புதுச்சேரி மாநிலங்களவை தேர்தலில் திடீர் திருப்பம்.. கொறடா பதவியை ராஜினாமா செய்த ஆளுங்கட்சி எம்எல்ஏ
புதுச்சேரி : மாநிலங்களவைத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில் ஆளுங்கட்சியைச் சேர்ந்த அரசு கொறடா நேரு தனது பதவியை திடீர் ராஜினாமா செய்துள்ளது அம்மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாநிலங்களை எம்.பி.க்கான தேர்தல் வருகிற 28-ம் தேதி நடக்கிறது. ஆனால், இதுவரை என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர் யார் என்பதை அறிவிக்கவில்லை.

என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் தலைவரும், முதல்வருமான ரங்கசாமி அக்கட்சியின் வேட்பாளர் யார் என்று அறிவிக்காததால் ஆளுங்கட்சி எம்எல்ஏக்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். இந்நிலையில் அரசு கொறடா பதவியை ராஜினாமா செய்வதற்கான கடிதத்தை ஆளுங்கட்சி எம்எல்ஏ நேரு இன்று அளித்தார்.
மாநிலங்களவைத் தேர்தல் அறிவிப்பு வெளியாகியும், என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் யார் என்பதை முதல்வர் தெரிவிக்கவில்லை.
இந்நிலையில் சட்டப்பேரவைக்கு இன்று நண்பகல் அரசு கொறடா நேரு வந்தார். அப்போது எதிரே நடந்து வந்த முதல்வர் ரங்கசாமி காரில் சென்று அமர்ந்தார்.
இதையடுத்து முதல்வரிடம் ஒரு கடிதத்தை அளித்து விட்டு சபாநாயகர் சபாபதி அறைக்கு நேரு சென்றார். அங்கு அவர் இல்லாததால் அலுவலகத்தில் கடிதம் தந்தார்.
கடிதத்தை ஒப்படைத்த பிறகு செய்தியாளர்களிடம் நேரு கூறியதாவது...
அரசு கொறடா பதவியை ராஜினாமா செய்வதாக முதல்வரிடமும், சபாநாயகர் அலுவலகத்திலும் கடிதம் தந்துள்ளேன். கட்சியிலுள்ள எம்எல்ஏக்களை ஒருங்கிணைக்கும் வேலையை செய்ய முடியாததால் இக்கடிதம் தந்துள்ளேன்.
எம்எல்ஏக்கள் கூட்டத்தை கூட்டி எம்பி வேட்பாளர் தொடர்பாக பேசுங்கள் என முதல்வரிடம் இரு வாரமாக தெரிவித்தும் பலனில்லை. தற்போது பொது வேட்பாளர் நிறுத்தப்பட்டால் கண்டிப்பாக ஆதரிப்பேன். அப்போதுதான் எனது தொகுதிக்கு நல்ல பணிகளை எம்பி மூலம் செய்ய முடியும். இதர ஆளுங்கட்சி எம்எல்ஏக்கள் முடிவு பற்றி என்னால் ஏதும் கூற இயலாது" இவ்வாறு நேரு குறிப்பிட்டார்.
அரசு கொறடா நேரு தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதையடுத்து, மாநிலங்களவை தேர்தலில் வேட்பாளரை தேர்வு செய்வதில் முதல்வர் ரங்கசாமிக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது.












Click it and Unblock the Notifications