குடியரசு தினக் கொண்டாட்டம்.. ஹுசைன் சாகரில் நின்ற படகில் பற்றிய தீ.. 3 பேர் காயம்.. என்ன நடந்தது?
ஐதராபாத்: குடியரசு தினக் கொண்டாட்டத்தின் போது பட்டாசு வெடித்ததில் ஹுசைன் சாகர் ஏரியில் நின்றிருந்த இரு படகுகளில் தீ பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தீ விபத்தின் போது 15 பயணிகள் படகில் இருந்த நிலையில் அவர்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். இதில் 3 பேருக்கு மட்டும் காயம் ஏற்பட்டுள்ளது.
நாட்டின் 76வது குடியரசு தினம் பல்வேறு மாநிலங்களில் கோலகலமாக கொண்டாடப்பட்டது. அந்த வகையில் ஐதராபாத்தில் குடியரசு தினம் அணிவகுப்பு மரியாதையுடன் விமர்சையாக கொண்டாடப்பட்டது. ஐதராபாத்தில் குடியரசு தினத்தின்று மாலை வேளையில், பாரத மாதா மகா ஹாரத்தி கொண்டாட்டம் நடப்பது வழக்கம்.

இந்த நிகழ்ச்சி பாரத மாதா அறக்கட்டளை சார்பாக நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியில் இந்தியாவின் பன்முகத்தன்மையை வெளிப்படுத்தும் வகையிலும், இந்தியாவின் வரலாறு, பெருமை உள்ளிட்டவை குறித்து பல்வேறு நிகழ்ச்சிகளும் நடக்கும். 2018ஆம் ஆண்டு முதல் நடந்து வரும் இந்த நிகழ்ச்சிகளில் குழந்தைகளும் பங்கேற்று வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று மாலை இந்த நிகழ்ச்சி நடைபெற்ற போது, பட்டாசுகள் வெடிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனிடையே பட்டாசு வெடித்ததில் திடீரென ஹுசைன் சாகர் ஏரியில் இருந்த படகில் தீ பற்றி எறிய தொடங்கியதால், பரபரப்பு ஏற்பட்டது. அதுமட்டுமல்லாமல் அந்த படகில் தீ பற்றிய போது, 15க்கும் அதிகமான பயணிகள் இருந்ததாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்பின் உடனடியாக பயணிகள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டுள்ளனர். இருப்பினும் இருந்த இரு படகும் ஹுசைன் சாகர் ஏரியில் தொடர்ந்து எரிந்துள்ளது. இதன் காட்சிகள் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைத்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் பயணிகள் மூன்று பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. மேலும் பட்டாசு வெடித்ததில் படகில் தீ பற்றி எரிந்தது எப்படி என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications