காஷ்மீர் வரை எதிரொலிக்கும் கர்நாடக ஹிஜாப் தடை விவகாரம்.. "கோட்சேவின் இந்தியா" என மெகபூபா கண்டனம்
உடுப்பி: கர்நாடக மாநிலத்தில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வருவதற்கு கல்லூரி நிர்வாகம் அனுமதி மறுத்ததற்கு ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
Recommended Video
கர்நாடகாவில் சமீப நாட்களாக பியூ கல்லூரிகளில் இஸ்லாமிய பெண்கள் ஹிஜாப் அணிந்து வகுப்பிற்கு வருவது தடை விதிக்கப்பட்டுள்ளது. பல கல்லூரிகளில் ஹிஜாப் அணிந்து வரும் மாணவிகளை வகுப்பறைக்குள் அனுமதிக்கவில்லை கல்லூரி நிர்வாகம்.
கல்லூரிகளில் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வருவதற்கு, உடுப்பி பகுதியில் உள்ள கல்லூரிகளில் இயங்கி வரும் இந்து அமைப்பை சேர்ந்த மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஹிஜாப்
கடந்த சில நாட்களுக்கு முன்பு மங்களூரில் உள்ள கல்லூரியில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து மாணவ , மாணவியர் சிலர் காவி உடை அணிந்து வந்தனர். அவர்கள் ஹிஜாப் அணியக்கூடாது, இல்லையென்றால் நாங்கள் காவி துண்டு அணிவோம் என்றனர் இந்து மாணவ அமைப்பு. இதே சம்பவம் சிக்மங்களூர் கல்லூரியிலும் தற்போது நடந்துள்ளது.

மாணவிகள்
உடுப்பி கல்லூரியில் 6 மாணவிகள் தொடர்ந்து ஹிஜாப் அணிந்து வந்ததால், அவர்கள் வகுப்பறைக்குள் அனுமதிக்கப்படாமல் உள்ளனர். கடந்த டிசம்பர் 31ம் தேதியில் இருந்து இவர்கள் "ஆப்சென்ட்" என்று வகுப்பு பதிவேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதே கட்டுப்பாடு இன்னும் சில பியூ கல்லூரிகளிலும் போடப்பட்டு வருகிறது. இதனால் கர்நாடகாவில் இருக்கும் பியூ கல்லூரிகளில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

உள்ளே விடுங்க
மாணவிகள் கல்லூரி வாசலில் தடுத்து நிறுத்தப்பட்ட நிலையில், கல்லூரியின் தலைமை ஆசிரியருடன் மாணவிகள் உருக்கமாக பேசிய வீடியோ வெளியாகி சர்சையை ஏற்படுத்தி வருகிறது. ''சார் எங்களை உள்ளே விடுங்க.. எங்க படிப்பு கெடுது.. ப்ளீஸ் எங்களை கல்லூரிக்குள் விடுங்கள். இத்தனை நாட்கள் நாங்கள் வந்த போது பிரச்சனை இல்லையே'' என்று சொல்லி இருக்கிறார்கள். இந்நிலையில், இந்த மாணவிகளில் ஒருவர் நீதிமன்றத்தை நாடியிருக்கிறார்.
|
எதிர்ப்பு
கல்லூரி நிர்வாகத்தைக் கண்டித்து ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர்கள் மெகபூபா முப்தி மற்றும் ஓமர் அப்துல்லா ஆகியோர் தங்கள் கண்டனங்களை ட்விட்டரில் தெரிவித்துள்ளனர். மெகபூபா முப்தி கூறுகையில், ''முஸ்லீம் பெண்களின் உடையைக் காரணமாக சொல்லி, கல்வி உரிமை மறுக்கப்படுகிறது. முஸ்லீம்களை ஓரங்கட்டுவதை சட்டப்பூர்வமாக்குவது காந்தியின் இந்தியாவை கோட்சேவின் இந்தியாவாக மாற்றுவதற்கான ஆரம்பமாகும்'' என்று தெரிவித்துள்ளார்.

ஓமர் அப்துல்லா
ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஓமர் அப்துல்லா ட்விட்டரில் ''என்ன அணிய வேண்டும் என்பதை தனிநபர்கள் சுதந்திரமாக தேர்வு செய்யலாம். அவர்களின் விருப்பத்தை நீங்கள் விரும்பலாம் அல்லது விரும்பாமலும் இருக்கலாம். ஆனால் அது நம் அனைவருக்கும் உள்ள உரிமை. இந்த மக்கள் பிரதிநிதிகள் காவி உடை அணிந்தால், இந்த பெண்கள் ஹிஜாப் பயன்படுத்தலாம். முஸ்லிம்கள் இரண்டாம் தர குடிமக்கள் அல்ல'' என்று காட்டமாக கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications