சாமி அது யார்னு தெரியுதா.. நம்ம கொம்பன் வில்லன்.. சார் ஒரு செல்பி பிளீஸ்!
சபரிமலையில் போலீஸ் டியூட்டி பார்த்து வருகிறார் நடிகர் ஐ.எம்.விஜயன்.
சபரிமலை: ஐயப்பன் கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் வழியில் நின்று கொண்டிருந்த அந்த போலீஸ்காரரை பார்த்ததும் சர்ப்ரைஸ் ஆகி வருகிறார்கள். அது வேறு யாருமில்லை.. நம்ம ஐ.எம். விஜயன்தான்!!
இந்தியா நமக்கு அளித்த மிகச்சிறந்த கால்பந்து வீரர்களில் ஐ.எம். விஜயனும் ஒருவர். இப்போது இளம் தலைமுறைகளிடம் கால்பந்து என்று சொன்னாலே அவர்கள் மனதில் வரும் முகமும் விஜயனின் முகம்தான். எத்தனையோ தடைகளை தாண்டிதான் கால்பந்து உலகில் வெளியே தெரியலானார் விஜயன்.
இந்தியாவின் சர்வதேச ஆட்டத்தில் அன்று இவர் அடித்த கோல்தான் இன்றுவரை பேசப்பட்டு வருகிறது. அதாவது 12வது விநாடியில் கோல் அடித்து சாதனை படைத்தவர் ஐஎம் விஜயன். இது ஒரு அசாதாரண நிகழ்வு ஆகும்.

வில்லன் நடிகர்
இத்தனை சாகச செயல்களை புரிந்து அகில இந்திய அளவில் ஃபேமஸ் ஆனாலும் என்னவோ சினிமா ஆசை விஜயனுக்கும் தொத்திக் கொண்டது. சினிமா இவரை அழைத்து கொண்டதா அல்லது சினிமாவில் இவர் வந்து ஒட்டி கொண்டாரோ தெரியவில்லை, வில்லன் பாத்திரத்தில் பின்னி எடுக்கிறார் விஜயன்!

பொருளாதார நெருக்கடி
டக்குன்னு புரியும்படி சொல்வதானால், கொம்பன் படத்தில் கார்த்தியிடம் அடி வாங்கினாரே.. அது விஜயனேதான். திமிரு, கெத்து படங்களில் வில்லனாக நடித்து தமிழ் மக்களின் மனதில் அதிகமாகவே பரிச்சயமாகி விட்டார். சினிமாவில் நுழைந்ததற்கு விஜயனின் பொருளாதார சூழல் கூட காரணமாக இருக்கலாம். எத்தனையோ பாடுபட்ட விஜயனுக்கு கால்பந்து உலகம் பணத்தை வாரி வழங்கிடவில்லை.

போலீஸ் பணி
கடைசிவரை வசதி குறைவோடுதான் விஜயனின் கால்பந்து வாழ்க்கை அமைந்தது. அதனால்தான் ஓய்வுக்குப் பிறகு பல கால்பந்து அணிகளுக்குப் பயிற்சியாளராக பணியாற்றவும் செய்தார். சினிமா உலகம், கால்பந்து உலகம் என்று இரு வெவ்வேறு உலகில் விஜயன் பயணித்தாலும், 2012- ம் ஆண்டு கேரள அரசு இவரை மீண்டும் போலீஸ் பணியில் அமர்த்தி பயன்படுத்தி கொண்டது.

இன்ப அதிர்ச்சி
இப்போது பக்கா போலீஸ்காரராக, சபரிமலை கோயிலில் விஜயனுக்கு டியூட்டி போட்டுள்ளார்கள். சரங்குத்தி என்ற இடத்தில்தான் பாதுகாப்பு பணிக்காக விஜயன் அமர்த்தப்பட்டுள்ளார். சபரிமலை கோயிலுக்குள் போகிறோமே, என்னாகுமோ, ஏதாகுமோ என்று பலவித எண்ணங்களுடன், குழப்பங்களுடன் நுழையும் பக்தர்கள் அங்கே விஜயனை கண்டு இன்ப அதிர்ச்சி அடைகிறார்கள். நிறைய பேர் எளிதாக அடையாளம் கண்டு கொண்டு அவருடன் சேர்ந்து போட்டோவும் எடுத்து கொள்கிறார்கள்.

கடமை தவறாத போலீஸ்
என்னதான் செல்பிக்கு போஸ் கொடுத்து வந்தாலும், டியூட்டி என்று வந்துவிட்டால் பொறுப்பாக வேலையை பார்த்து வருகிறார் விஜயன். ரொம்ப கூட்டம் சேர விடாமல் அப்படியே நகர்த்தி அனுப்பி விடுகிறார். இந்திய கால்பந்தின் ஜாம்பவான், இன்னொரு பக்கம் நடிகர், இதற்கு நடுவே கடமை தவறாத போலீஸ்காரர் என அசத்தி வரும் ஐஎம் விஜயன்தான்.. இந்தாண்டு சபரிமலை பரபரப்பின் இன்னொரு முக்கிய அம்சம்.












Click it and Unblock the Notifications