சனி பகவான் கோவிலில் நுழைய முயன்ற பெண்கள் கைது... மகாராஷ்டிராவில் பதட்டம்-பரபரப்பு
மும்பை: மகாராஷ்டிராவில் உள்ள சிங்க்னாபூர் சனிபகவான் ஆலயத்திற்குள் தடையை மீறி நுழைய முயன்ற பெண்கள் அமைப்பை சேர்ந்த 500க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்து பின்னர் விடுவித்தனர். இதனால் மகாராஷ்டிரா மாநிலத்தில் பதற்றம் நிலவி வருகிறது. இந்நிலையில் பெண்களுக்கு கோவிலுக்குள் சென்று வழிபட உரிமை உள்ளதாகவும், கோவில் நிர்வாகிகளும், பெண்கள் அமைப்பினரும் பேச்சுவார்த்தை மூலம் இந்த பிரச்சனையை தீர்க்க வேண்டும் என்றும் அம்மாநில முதல்வர் தேவேந்திர பட்நாவீஸ் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்ராவில் அகமத் நகர் மாவட்டத்தில் புகழ் பெற்ற சனி பகவான் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்குள் நுழைந்து வழிபட பெண்களுக்கு அனுமதி இல்லை. 500 வருடங்களுக்கு மேலாக இந்த தடை இருப்பதாக கூறப்படுகிறது. இந்த தடையை எதிர்த்து நேற்று பெண்கள் அமைப்பை சேர்ந்த ஏராளமானோர் கோவில் நுழைவு போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து பின்னர் விடுவித்தனர். இந்த விவகாரம் சர்ச்சைக்குரிய விவகாரமும் வெடித்துள்ளது. பெண்கள் அமைப்பினர் தடைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

சனி சிங்க்னாப்பூர் கிராமத்தில் உள்ள சனி பகவான் கோவிலில் 5 அடி உயரத்துக்கு கற்பாறைகளால் நிறுவப்பட்ட சனீஸ்வர பகவான் சிலை ஒன்றும் உள்ளது. இந்த சிலைக்கு அருகில் பெண்கள் சென்று வழிபடுவதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு கட்டுங்கடங்காத கூட்டத்துக்கு மத்தியில், பாதுகாப்பு அரணை மீறி பெண் ஒருவர் கருவறைக்குள் நுழைந்து சாமி தரிசனம் செய்துவிட்டு திரும்பினார். பிறகு அந்த பெண் திடீரென கூட்டத்தில் மறைந்து அங்கிருந்து சென்றுவிட்டார்.
இந்நிலையில் தடையை மீறி ஒரு பெண், சனீஸ்வரன் கோவிலுக்கு சென்று வழிப்பட்டதால், சனீஸ்வரருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தூய்மைப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டது. இந்த சம்பவத்திற்கு பெண்கள் அமைப்பினர் கடும் கண்டனத்தை தெரிவித்தனர்.
இந்த புனித இடத்தில் வழிபாடு செய்ய பெண்கள் அமைப்பினர் உரிமை கோரி வருகின்றனர். சனி பகவான் கோவிலுக்குள் நுழைய உள்ள தடையை நீக்கி, வழிபட அனுமதிக்க வலியுறுத்தி, பெண்கள் அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். புனே நகரில் உள்ள பெண்கள் அமைப்பைச் சேர்ந்த, 500க்கும் மேற்பட்டோர், குடியரசு தினமான நேற்று, சனி பகவான் கோவிலுக்குள் நுழைய திட்டமிட்டனர்; ஆறு பேருந்துகளை ஏற்பாடு செய்து, சனி பகவான் கோவிலை நோக்கி, அந்த பெண்கள் பயணித்தனர். ஆனால், 40 கி.மீ., துாரத்துக்கு முன், அந்த பெண்களை, ஏராளமான கிராம மக்களும், போலீசாரும் தடுத்து நிறுத்தினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பெண்கள் அமைப்பினர், சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் நிமிடத்திற்கு நிமிடம் பதற்றம் ஏற்பட்டது. இந்த நிலையில், சனி பகவான் கோவிலுக்கு ஆண்கள் சென்றால், எந்த தவறும் இல்லை என சொல்பவர்கள், பெண்கள் சென்றால் புனிதம் பாதிப்பதாகக் கூறுவதை ஏற்க முடியாது. எங்களை அனுமதிக்காததற்கு சரியான காரணத்தை கூற வேண்டும். இன்றைய தினத்தை கறுப்பு தினமாகக் கருதுகிறோம் என்று கூறினார் பெண்கள் சங்கத்தலைவர் திருப்தி தேசாய்.
பல நுாற்றாண்டுகளாக பின்பற்றப்படும் பாரம்பரியத்தை மீற, பெண்கள் அமைப்பினர் ஏன் முயற்சி செய்ய வேண்டும்? அவர்களை இங்கு வர அனுமதிக்க மாட்டோம். சனி பகவான் கோவில் அருகே வசிக்கும் உள்ளூர் பெண்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில் பெண்களுக்கு கோவிலுக்குள் சென்று வழிபட உரிமை உள்ளதாகவும், கோவில் நிர்வாகிகளும், பெண்கள் அமைப்பினரும் பேச்சுவார்த்தை மூலம் இந்த பிரச்சனையை தீர்க்க வேண்டும் என்றும் அம்மாநில முதல்வர் தேவேந்திர பட்நாவீஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து பட்னாவீஸ் தனது டுவிட்டர் பக்கத்தில்
இந்திய கலாச்சாரத்திலும், இந்து மதத்திலும் பெண்களுக்கு வழிபடும் உரிமை வழங்கப்பட்டுள்ளது. வழிபாட்டில் பாரபட்சம் காட்டுவதும், பாகுபாடு செய்வதும் நம்முடைய கலாச்சாரத்தில் இல்லை. கோவில் நிர்வாகிகள் பேச்சுவார்த்தை மூலம் இந்த பிரச்சனையை தீர்க்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
சனிபகவான் கோவிலில் மட்டுமல்லாது சபரிமலை கோவிலிலும் ஒரு குறிப்பிட்ட வயது வரை உள்ள பெண்கள் வழிபட தடை உள்ளது. அது மட்டுமல்லாது மாதவிலக்கு நேரத்திலும் எந்த கோவிலுக்குள்ளும் பெண்கள் நுழைவதில்லை. இந்த நிலையில் எந்த நேரத்தில் அனைத்து கோவில்களுக்குள்ளும் பெண்கள் நுழைய அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.












Click it and Unblock the Notifications