நேதாஜி பற்றிய 64 ஆவணங்கள் வரும் 18 ல் வெளியிடப்படும்... மே.வங்க முதல்வர் மம்தா அதிரடி அறிவிப்பு
கொல்கத்தா : இந்திய சுதந்திரப் போராட்டத் தலைவர்களில் ஒருவரான நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தொடர்பான 64 ஆவணங்கள் வரும் 18 ஆம் தேதி வெளியிடப்படும் என்று கூறி மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தொடர்பான ஆவணங்கள் கணினி மயமாக்கப்பட்டு வருவதாகவும், அவை வரும் 18 ஆம் தேதி வெளியிடப்படும் என்றும் தெரிவித்தார்.

சுதந்திர போராட்டத்தின்போது, 1939 ஆம் ஆண்டு மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு ஆகியோருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் காங்கிரஸில் இருந்து மற்றொரு பிரபல தலைவரான நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் விலகினார். பின்னர் அவர் ஜெர்மனி மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு சென்று இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி இந்தியாவில் வெள்ளையர்களுக்கு எதிராக போராடினார்.
நேதாஜி, 2ஆம் உலகப் போரின்போது பிரிட்டனுக்கு எதிராக ஜெர்மனி, ஜப்பான் ஆகிய நாடுகளுடன் சேர்ந்து இந்திய தேசிய ராணுவத்தை (ஐஎன்ஏ) உருவாக்கி போரிட்டார். 2ஆம் உலகப் போரில், ஜப்பான் படையினர் தோல்வியை சந்தித்ததால், பிரிட்டன் வீரர்களிடம் சிக்காமல் இருப்பதற்காக சோவியத் யூனியன் கட்டுப்பாட்டில் இருந்து மஞ்சூரியாவுக்கு தப்பிச் சென்றார். அப்போது 1945 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 18 ஆம் தேதி தைவான் நாட்டில் நடந்த விமானம் விபத்தில் சிக்கியதாகவும், இதில் நேதாஜி உயிரிழந்து விட்டதாகவும் அறிவிக்கப்பட்டது. ஆனால், அதுகுறித்து ஆதாரங்கள் வெளியிடப்படாத நிலையில், அவரது மரணம் குறித்து மர்மம் நீடித்து வருகிறது.
40 ஆண்டுகளுக்கும் மேலாக பராமரித்து வரும் அவரை பற்றிய 100-க்கும் மேற்பட்ட ரகசிய கோப்புகளை பகிரங்கமாக வெளியிடவேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சிகள் மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றன. எனினும், இவற்றை வெளியிட்டால், மேற்கு வங்க மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலையும், நமது நட்பு நாடுகள் சிலவற்றுடன் உறவுகள் பாதிக்கப்படும் என்பதால் அந்த கோப்புகள் பகிரங்கமாக வெளியிடப்படாமல் பாதுகாக்கப்பட்டு வருவதாக மத்திய அரசு தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் தொடர்பான 64 ஆவணங்கள் வரும் 18 ஆம் தேதி வெளியிடப்படும் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
இது குறித்து மாநில தலைமைச்செயலகத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் மம்தா கூறியதாவது...
வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வு காரணமாக நாங்கள் இந்தக் கோப்புகளை வெளியிட முடிவு செய்துள்ளோம். இந்த ரகசியம் மக்களுக்கு தெரிவது அவசியம்.
சுபாஷ் சந்திர போஸ் இங்கு வாழ்ந்துள்ளார். இங்கிருந்து தீவிர அரசியலில் ஈடுபட்டிருக்கிறார், தனது போராட்டங்களை இங்கிருந்தே நடத்தினார். ஆனால் அவருக்கு என்ன நடந்தது என்பது பற்றி நாம் அறிந்து கொள்ள முடியவில்லை. இது புதிரானது.
இந்தக் கோப்புகள் தற்போது தயார் செய்யப்பட்டு போலீஸ் ஆவணக் காப்பகத்தில் அனைவரும் படிக்க வசதியாக வைக்கப்படவுள்ளது. ஊடகங்கள்தான் உண்மையைக் கண்டறிய வேண்டும். மக்களுக்கு உண்மை தெரிய வேண்டும்.
நாட்டின் பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து விவகாரங்களையும் பல கோணத்தில் ஆராய்ந்த பிறகே கோப்புகளை வெளியிடும் முடிவு எட்டப்பட்டுள்ளது.
இவ்வாறு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications