“மார்க் ஷீட் தரமாட்டீங்களா?” கோபத்தில் மாணவன் செய்த காரியம்.. அலறிய கல்லூரி முதல்வர்.. பயங்கரம்
மார்க் ஷீட் தராத காரணத்தினால், கல்லூரி முதல்வரை உயிருடன் எரித்து கொன்றுள்ளார் 24 வயது மாணவர்
போபால்: மத்தியப் பிரதேசத்தின் இந்தூர் மாவட்டத்தில் உள்ள தனியார் மருந்தியல் கல்லூரியின் முதல்வர் டாக்டர் விமுக்தா சர்மா(54) முன்னாள் மாணவர் ஒருவரால் தீ வைத்து உயிருடன் எரிக்கப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.
இந்தூரில் பிஎம் மருந்தியல் கல்லூரி ஒன்று இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் அசுதோஷ் ஸ்ரீவத்சவா(24) எனும் மாணவர் ஒருவர் பயின்று வந்திருந்தார். அவர் கடந்த 2022ம் ஆண்டு BPharm தேர்ச்சி பெற்றுள்ளார். ஆனால் இவருக்கு நீண்ட நாட்களாக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படவில்லையென்று சொல்லப்படுகிறது. இது தொடர்பாக மாணவர் கல்லூரி நிர்வாகத்திடம் கேட்டதற்கு 'பிரின்சிபல்தான் எல்லா முடிவையும் எடுப்பார். எனவே அவரிடம் கேட்டுக்கொள்ளுங்கள்' என்று ஊழியர்கள் கூறியுள்ளனர்.
கல்லூரி முதல்வர் விமுக்தா சர்மாவிடம் சான்றிதழை மாணவர் கேட்டிருக்கிறார். ஆனால் மாணவர் மீது சில புகார்கள் இருந்த நிலையில், சான்றிதழ் கொடுக்கப்படாமல் இழுத்தடிக்கப்பட்டிருக்கிறது. எனவே மாணவருக்கும், கல்லூரி முதல்வருக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வந்துள்ளது. இதற்கிடையில் மாணவர் ஸ்ரீவத்சவா கல்லூரி முதல்வருக்கு கொலை மிரட்டல் விடுத்திருக்கிறார்.

தீ வைத்து எரிப்பு
இந்நிலையில் கடந்த 20ம் தேதி மீண்டும் கல்லூரிக்கு வந்து மதிப்பெண் சான்றிதழை ஸ்ரீவத்சவா கேட்டிருக்கிறார். ஆனால் அப்போதும் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட மாட்டாது என்று கல்லூரி முதல்வர் கறாராக கூறவே வாட்டர் பாட்டிலில் தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை பேராசிரியர் மீது ஸ்ரீவத்சவா ஊற்றி தீ வைத்திருக்கிறார் மாணவன் ஷீவத்சவா. விமுக்தா சர்மா வலியில் துடித்து கதறிய பின்னர்தான் முதல்வருக்கு ஏதோ நடந்திருக்கிறது என்று ஊழியர்களுக்கு தெரிந்திருக்கிறது. பின்னர் அவர்கள் தீயை அணைக்க முற்படுகையில் அந்த வாய்ப்பை பயன்படுத்தி மாணவன் அங்கிருந்து எஸ்கேப் ஆகியுள்ளார்.

கொலை வழக்கு
இந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்ட நிலையில் சில மணி நேரங்களிலேயே மாணவனும் கைது செய்யப்பட்டான். இந்நிலையில் 80 சதவிகித தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முதல்வர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதனால் கொலை முயற்சி என பதிவு செய்யப்பட்ட வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டிருக்கிறது. மேலும் மாணவன் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து காவல்துறை அதிகாரிகள் கூறுகையில், "மருத்துவர்கள் எவ்வளவோ முயன்றும் கல்லூரி முதல்வரை காப்பாற்ற முடியவில்லை.

குற்றச்சாட்டு
மாணவனின் குற்றச்சாட்டுகள் குறித்து கல்லூரி நிர்வாகம் மறுப்பு தெரிவித்திருக்கிறது. அதாவது பலமுறை மதிப்பெண் சான்றிதழை பெற விண்ணப்பித்த பிறகும் அவர் சான்றிதழை பெற்றுக்கொள்ள வரவில்லை என்று கல்லூரி நிர்வாகம் குற்றம்சாட்டியுள்ளது" என்று கூறியுள்ளார். இது குறித்து உயிரிழந்த கல்லூரி முதல்வரின் மகள் கூறுகையில், "மாணவன் ஏற்கெனவே கொலை மிரட்டல் விடுத்திருந்தான். நாங்கள் இது தொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தோம். ஆனால் அவர்கள் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. காவல்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த சம்பவம் இன்று நடந்திருக்காது.

பரபரப்பு
கைது செய்யப்பட்ட மாணவனுக்கு உரிய தண்டனை கொடுக்கப்பட வேண்டும். அப்போதுதான் இனியொரு சம்பவம் இதுபோன்று நடக்காது" என்று கூறியுள்ளார். மதிப்பெண் சான்றிதழ் வழங்காததால் கல்லூரி முதல்வரை மாணவன் ஒருவன் பெட்ரோல் ஊற்றி கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications