குஜராத்தில பேசாதீங்க.. நான் கன்னடத்தில் பேசுனா புரியுமா?.. ஹைகோர்ட்டில் விளாசிய நீதிபதி.. சரமாரி
அகமதாபாத்: குஜராத் உயர் நீதிமன்றத்தில் நீதிபதி ஒருவர் திடீரென கன்னட மொழியில் கோபமாக பேசிய சம்பவம் இணையம் முழுக்க வைரலாகி வருகிறது.
குஜராத் உயர் நீதிமன்றத்தில் நேற்று கோர்ட் அவமதிப்பு வழக்கு ஒன்று நடைபெற்றது. தீர்ப்பு ஒன்றை பற்றி அவதூறு செய்தது தொடர்பாக குஜராத் உயர்நீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்கு பதிவு செய்து இந்த வழக்கை விசாரித்தது. குஜராத்தின் பிரபல சாம்னா பிராஸ்டாச்சர் கா என்ற செய்தி நிறுவனத்திற்கு எதிராக இந்த வழக்கு விசாரணை நடத்தப்பட்டது.
குஜராத் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அரவிந்த் குமார் மற்றும் நீதிபதி அஸ்தோஷ் ஜே சாஸ்திரி ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்து வந்தது.

குஜராத் வழக்கு
அந்த செய்தி நிறுவனம் சார்பாக கோர்ட் அவமதிப்பு வழக்கில் பத்திரிகையாளர் ஒருவர் ஆஜராகி இருந்தார். அந்த செய்தி நிறுவனத்தின் மூத்த எடிட்டர் இவர் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் வழக்கு விசாரணையில் தான் குஜராத்தியில்தான் பேசுவேன்.. ஆங்கிலத்தில் பேச மாட்டேன் என்று அந்த குஜராத்தி பத்திரிக்கையாளர் குறிப்பிட்டார். ஆங்கிலத்தில் பேச முடியாது, குஜராத்தியில்தான் பேசுவேன் என்று பத்திரிக்கையாளர் நீதிமன்றத்தில் குறிப்பிட்டதோடு.. பதில் மனுவையும் குஜராத்தியில்தான் தாக்கல் செய்து இருந்தார்.

குஜராத் கன்னடா
அதோடு அவர் ஆங்கிலத்தில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு குஜராத்தியில் பதில் அளித்தார். இதை பார்த்து கோபம் அடைந்த குஜராத் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அரவிந்த் குமார் (கர்நாடகாவை சேர்ந்தவர்)... நீங்கள் குஜராத்தியில் பேசினால் எங்களுக்கு எப்படி புரியும்.. நான் கன்னடாவில் பேசினால் உங்களுக்கு புரியுமா என்று கேட்டார். அதோடு நிற்காமல் வேகமாக கன்னடாவில் பேசி அந்த குஜராத்தி பத்திரிகையாளரை திணறடித்தார்.

நீதிமன்றம் ஆங்கிலம்
பின்னர் ஆங்கிலத்தில் பேசிய குஜராத் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அரவிந்த் குமார், இது உயர் நீதிமன்றம்.. மாவட்ட நீதிமன்றம் கிடையாது. மாவட்ட நீதிமன்றத்தில் மட்டுமே உள்ளூர் மொழிக்கு அனுமதி. இங்கு நீங்கள் ஆங்கிலத்தில்தான் பேச வேண்டும். Article 348 விதிப்படி உயர்நீதிமன்ற வாதம் ஆங்கிலத்தில்தான் வைக்கப்பட வேண்டும். அதோடு கோர்ட்டுக்கு அளிக்கப்பட்ட பதில் மனுவும் ஆங்கிலத்தில்தான் இருக்க வேண்டும்.

பதிலை ஏற்க முடியாது
இதனால் இந்த வழக்கில் செய்தி நிறுவனத்தின் பதிலை ஏற்றுக்கொள்ள முடியாது. அவர்கள் ஆங்கிலத்தில்தான் பதிலை தாக்கல் செய்திருக்க வேண்டும். கோர்ட்டுக்கு புரியும் மொழியில்தான் பேச வேண்டும். உங்களுக்கு நீண்ட நேரம் கொடுக்க முடியாது. உடனே கோர்ட் அவமதிப்பு வழக்கில் உங்கள் பதிலை ஆங்கிலத்தில் சமர்ப்பியுங்கள் என்று கூறினார். இதையடுத்து ஆங்கிலத்தில் பதில் தாக்கல் செய்ய அந்த பத்திரிக்கையாளர் மேலும் ஒரு நாள் நேரம் கேட்டதால் வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications