லியாண்டர் பயஸ் உட்பட 56 பேருக்கு 'பத்ம' விருதுகள் வழங்கினார் ஜனாதிபதி
டெல்லி: குடியரசு தலைவர் மாளிகையில் நடந்த வண்ணமிகு விழாவில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி 56 முக்கிய பிரமுகர்களுக்கு பத்ம விருதுகள் வழங்கி கவுரவித்தார்.
பத்ம விபூசன் விருதுக்காக ஒருவரும், பத்ம பூசன் விருதுக்கு 11 பேரும், பத்ம ஸ்ரீ விருதுக்கு 44 பேரும் என ஆகமொத்தம் 56 பேர் இந்தாண்டுக்கான பத்ம விருதுகளை பெறுவார்கள் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்தொடர்ச்சியாக விருது வழங்கும் விழா குடியரசு தலைவர் மாளிகையில் இன்று நடைபெற்றது.

நடிகர் பரேஷ் ராவல், டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ், எழுத்தாளர் ருஷ்கின் பாண்ட் உள்ளிட்டோர் இந்த விருதுகளை பெற்றனர். ஆனால், விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த கிரிக்கெட் வீரர் யுவராஜ்சிங். எழுத்தாளர் அனிதா தேசாய் ஆகியோர் விழாவில் பங்கேற்க முடியவில்லை.
பத்ம விருதுகளிலே உயரிய கவுரவம் மிக்க விருதான பத்ம விபூசன் விருதை யோகா குரு கிருஷ்ணமாச்சார் சுந்தராஜ ஐயங்கார் பெற்றுக்கொண்டார்.
லியாண்டர் பயஸ், இந்திய அறிவியல் கழக இயக்குனர் விஞ்ஞானி பி.பலராம், நீதிபதி தல்வீர் பண்டாரி, எழுத்தாளர் ருஸ்கின் பாண்ட், அறிவியல் தொழில்நுட்ப துறை செயலாளர் திருமலச்சேரி ராமசாமி ஆகியோர் பத்ம பூசன் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் முக்கியமானவர்கள்.
பத்ம பூசன் விருது பெறுவோர் பட்டியலில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த ஜே.எஸ்.வர்மா பெயர் இருந்தது. ஆனால் அவரது குடும்பத்தார் விருதை பெற மறுப்பு தெரிவித்ததால் இன்றைய நிகழ்ச்சி பட்டியலில் அவரது பெயர் அகற்றப்பட்டிருந்தது.


Click it and Unblock the Notifications
