முதலமைச்சரின் கான்வாய் மீது துப்பாக்கிக்சூடு.. பாதுகாப்புப்படை வீரர் காயம்! மணிப்பூரில் ஷாக்
இம்பால்: மணிப்பூரில் முதலமைச்சரின் கான்வாய் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதல் மணிப்பூர் மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் என முதலமைச்சர் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
மணிப்பூர் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக வன்முறைகள் பெரிய அளவு இல்லாமல் இருந்தது. ஆனால், கடந்த 6ம் தேதி நடந்த சம்பவம் காரணமாக மீண்டும் வன்முறை வெடித்திருக்கிறது. அதாவது ஜிரிபாம் மாவட்டத்தில் 59 வயது முதியவர் தீவிரவாதிகள் என சந்தேகப்படும் நபர்களால் கொல்லப்பட்டார். இதுதான் வன்முறக்கு காரணமாகும். இந்த கொலை சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சிலர் வன்முறையை கையில் எடுத்தனர்.

வன்முறையில் போலீசாரின் செக்போஸ்ட் உட்பட 70 வீடுகள் எரிக்கப்பட்டிருக்கின்றன. வீடுகள் எரிக்கப்பட்டதால் மக்கள் நள்ளிரவில் அலறி கூச்சலிட்டு வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் புகுந்தனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக மணிப்பூர் காவல்துறையின் கமாண்டோ குழு விமானம் மூலமாக ஜிரிபாம் விரைந்துள்ளது.
இந்த சம்பவம் காரணமாக பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட ஏறத்தாழ சுமார் 239 பேர் அங்கிருந்து வெளியேறியுள்ளனர். இந்த சம்பவத்தில் காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. எனவே மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பிரதீப் சிங் பணியிட மாற்ற செய்யப்பட்டிருக்கிறார்.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் தெரிவிக்க முதலமைச்சர் சென்ற நிலையில் அவரது பாதுகாப்பு வாகனங்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டிருக்கிறது. முதலமைச்சரின் பாதுகாப்பிற்காக அவரது தனி பாதுகாப்பு குழுவினர் இன்று இம்பாலில் இருந்து வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதியான ஜிரிபாம் நோக்கி புறப்பட்டுச் சென்றனர். காங்போப்கி மாவட்டம் கே.சினாம் கிராமம் அருகே சென்றபோது, சாலையோரம் பதுங்கியிருந்த மர்ம நபர்கள் திடீரென பாதுகாப்பு வாகனம் மீது தாக்குதல் நடத்தினர்
இதில் பாதுகாவலர் ஒருவருக்கு காயம் ஏற்பட்டது. அவர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அசாம் எல்லையோரம் அமைந்துள்ள காங்போப்கி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் குக்கி தீவிரவாதிகள் தொடர் தாக்குதல் நடத்துவதால் இந்த தாக்குதலையும் அவர்கள் நடத்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
பாதுகாப்பு வாகனம் மீதான தாக்குதலைத் தொடர்ந்து, ஜிரிபாம் பகுதியில் உள்ள நிலைமை குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யும்படி பாதுகாப்பு ஆலோசகரிடம் முதலமைச்சர் கேட்டுள்ளார். ஜிரிபாம் மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை செல்வதால் குக்கி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக பாதுகாப்பு ஆலோசகர் மற்றும் டி.ஜி.பி.க்கு முதலமைச்சர் அலுவலகம் பலமுறை எச்சரித்ததாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல நாட்களுக்கு பின்னர் தற்போதுதான் மணிப்பூரில் ஓரளவு அமைதி திரும்பியிருந்தது. ஆனால், இப்போது மீண்டும் வன்முறை வெடித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications