கோவாவில் நம்பிக்கை வாக்கெடுப்பு.. தப்பித்த பாஜக அரசு.. பெரும்பான்மையை நிரூபித்த பிரமோத் சாவந்த்!
கோவா சட்டசபையில் இன்று பாஜக அரசுக்கான நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தப்பட உள்ளது.
பனாஜி: கோவா சட்டசபையில் இன்று மாநில பாஜக அரசுக்கான நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது. இதில் அங்கு மீண்டும் பதவி ஏற்று இருக்கும் பாஜக அரசு பெரும்பான்மையை நிரூபித்து ஆட்சியை தக்க வைத்துள்ளது.
கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் இரண்டு நாட்களுக்கு முன் உடல்நலக்குறைவால் காலமானார். கணைய புற்றுநோய் காரணமாக சிகிச்சை பெற்று வந்த அவர் காலமானார்.
இதையடுத்து கோவாவின் புதிய முதல்வராக பாஜக கட்சியை சேர்ந்த பிரமோத் சாவந்த் பதவி ஏற்று இருக்கிறார். அவருடன் சேர்ந்து இரண்டு துணை முதல்வர்களும் நேற்று பதவி ஏற்றுக்கொண்டனர். பிரமோத் சாவந்த் தற்போது பெரும்பான்மையை நிரூபித்துள்ளார்.

யார் ஆதரவு
சுயேட்சைகள் மற்றும் சிறிய கட்சிகளின் ஆதரவுடன் பிரமோத் சாவந்த் பதவி ஏற்று இருக்கிறார். கோவாவில் பாஜகவிற்கு இரண்டு கட்சிகள் ஆதரவு அளித்துள்ளது. மஹாராஷ்டிரவாடி கோமன்டாக் கட்சி, கோவா பார்வேர்ட் கட்சி, சுயேட்சைகள் ஆதரவுடன் பாஜக ஆட்சி அமைத்துள்ளது.

நம்பிக்கை வாக்கெடுப்பு
கோவா துணை முதல்வராக கோவா பார்வேர்ட் கட்சியை சேர்ந்த விஜய் சர்தேசி மற்றும் மஹாராஷ்டிரவாடி கோமன்டேக் கட்சியை சேர்ந்த சுதீன் தவலிகர் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று கோவாவில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது. மீண்டும் அமைந்து இருக்கும் பாஜக ஆட்சி அங்கு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டியதால் நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது.

எத்தனை இடங்கள்
கோவாவில் மொத்தம் 40 சட்டசபை இடங்கள் உள்ளது. பாஜகவிடம் 12 இடங்கள் உள்ளது. காங்கிரஸ் கட்சி 14 இடங்களை கொண்டுள்ளது. கோவா மாநில கட்சிகளான மஹாராஷ்டிரவாடி கோமன்டாக் கட்சி 3 இடங்களையும், கோவா பார்வேர்ட் கட்சி 3 இடங்களையும், சுயேட்சைகள் மூன்று இடங்களை கொண்டு இருக்கிறார்கள். அதில் மனோகர் பாரிக்கரின் மறைவை அடுத்து மொத்தமாக 4 இடங்கள் காலியாக உள்ளது. இதனால் மீதமுள்ள 36 இடங்களில் பெரும்பான்மை பெற 19 இடங்கள் தேவை.

வெற்றி பெற்றது
20 எம்எல்ஏக்கள் பாஜக ஆட்சிக்கு ஆதரவாக கோவா சட்டசபையில் வாக்களித்தனர். இதனால் பாஜக ஆட்சியை தக்க வைத்து இருக்கிறது. 19 பேர் ஆதரவு இருந்தால் போதும் என்ற நிலையில் 20 பேரின் ஆதரவுடன் பாஜக அங்கு ஆட்சியை தக்க வைத்து இருக்கிறது.












Click it and Unblock the Notifications