பாகிஸ்தான் தீவிரவாதிகளிடம் M4 அமெரிக்க துப்பாக்கிகள் போனது எப்படி! பஹல்காம் தாக்குதல் பகீர் பின்னணி
டெல்லி: காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகளைத் தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றனர். இந்தத் தாக்குதல் குறித்து விசாரணை நடந்து வரும் நிலையில், தீவிரவாதிகள் வசம் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட நவீன M4 துப்பாக்கிகள் இருந்தது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் துப்பாக்கிகள் பாகிஸ்தான் தீவிரவாதிகள் வசம் சென்றது எப்படி? இதன் பின்னணி என்ன என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
பஹல்காம் தாக்குதல் ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கியுள்ளது. இதற்குப் பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். மேலும், பாகிஸ்தானுக்குப் பதிலடி தர வேண்டும் என்ற குரல்களும் அதிகரித்துள்ளன. இதற்கிடையே பஹல்காம் தாக்குதல் குறித்த முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ள தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக உள்ளது.

துப்பாக்கிகள்
அதாவது வழக்கமாகத் தீவிரவாதிகளிடம் ஏகே 47 துப்பாக்கி தான் இருக்கும். அது விலை குறைவானது.. மேலும் கள்ளச்சந்தையில் எளிதாகக் கிடைக்கும். ஆனால், இந்த முறை தீவிரவாதிகளிடம் AK-47 துப்பாக்கிகள் மட்டுமின்றி, அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட M4 துப்பாக்கிகளும் இருந்துள்ளன. மேலும், உடலில் அணியும் பாடி கேமரா, ஒயர்லெஸ் கம்யூனிகேஷன் சாதனம் எனப் பல அதிநவீனச் சாதனங்களையும் வைத்திருக்கிறார்கள்.
தாக்குதல் நடத்தப்பட்ட பைசரன் புல்வெளியில் பாதுகாப்புப் படையினர் சோதனை நடத்தினர். அதில் தீவிரவாதிகள் 50- 70 தோட்டாக்கள் பயன்படுத்தியது தெரிய வந்துள்ளது. மேலும், தீவிரவாதிகள் AK-47 கள் மற்றும் M4 என இரண்டு வகையான துப்பாக்கிகளையும் பயன்படுத்தியுள்ளது உறுதி செய்யப்பட்டது. இதுவே பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
அமெரிக்கத் துப்பாக்கி
M4 என்பது அமெரிக்காவில் உற்பத்தி செய்யும் துப்பாக்கி. அதை வைத்து மிக விரைவாக இலக்கை சுட்டுத் தள்ளலாம். இப்படிக் குறுகிய நேரத்தில் அதிகப் பேரைச் சுட முடியும் என்பதால் இது ஆபத்தான துப்பாக்கியாகக் கருதப்படுகிறது. அமெரிக்கா தனது ராணுவத்திற்கு இந்த வகைத் துப்பாக்கிகளையே பரவலாகப் பயன்படுத்தும். இலகுரக துப்பாக்கியான இதைக் கொண்டு ஈஸியாக துப்பாக்கிச் சூட்டை நடத்தலாம்..
நிமிடத்திற்கு அதிகபட்சம் 700 முதல் 900 குண்டுகளைச் சுட்டுத் தள்ளும் திறன் கொண்டது. மேலும், இதில் இருந்து பாயும் தோட்டாவால் சுமார் 600 மீட்டர் தொலைவில் இருக்கும் இலக்கை கூட காலி செய்ய முடியும். 21ம் நூற்றாண்டின் மிகவும் அதிநவீனத் துப்பாக்கிகளில் ஒன்றாகக் கருதப்படும் இது காஷ்மீருக்குள், அதுவும் தீவிரவாதிகள் கைகளுக்குப் போய் இருப்பது ஆபத்தான போக்கைக் காட்டுகிறது.

அமெரிக்கத் துப்பாக்கி தீவிரவாதிகளிடம் போனது எப்படி
இப்போது அனைவருக்கும் இருக்கும் முக்கியமான கேள்வி ஒன்றுதான்.. அதாவது அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்பட்ட துப்பாக்கிகள் பாகிஸ்தான் தீவிரவாதிகள் வசம் சென்றது எப்படி.. கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் இதற்கான விடை நமக்குத் தெரியும். ஆப்கான் தான் இதற்குக் காரணம். ஆப்கானிஸ்தானால் தான் இந்த ஆயுதங்கள் தீவிரவாதிகள் வசம் சென்றுள்ளது.
உளவுத்துறை அமைப்புகளும் கூட இதே கருத்துகளைத் தான் கூறுகின்றன. அதாவது ஆப்கானிஸ்தானில் பல காலமாக அமெரிக்கப் படைகள் இருந்தது. ஆனால், கடந்த 2021ல் திடீரென ஆப்கானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறின. இதனால் அப்போதிருந்த அரசு கவிழ்ந்தது. சில வாரங்களில் ஒட்டுமொத்த ஆப்கானிஸ்தானையும் தாலிபான்கள் தங்கள் வசம் கொண்டு வந்தனர்.
காரணம் ஆப்கானிஸ்தான்
அப்போது அவர்கள் மிகப் பெரிய ஆயுதக் கிடங்கையும் கைப்பற்றியதாகக் கூறப்படுகிறது. அதில் அமெரிக்க நிதியுதவி உடன் வாங்கப்பட்ட M4 மற்றும் M16 உள்ளிட்ட பல லட்சம் துப்பாக்கிகள் உட்பட அதிநவீன ராணுவ உபகரணங்கள் இருந்துள்ளன. தாலிபான் வேகமாக முன்னேறி வந்ததால், இந்த ஆயுதங்களைக் கைவிட்டுவிட்டு ஆப்கானிஸ்தான் வீரர்கள் ஓடிவிட்டதாகக் கூறப்படுகிறது. சுமார் 2.50 லட்சத்திற்கும் மேற்பட்ட துப்பாக்கிகள், சுமார் 18,000 நைட் விஷன் கிளாஸ்கள் உட்பட 7 பில்லியன் டாலர் மதிப்புள்ள உபகரணங்கள் ஆப்கானிஸ்தானில் இருந்ததாக ஆப்கானிஸ்தான் மறுசீரமைப்புக்கான சிறப்பு இன்ஸ்பெக்டர் ஜெனரல் தெரிவித்திருந்தார்.
ஐநா ரிப்போர்ட்
இந்த ஆயுதங்களில் ஒரு பகுதியைத் தாலிபான்கள் தங்கள் வசம் வைத்துக் கொண்டனர். அதேநேரம் கணிசமான பகுதியை அவர்கள் விற்றுவிட்டதாகவே ஐநா ரிப்போர்ட் கூறுகிறது. ஐ.எஸ்.ஐ ஆதரவுடன் இயங்கும் லஷ்கர்-இ-தைபா போன்ற பயங்கரவாதக் குழுக்களுக்கு இந்த ஆயுதங்கள் விற்கப்பட்டு இருக்கலாம். இதன் மூலமே அமெரிக்க ஆயுதங்கள் பாகிஸ்தான் தீவிரவாதிகளின் கைகளுக்குச் சென்றுள்ளன.

காஷ்மீரில் அமெரிக்க ஆயுதங்கள்
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத சம்பவங்களில் M4 துப்பாக்கிகளைப் பயன்படுத்துவது இது முதல்முறை இல்லை. கடந்த 2017, 2018ம் ஆண்டுகளிலும் M4 துப்பாக்கிகளைத் தீவிரவாதிகளிடம் கைப்பற்றப்பட்ட போதிலும், 2022க்கு பிறகே இந்தச் சம்பவம் அதிகரித்துள்ளன.
- 2022: ஜெய்ஷ் கமாண்டர் கைசர் கோகாவுடன் நடந்த துப்பாக்கிச் சண்டைக்குப் பிறகு அங்கு M4 கண்டுபிடிக்கப்பட்டது.
- 2023: பூஞ்ச் தாக்குதலுக்குப் பிறகு நான்கு பாதுகாப்பு வீரர்கள் கொல்லப்பட்ட நிலையில், தீவிரவாத அமைப்பு தனது சமூக வலைத்தளத்தில் "தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட M4 துப்பாகி" என்று அந்த படங்களை வெளியிட்டது.
- 2024ம் ஆண்டில் இதுவரை ஜூன் 9: ரியாசி தாக்குதலில் M4 பயன்படுத்தப்பட்டது.. அதில் ஒன்பது சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர்.
- ஜூன் 26: சிறு துப்பாக்கிச் சூடு நடந்தது. அதன் பிறகு தோடா பகுதியில் M4 மீட்கப்பட்டது.
- ஜூலை 8: கதுவாவில் மீண்டும் தீவிரவாதி பயன்படுத்திய M4 துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்டது.
வல்லுநர்கள் எச்சரிக்கை
காஷ்மீர் பயங்கரவாதத் தாக்குதல்களில் மீண்டும் மீண்டும் அமெரிக்க ஆயுதங்களைப் பயன்படுத்துவது தேசியப் பாதுகாப்பை அச்சுறுத்துவதாக இருக்கிறது. இந்தப் பகுதியில் ஆயுதங்கள் இதுபோல ஈஸியாக கிடைக்கும் வரை எல்லை தாண்டிய பயங்கரவாதம் தொடரவே செய்யும் என வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். மேலும், M4 போன்ற உயர்தர ராணுவ கருவிகள் பயங்கரவாதிகள் வசம் செல்வது அங்கு நிலைமையை மேலும் மோசமாகவே மாற்றும்.
அதேநேரம் இது தொடர்பாகத் தாலிபான் எந்தவொரு கருத்தையும் தெரிவிக்கவில்லை. அதாவது அமெரிக்க ஆயுதங்களை என்ன செய்தார்கள் என்பது குறித்து அவர்கள் இதுவரை எதுவும் சொல்லவில்லை. இருப்பினும், ஐநா அமைப்பு அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளது போலப் பயங்கரவாதிகளுக்கு விற்பனை செய்திருக்கவே வாய்ப்புகள் அதிகம்.

பஹல்காம் தாக்குதல்
மறுபுறம் பஹல்காம் தாக்குதலுக்குப் பல்வேறு உலக நாடுகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளும் இந்தியாவுக்கு ஆதரவாகக் கருத்து தெரிவித்துள்ளன. இந்த விவகாரத்தில் விசா ரத்து, சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்துவது என பாகிஸ்தான் மீது இந்தியா கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. விரைவில் இதற்குத் தக்க பதிலடியும் கொடுக்கும் என்றே தெரிகிறது.












Click it and Unblock the Notifications