ம.பி. நிதியமைச்சரிடம் கத்தி முனையில் நகைகள் கொள்ளை: ஓடும் ரயிலில் பரபரப்பு
மதுரா: மத்தியப் பிரதேச நிதியமைச்சர் ஜெயந்த் மல்லையா, அவரது மனைவி சுதா மல்லையா ஆகியோரிடம் ஓடும் ரயிலில் கத்தி முனையில் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜபல்பூர்- நிஜாமுதீன் எக்ஸ்பிரஸ் ரயிலில் மத்தியப் பிரதேச நிதியமைச்சர் ஜெயந்த் மல்லையா, அவரது மனைவி சுதா மல்லையா ஆகியோர் வியாழக்கிழமையன்று டெல்லி சென்றனர். மதுரா அருகே ரயில் சென்ற போது கத்தியோடு ஏசி பெட்டியில் நுழைந்த மர்ம நபர்கள் சிலர் அவர்களிடம் இருந்த நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றனர்.

இதுகுறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் நிதியமைச்சரின் மனைவி சுதா மல்லையா கூறியதாவது:
"மத்தியப் பிரதேச மாநிலம் தாமோவில் இருந்து, ஜபல்பூர்- நிஜாமுதீன் எக்ஸ்பிரஸ் ரயிலில் நானும், என் கணவரும் டெல்லியை நோக்கி பயணித்துக் கொண்டிருந்தோம். வியாழக்கிழமை அதிகாலை மதுரா அருகே ரயில் சென்று கொண்டிருந்த போது, ஒரு நபர் கத்தியுடன் நாங்கள் இருந்த குளிர்சாதனப் பெட்டிக்குள் ஏறினார்.
அவருடன் மேலும் 4 பேரும் வந்தனர். அவர்கள் கத்திமுனையில் எங்கள் இருவரிடம் இருந்த நகைகளையும், பணத்தையும் கொள்ளையடித்தனர். அந்தக் கொள்ளையர்கள் அதே ரயிலில் பயணம் செய்தவர்கள்.
ரயில்வே பாதுகாப்புப் படையினர் வருவதற்குள் அவர்கள் தப்பி ஓடி விட்டனர். மற்ற பயணிகளுக்கு ஆபத்து எதுவும் ஏற்படவில்லை'' என்றார். இந்த விவகாரம் நாடாளுமன்றத்திலும் வியாழக்கிழமை எழுப்பப்பட்டது.
இதனிடையே, இந்தக் கொள்ளை காரணமாக, ரயிலில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த 3 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாக ரயில்வே துறையின் செய்தித் தொடர்பாளர் அனில் சக்ஸேனா தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications