அசாமில் களம் காங்கிரசுக்கு சாதகம்! ஆனாலும் பாஜக கையில் உள்ள பிரம்மாஸ்திரம்! புதிய சர்வே முடிவுகள்
திஸ்பூர்: விரைவில் லோக்சபா தேர்தல் நடைபெறும் நிலையில், அதில் அசாம் மாநிலத்தில் எந்தக் கட்சி எத்தனை இடங்களில் வெல்லும் என்பது குறித்து லோக்போல் அமைப்பு சர்வே ஒன்றை வெளியிட்டுள்ளது.
நமது நாட்டில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி மொத்தம் ஏழு கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

லோக்போல் சர்வே: இதற்கிடையே அசாம் மாநிலத்தில் நடக்கும் லோக்சபா தேர்தலில் எந்தக் கட்சி வெல்ல வாய்ப்பு அதிகம் இருக்கிறது என்பது குறித்து லோக்போல் அமைப்பு புதிய சர்வே முடிவை வெளியிட்டுள்ளது. அசாம் மாநிலத்தில் மொத்தம் 14 லோக்சபா தொகுதிகள் இருக்கும் நிலையில், அங்கே பாஜக கூட்டணி சின்ன சரிவைச் சந்திக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. அங்கு பாஜகவால் 7 முதல் 8 இடங்களில் வெல்ல வாய்ப்பு உள்ளதாக லோக்போல் சர்வே கூறியிருக்கிறது.
அதேபோல காங்கிரஸ் கட்சி 4 முதல் 5 இடங்களில் வெல்ல வாய்ப்பு உள்ளதாக அந்த சர்வேயில் கூறப்பட்டுள்ளது. இதர கட்சிகள் அங்கு 0 முதல் 2 இடங்களில் மட்டுமே வெல்ல வாய்ப்பு உள்ளதாக அந்த சர்வேயில் கூறப்பட்டுள்ளது.
காரணங்கள்: அசாமில் கடந்த தேர்தலுடன் ஒப்பிடும் போதும் மாநிலம் முழுவதும் பாஜக செல்வாக்கு குறைந்துள்ளது.. இதன் காரணமாகக் கடந்த தேர்தலில் பெற்ற அளவுக்கு சீட்களையும் பெற முடியாது.. அதே அளவுக்கு வாக்கு சதவிகிதத்தையும் பெற முடியாது எனக் கூறப்பட்டுள்ளது. மோடி பேக்டரையும் தாண்டி பாஜகவின் சிட்டிங் எம்பிக்கள் மீது அங்கு அதிருப்தி அதிகமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
அங்குள்ள பிராந்திய கட்சிகளுடன் கூட்டணி அமைத்துள்ளது காங்கிரசுக்கு மிகப் பெரியளவில் உதவுகிறது. சிஏஏ எதிர்ப்பு காரணமாக மேல் அசாமில் காங்கிரஸ் கூட்டணியின் செல்வாக்கு அதிகரித்துள்ளது. மேலும், அஹோம், முஸ்லீம் மற்றும் பழங்குடியினர் எனப் பல தரப்பினருக்கும் போட்டியிட வாய்ப்பு அளித்துள்ளதால் அதுவும் காங்கிரஸ் கட்சிக்குச் சாதகமாக மாறும். பெங்காலி இந்துக்கள் மற்றும் கோச் ராஜ்போங்ஷி ஆகியோரும் பாஜக மீது அதிருப்தியில் உள்ளனர்.
காங்கிரஸ் சாதகம்" ஆக மொத்தத்தில் அங்கே களம் காங்கிரஸ் கட்சிக்குச் சாதகமாக இருக்கிறது. ஆனால், தேர்தல் நெருங்க நெருங்க பாஜக எந்தளவுக்குத் தீவிர பிரச்சாரத்தைக் கையில் எடுக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். அதைக் காங்கிரஸ் சமாளிக்க வேண்டும். அப்போது தான் இப்போது இருக்கும் சாதகமான சூழலைக் காங்கிரசால் தக்க வைத்துக் கொள்ள முடியும். இல்லையென்றால் பெரிய சிக்கல் தான்.
கடந்த தேர்தல்: கடந்த 2019 லோக்சபா தேர்தலில் அசாம் மாநிலத்தைப் பொறுத்தவரை அங்குள்ள 14 இடங்களில் பாஜக 9ஐ கைப்பற்றியது. மறுபுறம் காங்கிரஸ் கட்சி 3 இடங்களில் வென்றது. அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி ஒரு இடத்திலும் சுயேச்சை ஒரு இடத்திலும் வென்றது.
இந்த தேர்தலைப் பொறுத்தவரை அசாம் மாநிலத்தில் மொத்தம் 3 கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடக்கிறது. ஏப்ரல் 19ஆம் தேதி 5 தொகுதிகளிலும், ஏப்ரல் 26ல் 5 தொகுதிகளிலும் மே 7ஆம் தேதி மீதமிருக்கும் 4 தொகுதிகளிலும் லோக்சபா தேர்தல் நடைபெறுகிறது.












Click it and Unblock the Notifications