பெண்களை கிண்டல் செய்ததற்காக டிஸ்மிஸ் ஆன ஆபீஸ் பாய்: அலுவலகத்திற்கு தீ வைப்பு
புனே: பெண் ஊழியர்களை கிண்டல் செய்ததால் பணிநீக்கம் செய்யப்பட்ட ஆபீஸ் பாய் தான் பணிபுரிந்த பிபிஓ அலுவலகத்தில் இருந்த மேஜை, நாற்காலிகளை தீ வைத்து எரித்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள பிபிஓ நிறுவனத்தில் ஆபீஸ் பாயாக இருந்தவர் ஷேக். அவரது உறவினரான நதாப் அதே தளத்தில் இருந்த மற்றொரு அலுவலகத்தில் பணியாற்றி வந்தார். நதாப் ஷேக்கின் அலுவலகத்திற்கு வந்து நாள் முழுவதும் அவருடன் பேசிக் கொண்டிருந்தார்.

மேலும் ஷேக்கின் அலுவலகத்தில் பணியாற்றும் பெண் ஊழியர்களை அவரும், நாதபும் சேர்ந்து கிண்டல் செய்து வந்துள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை பெண் ஊழியர் ஒருவர் அவர்கள் மீது புகார் அளித்துள்ளார். இதையடுத்து நிறுவனர் சச்சின் காம்ப்ளி ஷேக்கை அழைத்து கண்டித்துள்ளார். அப்போது ஷேக் சச்சினுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதையடுத்து ஷேக் பணிநீக்கம் செய்யப்பட்டார். மறுநாள் அலுவலக ஊழியர்கள் அனைவரும் சுற்றுலா செல்ல கிளம்பினர். அப்போது ஒரு ஊழியர் மட்டும் தண்ணீர் எடுக்க அலுவலகத்திற்கு வந்தபோது நாற்காலி, மேஜைகள் எரிந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.
சிசிடிவி கேமராவில் ஷேக் ஏதோ திராவகத்தை நாற்காலி, மேஜைகள் மீது ஊற்றி தீ வைத்தது பதிவாகி இருந்தது. ஷேக் ஒரு சிசிடிவி கேமராவையும் எரித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் ஷேக் மற்றும் நதாபை கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications