"இது ஜனநாயக படுகொலை!"சண்டிகர் மேயர் தேர்தல் குறித்து உச்ச நீதிமன்றம் காட்டம்! என்ன நடந்தது! பின்னணி
டெல்லி: சண்டிகர் மேயர் தேர்தல் சமீபத்தில் நடந்து முடிந்த நிலையில், இது தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சில காட்டமான கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
பஞ்சாப், ஹரியானா மாநிலங்களின் தலைநகரான சண்டிகர் ஒரு யூனியன் பிரதேசமாகவும் இருக்கிறது. இந்த சண்டிகர் மாநகரத்தில் சமீபத்தில் மேயர் தேர்தல் நடந்த நிலையில், அதை "இந்தியா" கூட்டணி இணைந்து எதிர்கொண்டன. அதேபோல பாஜகவும் வேட்பாளரை நிறுத்தியது..

இந்தத் தேர்தலில் பாஜக சார்பில் மனோஜ் சோன்கர் என்பவர் போட்டியிட்ட நிலையில், இந்தியா கூட்டணி சார்பில் ஆம் ஆத்மியின் குல்தீப் குமார் போட்டியிட்டனர். இந்த மேயர் தேர்தலில் மொத்தம் 36 கவுன்சிலர்கள் வாக்களித்தனர்.
சண்டிகர் மேயர் தேர்தல்: இதில் தேர்தலுக்கு முன்பு "இந்தியா" கூட்டணிக்கு கவுன்சிலர்கள் அதிகம் இருப்பதால்.. அவரே வெல்ல அதிக வாய்ப்பு இருப்பதாகச் சொல்லப்பட்டது. இருப்பினும், தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட போது அனைவருக்கும் அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது இந்த மேயர் தேர்தலில் பாஜகவுக்கு 16 வாக்குகளும் கிடைத்தன. இந்தியா கூட்டணிக்கு 20 வாக்குகள் கிடைத்தன. இருப்பினும் இந்தியா கூட்டணி வேட்பாளருக்கு விழுந்த 8 வாக்குகள் செல்லாத வாக்குகளாக அறிவிக்கப்பட்டன.
இதன் மூலம் பாஜக வேட்பாளர் மனோஜ் சோங்கர் 4 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றதாக அறிவிக்கப்பட்டது. இருப்பினும், இந்தத் தேர்தலில் முறைகேடு நடந்ததாக ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் கட்சி கடுமையான சாடின. இதற்கிடையே தேர்தல் நடத்தும் அதிகாரி வாக்குச்சீட்டில் ஏதோ மாற்றம் செய்வது போன்ற வீடியோ இணையத்தில் வெளியாகிப் பரபரப்பைக் கிளப்பியது.
உச்ச நீதிமன்றத்தில் வழக்கு: இது தொடர்பான வழக்கு முதலில் பஞ்சாப் ஹரியானா நீதிமன்றத்தில் தொடரப்பட்டது. இருப்பினும், அதில் பாஜக வேட்பாளர் வெற்றிக்கு இடைக்காலத் தடை விதிக்க நீதிமன்றம் மறுத்துவிட்டது. இதற்கிடையே சண்டிகர் மேயர் தேர்தல் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது தான் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதி ஜே.பி. பர்திவாலா மற்றும் நீதிபதி மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வில் விசாரணைக்கு வந்தது. இது தொடர்பாகத் தலைமை நீதிபதி மேலும் கூறுகையில், "தேர்தல் அதிகாரி நடத்தை ஜனநாயகத்தைப் படுகொலை செய்வது போன்றது.. அவர் கேமராவைப் பார்த்த பிறகும் வாக்குச் சீட்டில் ஏதோ செய்வது வீடியோவில் தெளிவாகத் தெரிகிறது... இந்த அதிகாரி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.
பட்ஜெட் தாக்கல் செய்ய முடியாது: மேலும், சண்டிகர் பட்ஜெட் கூட்டத்தொடர் செவ்வாய்க்கிழமை நடக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதையும் உச்ச நீதிமன்றம் நிறுத்தியுள்ளது. மறு உத்தரவு வரும் வரை பட்ஜெட் தாக்கல் செய்ய முடியாது என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர். அது செல்லாத வாக்குகளாகவே இருந்தாலும் அதில் எப்படி மாற்றங்களைச் செய்யலாம் என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மேலும் கூறுகையில், "வாக்குச் சீட்டுகளைச் சிதைத்த தேர்தல் அதிகாரியை விசாரிக்க வேண்டும்.. இதை ஜனநாயகத்தைப் படுகொலை செய்யும் செயலாகவே நான் பார்க்கிறேன்.. உச்ச நீதிமன்றம் அவரை பார்த்துக் கொண்டிருக்கிறது என்று தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் போய் சொல்லுங்கள்" என்றும் காட்டமான கருத்துகளை அவர் முன்வைத்தார்.












Click it and Unblock the Notifications