அடடா.. ராகுலை விடுங்க! பாஜகவால் சிக்கலில் மாட்டிய பிரியங்கா காந்தி! பாய்ந்த வழக்கு! பரபர தகவல்
இந்தூர்: பாஜகவை 50 சதவீத கமிஷன் அரசு என விமர்சனம் செய்ததால் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளரும், ராகுல் காந்தியின் சகோதரியுமான பிரியங்கா காந்தி மீது இந்தூர் போலீசார் அதிரடியாக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மத்திய பிரதேசத்தில் பாஜக ஆட்சி நடக்கிறது. முதல்வராக சிவ்ராஜ் சிங் சவுகான் உள்ளார். இந்த ஆண்டு இறுதியில் மத்திய பிரதேசத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைக்க பாஜக முயன்று வருகிறது. அதேவேளையில் பாஜகவை வீழ்த்தி ஆட்சியை பிடிக்கும் முனைப்பில் காங்கிரஸ் கட்சி வியூகங்களை வகுத்து வருகிறது.
இந்நிலையில் தான் மத்திய பிரதேசத்தில் பாஜக அரசு 50 சதவீத கமிஷன் பெறுவதாக காங்கிரஸ் கட்சி தலைவர்கள் விமர்சனம் செய்ய தொடங்கி உள்ளனர். கர்நாடகாவில் ஆட்சி செய்த பாஜக அரசு 40 சதவீத கமிஷன் பெறுவதாக காங்கிரஸ் குற்றம்சாட்டி பிரசாரம் செய்தது. இதையடுத்து நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் தனி மெஜாரிட்டியுடன் ஆட்சியை பிடித்தது.
அந்த வகையில் அரசு பணிகளை முடித்து கொடுக்கும் ஒப்பந்ததாரர்கள் உள்பட பல்வேறு தரப்பினரிடம் மத்திய பிரதேச மாநில பாஜக அரசு 50 சதவீத கமிஷன் பெற்று ஊழல் செய்வதாக காங்கிரஸ் தலைவர்கள் குற்றம்சாட்டி உள்ளனர். விரைவில் தேர்தல் நடைபெற உள்ளதால் இந்த குற்றச்சாட்டு என்பது பாஜகவுக்கு சிக்கலை ஏற்படுத்தலாம் என கூறப்படுகிறது.
இதற்கிடையே தான் கடந்த 11ம் தேதி காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி செய்திதாளில் வந்த ஒரு தகவலின் அடிப்படையில் தனது ட்விட்டர் பக்கத்தில் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தி்ல, ‛‛மத்திய பிரதேச மாநில ஒப்பந்ததாரர்கள் சங்கம் சார்பில் அம்மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில் 50 சதவீத கமிஷன் வழங்கிய பிறகு பணிக்கான ஒப்பந்த தொகை விடுவிக்கப்படுகிறது என புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் பாஜக அரசு 40 சதவீத கமிஷன் பெற்றது. ஆனால் கர்நாடகாவை விட விஞ்சி மத்திய பிரதேசத்தில் 50 சதவீதத்தை பாஜக அரசு கமிஷனாக பெறுகிறது. கர்நாடகாவில் பாஜகவை ஆட்சியை மக்கள் அகற்றினர். அதேபோல் மத்திய பிரதேசத்திலும் 50 சதவீத கமிஷன் பாஜகவை மக்கள் ஆட்சியில் இருந்து அகற்றுவார்கள்'' என தெரிவித்து இருந்தார். இதேபோல் பிற காங்கிரஸ் தலைவர்களும் விமர்சனம் செய்திருந்தனர்.
பிரியங்கா காந்தியின் இந்த பதிவுக்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆளும் பாஜக அரசு பற்றி அவதூறு பரப்பும் வகையில் பிரியங்கா காந்தியின் பதிவு இருப்பதாக பாஜகவினர் விமர்சனம் செய்தனர். அதாவது ஞானேந்திரா அவஸ்தி என்பவர் எந்த சங்கத்திலும் இல்லாத நிலையில் அவரது பெயரில் ஒரு கடிதம் பரவிய நிலையில் அதனை பாஜக அரசுக்கு எதிராக அவதூறு பரப்ப பயன்படுத்தப்படுவதாக கூறினர்.
மேலும் இந்தூர் பாஜக சட்டப்பிரிவை சேர்ந்த நிமேஷ் பதாக் என்பவர் இந்தூரில் உள்ள சன்யோகிதாகஞ்ச் போலீசில் புகார் செய்தார். அந்த புகாின் அடிப்படையில் போலீசார் பிரியங்கா காந்தி, மத்திய பிரதேச மாநில காங்கிரஸ் முன்னாள் முதல்வர் கமல்நாத், முன்னாள் மத்திய அமைச்சர் அருண் யாதவ் உள்ளிட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்கள் மீது இந்திய தண்டனை சட்டம் 420 (ஏமாற்றுதல்), 469 (நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் போலி தகவல்களை வெளியிடுதல்) உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications