வேண்டாத வேலையை பார்த்துவிட்ட டிரம்ப்.. இந்தியாவில் வெளிநாட்டு முதலீடு மளமளவென சரிந்தது!
டெல்லி: அமெரிக்கா தொடங்கியிருக்கும் வர்த்தக போர் காரணமாக சர்வதேச சூழலில் வணிகத்தில் நிச்சயமற்ற தன்மை உருவாகியுள்ளது. எனவே, இந்தியாவில் அந்நிய (வெளிநாட்டு) நேரடி முதலீடு 1, 090 கோடி டாலராக சரிந்திருக்கிறது.
முதலீடு குறைந்ததால் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகாமல் போகும் அபாயம் எழுந்திருக்கிறது. மட்டுமல்லாது ரூபாயின் மதிப்பும் வீழ்ச்சியடையும் என்கிற அச்சமும் எழுந்திருக்கிறது.

மத்திய தொழில் மற்றும் உள் வர்த்தக மேம்பாட்டுதுறை நேற்று இது குறித்த அறிவிப்பை வெளியிட்டிருந்தது. அதில், "2024-2025 நிதியாண்டில் மூன்றாவது காலாண்டான அக்-டிசம்பர் வரை இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட அந்நிய முதலீட்டின் மதிப்பு 1,090 கோடி டாலர்கள் ஆகும். இதே 2023-2024 அக்-டிச காலத்தில் 1,155 கோடி டாலர் என முதலீடு வந்திருந்தது. அந்த வகையில் நடப்பாண்டில் முதலீடு 5.6% குறைந்திருக்கிறது" என தெரிவித்திருக்கிறது.
ஒவ்வொரு நிதி ஆண்டையும் 4ஆக பிரித்திருப்பார்கள். அதன்படி
Q1 (முதல் காலாண்டு) ஏப்ரல் - ஜூன்: நிதியாண்டின் தொடக்க காலம்
Q2 (இரண்டாம் காலாண்டு) ஜூலை - செப்டம்பர்: பணவீக்கம் மற்றும் வளர்ச்சி கணிப்பு முக்கியம்
Q3 (மூன்றாம் காலாண்டு) அக்டோபர் - டிசம்பர்: திருவிழாக்கள் காரணமாக அதிக வர்த்தகம் நடக்கும்
Q4 (நான்காம் காலாண்டு) ஜனவரி - மார்ச்: நிதியாண்டின் கடைசி காலம் (Year-End Closure)
இப்படித்தான் காலாண்டுகள் இருக்கும். இதில் 2024-2025ம் ஆண்டின் Q3 மூன்றாம் காலாண்டில் முதலீடு குறைந்திருக்கிறது. இதுவே, Q2 இரண்டாம் காலாண்டில் முதலீடு 1,360 கோடி டாலராகவும், அதற்கு முந்தைய Q1 முதல் காலாண்டில் முதலீடு 1671 கோடி டாலராகவும் இருந்தது. இது கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் முறையே 43% மற்றும் 47.8% அதிகமாகும்.
2024-2025ம் ஆண்டில் ஏப்ரல் தொடங்கி டிசம்பர் வரை அதாவது 3 காலண்டுகளில் மொத்தம் 4,067 கோடி டாலர் அளவுக்கு முதலீடு வந்திருக்கிறது. இது முந்தைய ஆண்டை விட 27% அதிகம். 2023-2024ம் ஆண்டில் முதலீடு 3,200 கோடி டாலராக இருந்தது.
இந்த ஆண்டு எந்தெந்த நாடுகளிலிருந்து இந்தியாவில் முதலீடுகள் வந்தன என்கிற விவரம் பின்வருமாறு..
சிங்கப்பூர்: 744-1200 கோடி டாலர்
அமெரிக்கா: 283-373 கோடி டாலர்
நெதர்லாந்து: 227-400 கோடி டாலர்
ஐக்கிய அரபு அமீரகம்: 24-414 கோடி டாலர்
கேமன் தீவுகள்: 21.5 - 29.6 கோடி டாலர்
சைப்ரஸ்: 79.-118 கோடி டாலர்
துறை ரீதியாக பார்த்தால் சேவை, கணினி, மென்பொருள், ஹார்டுவேர், வர்த்தகம், தொலைத் தொடர்பு, வாகனங்கள், ரசாயனங்கள் போன்ற துறைகளில் அந்நிய நேரடி முதலீடு அதிகரித்திருக்கிறது. மகாராஷ்டிரா, குஜராத் மற்றும் கர்நாடாக ஆகிய மாநிலங்கள் அதிக முதலீடுகளை ஈர்த்திருக்கின்றன.
இருப்பினும் அந்நிய முதலீடுகள் குறைந்திருப்பது இந்தியாவுக்கு நல்லதல்ல. இதனால் வேலை வாய்ப்புகள் புதியதாக உருவாகாது. அதேபோல, இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவை சந்திக்கும். பெட்ரோல், டீசல், செல்போன், இதர எலக்ட்ரானிக் பொருட்களுக்கான விலையும் உயரும். பங்கு சந்தை சரிவடையும். புதிய தொழில்கள் வளர்ச்சி அடைய முடியாது. இதெல்லாம் சேர்ந்து பொருளாதார வளர்ச்சியை மந்தமாக்கி, GDPயை குறைத்துவிடும்.
இந்தியாவில் அந்நிய முதலீடுகள் குறைந்ததற்கு காரணம் அமெரிக்காவின் வரி கொள்கைதான். மெக்சிகோ, கனடா மற்றும் சீனாவுக்கு அமெரிக்க விதித்த கூடுதல் வரி காரணமாக, அமெரிக்காவுக்குள் முதலீடு செய்ய பலரும் ஆர்வம் காட்டுகின்றனர். எனவேதான் இந்தியாவில் முதலீடு குறைந்திருக்கிறது. டிரம்ப் பார்த்த வேலைதான் இதற்கு காரணம் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications