பயங்கரவாதியையே ஏமாற்றிய பேராசிரியர்.. காஷ்மீரில் குடும்பத்துடன் தப்பியது எப்படி? சுவாரசிய பின்னணி
ஜம்மு காஷ்மீர்: ஜம்மு காஷ்மீரில் நேற்று முன்தினம் 4 பயங்கரவாதிகள் கண்மூடித்தனமாக சுற்றுலா பயணிகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 26 பேர் பலியாகினர். 12 பேர் காயமடைந்தனர். மேலும் பலரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். அதில் கல்லூரி பேராசிரியர் ஒருவர் பயங்கரவாதியையே ஏமாற்றி குடும்பத்துடன் உயிர் தப்பிய தகவல் வெளியாகி உள்ளது.
ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் என்ற சுற்றுலா தலம் மிகவும் பிரசித்தி பெற்றது. இது ஒரு புல் மேடு பகுதியாகும். பஹல்காமில் பைசரன் புல்வெளி என்பது ‛மினி ஸ்விட்சர்லாந்து' என்று அழைக்கப்படுகிறது. இங்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம்.

அந்த வகையில் நேற்று முன்தினம் சுற்றுலா பயணிகள் குவிந்திருந்தனர். அப்போது அங்கு நுழைந்த 4 பயங்கரவாதிகள் திடீரென்று துப்பாக்கியால் சுட்டு சுற்றுலா பயணிகளை கொன்றனர்.
மொத்தம் 26 பேர் பலியாகினர். தமிழகத்தை சேர்ந்தவர்கள் உள்பட 12 பேர் காயமடைந்துள்ளனர். இன்னும் பலர் பயங்கரவாதிகளை பார்த்ததுமே ஓட்டம் பிடித்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். உயிர் தப்பியவர்கள் அங்கு நடந்த சம்பவம் மற்றும் உயிர் தப்பியது எப்படி? என்பது பற்றிய பரபரப்பு தகவல்களை பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் தான் அசாம் மாநிலத்தை சேர்ந்த கல்லூரி பேராசிரியர் தனது குடும்பத்துடன் எப்படி தப்பித்தார்? என்பது பற்றிய சுவாரசிய தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் தேபாஷிஷ் பட்டாசாரியா. இவர் அசாம் பல்கலைக்கழகத்தில் பெங்காலி துறையில் அசோசியேட் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் தனது மனைவி மற்றும் மகனுடன் காஷ்மீருக்கு சுற்றுலா சென்றார். புல்மேட்டில் தேபாஷிஷ் பட்டாசாரியா தனது குடும்பத்துடன் மரத்துக்கு அடியில் படுத்து கிடந்தார். அப்போது தான் பயங்கரவாதிகள் என்ட்ரி கொடுத்தனர். பயங்கரவாதிகள் பொதுமக்களை பிடித்து ‛கல்மா' சொல்லும்படி கட்டாயப்படுத்தினர்.
பொதுமக்கள் பலரும் ‛கல்மா' உச்சரித்தனர். இந்த சத்தம் கேட்டதும் தேபாஷிஷ் பட்டாசாரியா மற்றும் குடும்பத்தினரும் ‛கல்மா'வை உச்சரித்தனர். சரியாக சொல்லாத நபர்களை பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டு கொன்றனர். ராணுவத்தினர் போல் உடை அணிந்திருந்த ஒரு பயங்கரவாதி தேபாஷிஷ் பட்டாசாரியா அருகே நின்ற ஒருவரை துப்பாக்கியால் சுட்டு கொன்றார். இதனால் தேபாஷிஷ் பட்டாசாரியா அதிர்ச்சியடைந்தார். பயங்கரவாதியின் அடுத்த டார்க்கெட் நான் தான் என்றும் அவர் நினைத்து பதற்றமானார். ஆனால் அவர் அதனை வெளிக்காட்டவில்லை. தொடர்ந்து ‛கல்மா' உச்சரித்தார்.
அப்போது அவர் நினைத்தது போலவே தேபாஷிஷ் பட்டாசாரியா நோக்கி பயங்கரவாதியின் பார்வை சென்றது. இதயம் வேகமாக துடிக்க தொடங்கியது தேபாஷிஷ் பட்டாசாரியா. பயங்கரவாதி அவரை நோக்கி ‛‛என்ன செய்து கொண்டிருக்கிறாய்?'' என்று கேள்வி கேட்டார். ஆனால் மரண பயத்தை உணர்ந்த தேபாஷிஷ் பட்டாசாரியா அந்த கேள்விக்கு பதிலளிக்கவில்லை.
மாறாக ‛கல்மா'வை இன்னும் சத்தமாக உச்சரித்தார். இதையடுத்து பயங்கரவாதி அவரையும், அவரது குடும்பத்தையும் சுடவில்லை. அங்கிருந்து நடந்து சென்றார். இதை சாதகமாக பயன்படுத்தி கொண்ட தேபாஷிஷ் பட்டாசாரியா தனது மனைவி, மகனுடன் அங்கிருந்து எஸ்கேப் ஆனார். இந்த சம்பவத்தை அவர் தனது குடும்பத்தினரை தொடர்பு கொண்டு கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications