குஜராத் காவல்துறையில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு- முதல்வர் அறிவிப்பு
காந்திநகர்: காவல் துறையில், பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கப்படும் என்று குஜராத் முதல்வர் ஆனந்தி பட்டேல் தெரிவித்துள்ளார்.
குஜராத் முதல்வராக பதவி வகித்த நரேந்திரமோடி, பிரதமராக பதவியேற்றதை தொடர்ந்து அமைச்சரவையில் மூத்த உறுப்பினராக ஆனந்தி பட்டேல் அம்மாநிலத்தின் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார். குஜராத்தின் முதல், பெண் முதலமைச்சர் என்ற பெருமையை பெற்ற ஆனந்தி பட்டேல், மகளிருக்கு ஆதரவான ஒரு அறிவிப்பை இன்று வெளியிட்டார்.
செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், சமூகத்தில் பெண்களை பலம்பெற செய்வது முக்கியமானதாகும். எனவே எனது அரசு பெண்களுக்கு காவல் துறையில் 33 சதவீத இட ஒதுக்கீட்டை அளிக்க முடிவு செய்துள்ளது. காவல் துறை பணியாளர் தேர்வின்போது இந்த புதிய நடைமுறை அமலுக்கு வரும் என்றார்.
முன்னதாக, ஆயுதப்படை போலீசாரின் பயிற்சி நிறைவு காலத்தையொட்டி நடந்த நிகழ்ச்சியில் பேசிய ஆனந்தி பட்டேல், "அமைதியும், மத நல்லிணக்கமும் நாட்டின் வளர்ச்சிக்கு அடிப்படையாகும். கடந்த பத்தாண்டுகளில் குஜராத் மாநிலம் எந்த ஒரு பெரிய மத கலவரத்தையும் பார்த்தது கிடையாது.
இதன்காரணமாகவே மாநிலத்தின் வளர்ச்சியும் துரிதகதியில் சென்றுகொண்டுள்ளது. இந்தியாவிலேயே மிகவும் பாதுகாப்பான மாநிலம் குஜராத். இங்குதான் குற்றங்கள் எண்ணிக்கை குறைவாக உள்ளது. அருமையான சூழ்நிலையை உருவாக்கியுள்ளதற்காக நான் மாநில காவல்துறைக்கு பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
நாட்டிலேயே பட்டதாரிகளை அதிகம் கொண்ட அறிவுசார்ந்த காவல்துறை குஜராத்தில்தான் உள்ளது. இம்மாநிலத்தின் 26 ஆயிரம் போலீசார் பட்டதாரிகளாகும். நமது பிரதமர் நரேந்திரமோடி, குஜராத்தை பாதுகாப்பான மாநிலமாக மாற்றிக்காண்பித்துள்ளார்" என்றார்.












Click it and Unblock the Notifications