட முடியாது.
மார்ட்டின் லூதர் கிங்குக்கு இணையானவர் அம்பேத்கர்
அம்பேத்கரை தலித்துகளுக்கான இறைதூதர் என்று அழைப்பது அவருக்கு இழைக்கப்படும் அநீதியாகும். விளிம்புநிலை மக்கள் அனைவரின் குரலாகவும் ஒலித்தவர் அவர்தான்.
அம்பேத்கர் ஒரு சர்வதேசத் தலைவர். அவரை நாம் குறிப்பிட்ட எல்லைகளுக்குள் சுருக்கிவிடக் கூடாது. சமூக உரிமைகளுக்காகப் போராடிய மார்ட்டின் லூதர் கிங்கை இந்த உலகம் எப்படிப் பார்க்கிறதோ, அதைப் போலவே அம்பேத்கரும் கவனிக்கப்பட வேண்டும்.
நாட்டை 60 ஆண்டுகளாக ஆட்சி செய்தவர்கள் செய்யாத ஒன்றை நாங்கள் செய்வதற்கான வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதாவது, அம்பேத்கருக்கு நினைவிடம் அமைப்பதற்காக நாங்கள் பெருமையடைகிறோம்," என்றார் மோடி.
தேசிய அளவில், அம்பேத்கர் நினைவு சொற்பொழிவு நடத்தப்படுவது இது ஆறாவது முறையாகும். இதனைக் குறிப்பிட்டுப் பேசிய மோடி, 6 முறை இந்த நிகழ்ச்சி நடைபெற்றபோதிலும் பிரதமர் ஒருவர் உரையாற்றுவது இதுவே முதல் முறையாகும் என்றார்.
தற்போது டெல்லியில் அமையவுள்ள அம்பேத்கருக்கான தேசிய நினைவிடம் 2018-ஆம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் கட்டி முடிக்கப்படும் என்றும், அவரது பிறந்த தினமான ஏப்ரல் 14-ஆம் தேதி (2018) இந்த நினைவிடம் திறக்கப்படும் என்றும் மோடி அறிவித்தார்.












Click it and Unblock the Notifications