ரூ.3 ஆயிரத்துக்கு ஆசைப்பட்டு கர்நாடக போலீசிடம் சிக்கிய தீவிரவாதி! விசாரணையில் சுவாரசிய தகவல்
பெங்களூரு: ரூ.3 ஆயிரம் குறைந்தவிலையில் விமான டிக்கெட் கிடைக்கும் என்ற ஆசையில் துபாய் செல்லும் பயண தேதியை தீவிரவாதி ரியாஸ் அகமது சையீதி தள்ளிப்போட்டதன் காரணமாக, போலீசாரிடம் அவர் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பெங்களூரில் சமீபத்தில் நடந்த குண்டு வெடிப்பு தொடர்பாக விசாரணை நடத்திவரும் போலீசார், கடந்த வாரம் கர்நாடகாவின் பத்கல் பகுதியை சேர்ந்த மூன்று தீவிரவாதிகளை கைப்பற்றி பயங்கர ஆயுதங்களை பறிமுதல் செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளியே வந்தன.
இந்நிலையில் கடந்த சனிக்கிழமை இரவு மங்களூரு விமான நிலையத்தில் வைத்து ரியாஸ் அகமது சையீதி என்ற மற்றொரு தீவிரவாதியை பெங்களூரு போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ஒரு சுவாரசிய தகவல் வெளிவந்துள்ளது.
ரியாஸ் கடந்த புதன்கிழமையே துபாய்க்கு தப்பிச் செல்ல திட்டமிட்டிருந்தாராம். ஆனால் அவரின் டிராவல் ஏஜெண்ட், சனிக்கிழமை இரவு துபாய்க்கு சென்றால், விமான கட்டணம் ரூ.3 ஆயிரம் அளவுக்கு குறைவாக இருக்கும் என்று ஐடியா கொடுத்துள்ளார். இதையேற்றுதான் ரியாஸ் தனது சொந்த ஊரிலேயே தங்கியிருந்துள்ளார். சனிக்கிழமை இரவு விமான நிலையம் வந்தபோது போலீசாரிடம் பிடிபட்டுள்ளார்.
போலீசார் எப்படியும் தன்னை கண்டுபிடிக்க போவதில்லை என்ற அலட்சிய மனப்பான்மையோடு இருந்ததால், 3 நாட்கள் கழித்து வேண்டுமானாலும் டிக்கெட் எடுத்துக் கொடுக்குமாறு, டிராவல் ஏஜெண்டிடம் சம்மதம் தெரிவித்துளளார் ரியாஸ். ஆனால் போலீசாரோ, ரியாஸ் நினைத்ததைவிட புத்திசாலித்தனமாக நடவடிக்கையை எடுத்துள்ளனர்.
கைதான தீவிரவாதி ரியாஸுக்கு, பன்னாட்டு தீவிரவாத அமைப்புகளோடு தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதாகவும், அந்த கோணத்தில் விசாரணை நடந்து வருவதாகவும், பெங்களூரு நகர போலீஸ் கமிஷனர் எம்.என்.ரெட்டி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications