இஸ்லாமியர்களை அழிக்க வேண்டும்.. ஹரித்வாரில் இந்து சாமியார்கள் எடுத்த உறுதிமொழி.. போலீஸ் எப்ஐஆர்!
ஹரித்வார்: உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் இந்து அமைப்புகள், வலதுசாரி அமைப்புகள் சேர்ந்து நடத்திய மத கூட்டம் ஒன்று பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்த கூட்டத்திற்கு எதிராக தற்போது ஹரித்வார் போலீசார் எப்ஐஆர் பதிவு செய்துள்ளனர்.
உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் "தர்ம பாராளுமன்றம்" என்று பொருள் கொள்ளும் வகையில் 'Dharma Sansad' என்ற கூட்டம் நடத்தப்பட்டது. கடந்த டிசம்பர் 17-19 தேதிகளில் இந்த கூட்டம் பல்வேறு இந்து அமைப்புகள், இந்துத்துவாவாதிகள், வலதுசாரிகள் மூலம் நடத்தப்பட்டது.
சர்ச்சைக்குரிய இந்து மத தலைவரான யாதி நரசிங்கநாத் சரஸ்வதி சார்பாக இந்த கூட்டம் ஒருங்கிணைக்கப்பட்டது. இந்து ரக்சா சேனா அமைப்பின் தலைவர் பிரபோதானந்த் கிரி, பாஜக தலைவர்கள் அஸ்வினி உபாத்யாய், உதிதா தியாகி ஆகியோர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

சர்ச்சை பேச்சு
இதில் பேசிய இந்து தலைவர்கள், இந்து மதம் அழிகிறது. அண்டை நாடுகளில் இந்துக்கள் விரட்டப்படுகிறார்கள். நம்முடைய நாட்டிலும் இந்துக்களுக்கு இதே நிலைதான். நாம் இப்போதே ஆயுதம் தூக்க வேண்டும். நாம்தான் தாக்க வேண்டும். கொல்ல வேண்டும். இல்லையென்றால் நாம் கொல்லப்படுவோம் என்று பேசினார்கள். இஸ்லாமியர்களுக்கு எதிராக மிக கடுமையான கருத்துக்கள் இதில் வைக்கப்பட்டது.

போர் தொடுப்பு
இஸ்லாமியர்களுக்கு எதிராக போர் தொடுக்க வேண்டும் என்று இந்த கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட உறுதிமொழி முழக்கம் வைக்கப்பட்டது. 20 லட்சம் பேரை (இஸ்லாமியரை) கொல்லக்கூடிய அளவிற்கு திறமைப்படைத்த 100 பேர் நமக்கு வேண்டும். நீங்கள் எல்லோரும் உங்களை தயார் செய்து கொள்ள வேண்டும், என்று இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு இந்து தலைவர்கள் பேசி உள்ளாதாக வீடியோ வெளியாகி உள்ளது.

நடவடிக்கை
இந்த நிலையில் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடந்த 2-3 நாட்களாக இணையத்தில் பலர் கோரிக்கை விடுத்து வந்தனர். திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பாக சாகேத் கோக்லே என்பவரும் இது தொடர்பாக புகார் அளித்து இருந்தார். பல முன்னாள் ராணுவ வீரர்கள், மேஜர், பத்திரிகையாளர்கள் இது தொடர்பாக கண்டன ட்விட்களை செய்து வந்தனர்.

எப்ஐஆர்
இந்த நிலையில் போலீசார் எப்ஐஆர் பதிவு செய்துள்ளனர். கூட்டத்தில் பல இந்து தலைவர்கள் கலந்து கொண்டாலும் ஒரே ஒருவர் பெயர் மட்டுமே எப்ஐஆரில் இடம்பெற்றுள்ளது. அவரும் கூட கடந்த மாதம் இஸ்லாமில் இருந்து இந்து மதத்திற்கு மாறியவர். ஜிதேந்திர நாராயண் என்னும் வாசிம் ரிஸ்வி பெயர் மட்டும் எப்ஐஆரில் இடம்பெற்றுள்ளது.

வழக்கு
இவர் முன்னாள் ஷியா வகுப்பு போர்ட் தலைவர். பின்னர் இந்துவாக மதம் மாறிவிட்டார். இவரை தவிர கூட்டத்தில் கலந்து கொண்ட மற்ற இந்து தலைவர்கள் மீது வழக்கு எதுவும் பதியப்படவில்லை. இதில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications