அப்பனே முருகா.. நீதான் காப்பாத்தணும்! பய பக்தியுடன் உண்டியலை திருடிய திருடன்! செருப்பு கூட போடலையாம்
போபால்: மத்தியப் பிரதேச மாநிலத்தில் திருடன் ஒருவன் கோயிலில் திருடுவதற்கு முன்பு செய்த செயல் இணையத்தில் டிரெண்டிங்கில் உள்ளது.
திருடர்களின் கைவரிசை இப்போதெல்லாம் அதிகரித்துவிட்டது. வீடுகள், அலுவலகங்கள் மட்டுமின்றி கோயில்களையும் கூட விடாமல் திருடர்கள் திருடிச் செல்கின்றனர்.
அப்படித்தான் மத்தியப் பிரதேச மாநிலத்தில் கோயிலில் திருடுவதற்கு முன்பு செய்த செயல் சிரிப்பலையை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பான வீடியோவும் இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.

திருடர்கள்
பொதுவாகத் திருடர்கள் எங்குத் திருட சென்றாலும் பக்காவாக பிளான் போட்டே செல்வார்கள். ஆனாலும், பாருங்க இந்த சிசிடிவி கேமராக்கள் வந்ததில் இருந்தே திருடர்களுக்கு அது சிக்கலாக மாறிவிட்டன. திருடர்களை போலீசார் மிக விரைவில் பிடிக்க இந்த சிசிடிவி தான் பயன்படுகிறது. அதேபோல திருட செல்லும் இடங்களில் அவர்கள் செய்யும் வினோதமான செயல்களும் கூட அதில் பதிவாகத் தவறுவதில்லை.

மத்தியப் பிரதேசம்
அப்படியொரு சம்பவம் தான் மத்தியப் பிரதேசத்தில் அரங்கேறி உள்ளது. அங்குள்ள ஜபல்பூரில் உள்ள கோயிலில் நள்ளிரவு நேரத்தில் ஒருவர் வெள்ளை நிற காரில் வருகிறார். காரை கோயிலில் இருந்து சற்று தொலைவில் நிறுத்தும் அந்த நபர் யாரும் அங்கு இல்லை என்பதை உறுதி செய்துவிட்டு, கோயிலுக்குள் நுழைகிறான். அதன் பின்னர் அங்குக் கடவுளிடம் ஏதோ மிகவும் சீரியசாக வேண்டிக் கொள்கிறார்.

சிசிடிவி
அதன் பின்னர் அவர் யாரும் எதிர்பாராத வகையில் அங்கிருந்த உண்டியலைத் திருடிச் செல்கிறார். இவை அனைத்தும் அங்கிருந்த சிசிடிவி காட்சியில் தெளிவாகப் பதிவாகி உள்ளது. இந்தச் சம்பவம் தீபாவளிக்கு முதல் நாள் நள்ளிரவு 2 மணி அளவில் நடந்ததாக கூறப்படுகிறது. அங்குள்ள கவுர் சௌகியில் உள்ள ஹனுமான் கோவிலில் இந்த கொள்ளை சம்பவம் நடந்துள்ளது. மறுநாள் அதிகாலையில் கோயிலுக்கு வந்த பக்தர்கள் தான் இந்த கொள்ளை சம்பவத்தை முதலில் பார்த்து உள்ளனர்.

செருப்பைக் கூட
அவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விசாரணையைத் தொடங்கினர். நள்ளிரவு நேரத்தில் கோயிலில் புகுந்து திருடிய அந்த நபரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். கைகளில் வாட்ச் எல்லாம் அணிந்து டிப்டாப்பாகவே அந்த திருடன் இருந்து உள்ளான். குறிப்பாக அவன் தனது செருப்பைக் கூட கோயிலுக்கு வெளியே கழட்டி வைத்து விட்டான் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

முதல்முறை இல்லை
கோயிலில் சாமி கும்பிட்ட பிறகு அங்கு உண்டியலில் இருந்து பணத்தைத் திருடன் திருடியுள்ள சம்பவத்தின் வீடியோ இப்போது இணையதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. முன்னதாக கடந்த ஆகஸ்ட் மாதமும் இதே மாவட்டத்தில் உள்ள மற்றொரு கோயிலிலும் இதேபோல ஒரு திருட்டு சம்பவம் நடந்து இருந்தது. அதன் வீடியோவும் கூட இணையத்தில் வெளியானது.

வழிபாடு
அதில் சட்டை போடாமல் கோயிலுக்குள் நுழையும் திருடன் ஒருவன், திருடும் முன்பு உள்ளே சன்னதிக்குள் தெய்வத்தை வணங்குகிறார். அதன் பின்னரே அவன் அந்த கோயில் உண்டியலைத் திருடிச் சென்றான். இப்போது சில மாதங்கள் இடைவெளியில் மீண்டும் அதேபோன்ற ஒரு சம்பவம் அரங்கேறி உள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications