புதுச்சேரி பாமக: ஆட்சியைப் பிடிக்க ஜோசியர் சொன்ன 'பத்து-ஒன்று' - ராமதாஸ் பேசியது என்ன?
"புதுச்சேரியில் நான் போகாத வீதிகள் இல்லை, இடங்கள் இல்லை, கிராமங்கள் இல்லை. ஆனாலும் நாம் ஆட்சியைப் பிடிக்கவில்லை. புதுச்சேரியில் பாமக கட்சி முதல்வர் பதவியேற்றதும் சாராயம், மது ஒழிப்பு தான் முதல் கையெழுத்தாக இருக்கும்," என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி கம்பன் கலையரங்கில் புதுச்சேரி பாமக மாநில பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மதுக்கடைகள் அகற்றல், முழு பட்ஜெட் தாக்கல் உள்ளிட்ட 7 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதனைத் தொடர்ந்து பாமக நிறுவனர் ராமதாஸ் சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர், 10 சட்டமன்ற உறுப்பினர்கள் வந்தால் ஆட்சிக்கு வந்த ஒரு மாத காலத்தில் மதுவை ஒழித்து விடுவதாக தெரிவித்தார்.
ஜோசியர் சொன்ன பத்து-ஒன்று
தொடர்ந்து பேசிய அவர், "புதுச்சேரியில் நமது ஆட்சி வர எங்களுக்கு வழி காட்டுங்கள் என்று புதுச்சேரி பாமக நிர்வாகிகள் என்னைச் சந்தித்து கேட்டனர். அப்போது அவர்களிடம் சேலம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு ஜோசியர் பற்றிக் கூறி அவரை சந்திக்கும் படி இவர்களிடத்தில் கூறினேன். அவர்களும் அந்த பெரிய ஜோசியரைச் சென்று பார்த்தனர். அப்போது உடனே பத்து, ஒன்று என்று சொல்லி அனுப்பிவிட்டார். வெளியே வந்த அவர்கள் நீங்கள் சொன்ன ஜோசியர் எதுவும் கேட்காமல் பத்து, ஒன்று என்று கூறி அனுப்பிவிட்டார் எங்களுக்குப் புரியவில்லை என்று என்னிடம் கூறினர்.
- அதிமுகவில் ஓ. பன்னீர்செல்வம் தன் ஆதரவை இழந்தது எப்படி?
- 'சனாதன தர்மத்துடன் மதத்தை ஒப்பிடக் கூடாது' - ஆளுநர் ஆர்.என்.ரவி கொடுத்த விளக்கம்
அப்போது நான் புரிந்துகொண்டேன், 10 சட்டமன்ற உறுப்பினர்கள் வந்தால் ஒரு ஆட்சி, பிறகு 1 எம்பி என்று சரியாக தான் ஜோசியம் சொல்லி அனுப்பியுள்ளார். அதை நோக்கி நீங்கள் பாடுபடுங்கள் என்று கட்சி நிர்வாகிகளிடம் நான் சொன்னேன். 10 தொகுதிகளில் வெற்றி பெற்றால் போதும், புதுச்சேரியில் 8, காரைக்காலில் 2, வந்தாலே போதும் சுலபமாக வரலாம்.
ஜோசியர் சொன்ன மாதிரி சுலபமான வழியில், சரியான வழியில் இவர்களை அழைத்துச் சொல்லப்போகிறேன். அதற்கான பயிற்சியை தைலாபுரம் தோட்டத்தில் இருக்கும் அரசியல் பயிலகத்தில் கொடுக்கப் போகிறேன்," என்றார் ராமதாஸ்.
மேலும் புதுச்சேரியில் நான் போகாத வீதிகள் இல்லை, இடங்கள் இல்லை, கிராமங்கள் இல்லை என்று கூறிய ராமதாஸ், ஆனாலும் பாமக ஆட்சியைப் பிடிக்கவில்லை என்று கூறினார்.
"இந்த சாராயம், மது பானங்களை எல்லாம் கொடியது என்று சொல்கின்றனர். ஆனால் அதைவிடக் கஞ்சா மிக கொடியது. இந்த கஞ்சாவை ஒழிக்கவேண்டும் என்று நாம் தீர்மானம் போட்டால் மட்டும் போதாது.
சாராயத்தை இவர்களால் ஒழிக்க முடியாது. நாம் வந்த பின்னர் ஒழிக்கலாம். புதுச்சேரி மாநிலத்தில் நம்முடைய கட்சியின் முதல்வர் பதவியேற்றதும் சாராயம், மது பானங்களை ஒழிப்பது தான் முதல் கையெழுத்தாகப் போடப்படும்.
ஆனால் கஞ்சாவை ஒழிக்க மாதம் ஒரு போராட்டம் செய்து காவல் துறையினரின் கவனத்தை ஈர்த்து கஞ்சாவை ஒழிப்பதற்குச் சிறந்த நடவடிக்கை எடுக்கச் செய்ய வேண்டும். கஞ்சாவினால் இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய பாதிப்பு ஏற்படுகிறது," என பாமக நிறுவனர் ராமதாஸ் பேசினார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு பாட்டாளி மக்கள் கட்சியின் புதிய தலைவராக அக்கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
https://www.youtube.com/watch?v=LS4D4IP0ZHM
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்














Click it and Unblock the Notifications