பி வி சிந்துவுடன் பேட்மிண்டன் விளையாடி சந்திரபாபு நாயுடு அசத்தல்.. களைகட்டிய விழா மேடை...
விஜயவாடா: ரியோவில் நடைபெற்ற பேட்மிண்டன் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று நாடு திரும்பிய சில்வர் இளவரசி பிவி சிந்துவுடன் பேட்மிண்டன் விளையாடி அசத்தினார் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு.
ஒலிம்பிக் விளையாட்டில் பேட்மிண்டன் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று வரலாறு படைத்த பி வி சிந்துவிற்கு தெலுங்கானா அரசு நேற்று பாராட்டு விழா நடத்தி மரியாதை செய்தது.

அதனைத் தொடர்ந்து, இன்று ஆந்திர பிரதேச அரசு சார்பில் விஜயவாடாவில் சிந்துவிற்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டு பாராட்டு விழா நடைபெற்றது.
கன்னாவரம் விமான நிலையத்தில் இருந்து சாலைகளின் இருமருங்கிலும் கூடியிருந்த மக்கள் வெள்ளத்தின் நடுவே சிந்துவும் அவரது பயிற்சியாளர் கோபிசந்த்தும் ஊர்வலமாக பாராட்டு விழா நடைபெற்ற இந்திரா காந்தி விளையாட்டு மைதானத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.
பின்னர், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்ட பாராட்டு விழா கோலாகலமாக நடைபெற்றது. அப்போது, திடீரென முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு சிந்துவுடன் விழா மேடையிலேயே சிறிது நேரம் பேட்மிண்டன் விளையாடினார். இதனால் விழாவிற்கு வந்திருந்த அனைவரும் மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கினர்.












Click it and Unblock the Notifications