மத்திய அரசின் கீழ்தான் ரயில்வே துறை இருக்கு- இதுதெரியாத குழந்தையாக இருக்கிறாரே ராகுல்... கெஜ்ரிவால்
டெல்லி: ஷக்கூர் பஸ்தியில் ஆக்கிரமிக்கப்பட்ட குடிசைகளை ரயில்வே நிர்வாகம் நேற்று அகற்றியபோது, ஆறு மாதக் குழந்தை ஒன்று உயிரிழந்ததாகக் கூறப்படும் சம்பவம் டெல்லி அரசியலில் பெரும் புயலைக்கிளப்பியுள்ளது.
வடக்கு டெல்லியில் உள்ள ஷக்கூர் பஸ்தி எனும் பகுதியில் அமைக்கப்பட உள்ள புதிய ரயில் நிலையத்திற்காக, ரயில்வே நிர்வாகம் அந்த பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 500-க்கும் மேற்பட்ட குடிசைகளை அகற்றியது. அப்போது, ஆறு மாத பெண் குழந்தை ஒன்று இறந்ததாகக் கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து விவாதிக்க மக்களவையில் ஆம் ஆத்மி உறுப்பினர்கள் கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டுவர நோட்டீஸ் அளித்தனர். ஆனால் மக்களவைத் தலைவர் சுமித்ரா மகஜான் அதனை ஏற்க மறுத்துவிட்டார்.

இதையடுத்து அவையில் இருந்து வெளிநடப்பு செய்த ஆம் ஆத்மி மற்றும் திரிணமூல் காங்கிரஸ் உறுப்பினர்கள் நாடாளுமன்றத்துக்கு வெளியே அமர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதுகுறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, ஆம் ஆத்மி கட்சி உறுப்பினர்கள் ஏன் ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள்? டெல்லியை அவர்கள்தானே ஆட்சி செய்கின்றனர்?,ஷக்கூர் பஸ்தி சம்பவத்திற்கு அவர்கள் தானே பொறுப்பு என்றார்.
தனது டிவிட்டர் பக்கத்தில் இதற்கு பதில் அளித்துள்ள முதல்வர் அரந்வித் கெஜ்ரிவால், ராகுல் இன்னும் குழந்தைத்தனமாகவே இருக்கிறார். ரயில்வே நிர்வாகம் மத்திய அரசின் கீழ் தான் வருகிறது என்பதை அவரது கட்சியினர் யாரும் ராகுலுக்கு சொல்லித்தரவில்லையா?- என்று கூறியுள்ளார். மற்றொரு ஆம் ஆத்மி தலைவரான சஞ்சய் சிங் கூறுகையில், ராகுல் காந்தி சுய நினைவில்லாமல் இருக்கிறார். நேஷனல் ஹெரல்டு வழக்கில் ராகுலுக்கும், மோடிக்கும் இடையே ரகசிய ஒப்பந்தம் ஏற்பட்டுவிட்டதால், தற்போது ஆம் ஆத்மி மீது அவர் குற்றம்சாட்டுகிறார் என்றார்.
இதுகுறித்து பதிலளித்த மத்திய அமைச்சர் வெங்கைய நாயுடு, டெல்லியில் கடும் குளிர் நிலவி வரும் வேளையில் ரயில்வே நிர்வாகம் இத்தகைய அவசர முடிவை எடுத்திருக்க வேண்டியதில்லை என்றார். ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு கூறும்போது, ஷக்கூர் பஸ்தியில் ஆக்கிரமிக்கப்பட்ட குடிசைகளை விட்டு வெளியேறுமாறு பலமுறை அவர்களுக்கு நோட்டிஸ் அனுப்பப்பட்டது. இருந்தபோதும் அவர்கள் குடிசையை விட்டு வெளியேறவில்லை. குடிசை இடிக்கப்பட்டபோது குழந்தை இறந்ததாகக் கூறப்படுவதில் உண்மை இல்லை, குடிசைகளை அகற்றுவதற்கு பல மணி நேரங்களுக்கு முன்பாகவே குழந்தை இறந்துவிட்டது என்றார்.
இதனிடையே, ஆறு மாத குழந்தை உயிரிழந்தது குறித்து நீதிமன்ற விசாரணைக்கு அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications