காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் சம்பவங்கள்.. இதோ லிஸ்ட்.. மணிப்பூர் அரசுக்கு அசாம் முதல்வர் சப்போர்ட்
திஸ்பூர்: மணிப்பூர் பழங்குடியின பெண்கள் மீது நடத்தப்பட்ட பாலியல் வன்கொடுமை சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் ஏதும் நடக்கவில்லையா என்று அசாம் முதலமைச்சர் கேள்வியெழுப்பியுள்ளார்.
மணிப்பூர் மாநிலத்தில் 40 சதவிகிதமாக இருக்கும் குக்கி, ஜோ, நாகா உள்ளிட்ட பழங்குடியின மக்களின் உரிமைகளை பறிக்கும் வகையில், பழங்குடிகள் அல்லாத 53 சதவிகித மெய்டெய் மக்களையும் பழங்குடி பட்டியலில் சேர்க்க பாஜக முன்வந்தது. இந்த முழுக்கத்தை முன்வைத்து கடந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. இந்நிலையில், தங்கள் உரிமைகளை பாதுகாக்க பழங்குடி மக்கள் போராட, அவர்களை எதிர்த்து மெய்டெய் மக்கள் போராட்டம் நடத்த ஒரு கட்டத்தில் இந்த போராட்டங்கள் வன்முறையாக வெடித்தது.

இந்த வன்முறையில் அரசின் அதிகாரப்பூர்வ கணக்குப்படி 160க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். பல பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். அதேபொல 5,036 தீவைப்பு வழக்குகள் பதிவாகியுள்ளன, வன்முறைகள் தொடர்பாக 5,889 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 144 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மாநிலத்தில் சுமார் 36,000 பாதுகாப்புப் படை வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர், 40 இந்திய காவல் சேவை (ஐபிஎஸ்) அதிகாரிகள் மற்றும் 20 மருத்துவக் குழுக்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். எனினும், இப்போது வரை மணிப்பூரில் அமைதி திரும்பவில்லை. 300-க்கும் மேற்பட்ட முகாம்களில் 60 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் தங்கியுள்ளனர். 350 தேவாலயங்களும், சுமார் 20 கோயில்களும் பிற வழிபாட்டுத்தலங்களும் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையில் கடந்த மே 4ம் தேதி குக்கி மற்றும் ஜோ பழங்குடி சமூகத்தை சேர்ந்த இரண்டு பெண்கள் வன்முறையாளர்களால் நிர்வாணமாக அழைத்து செல்லப்பட்டு கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பான வீடியோ நேற்று முன்தினம் வெளியாகி பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் மணிப்பூர் அரசை கண்டித்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
குறிப்பாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இந்த விவகாரம் குறித்த பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் விளக்கமளிக்க வேண்டும் என்றும், மணிப்பூர் பாஜக அரசை டிஸ்மிஸ் செய்துவிட்டு குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்றும் மழைக்கால கூட்டத்தொடரையே முடக்கியுள்ளது. இந்நிலையில், மணிப்பூர் அரசுக்கு அசாம் முதலமைச்சர் சப்போர்ட் செய்திருக்கிறார். அதாவது, காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் இதுபோன்ற பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நடக்கவில்லையா என கேள்வியெழுப்பியுள்ளார்.
வடகிழக்கு ஜனநாயக கூட்டணியின் ஒருங்கிணைப்பாளரான அசாம் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா, "இந்த சம்பவம் தொடர்பாக நீண்ட காலத்திற்கு முன்னரே வழக்குப்பதிவு செய்யப்பட்டுவிட்டது. ஆனால் இதை வைத்து காங்கிரஸ் அரசியல் செய்கிறது. இந்த ஒரு சம்பவத்தை வைத்து காங்கிரஸ் ஒட்டுமொத்த மணிப்பூர் மாநிலத்தையே இழிவுப்படுத்திவிட்டது. எனவே ராகுல் காந்தி இதுதொடர்பாக மன்னிப்பு கேட்க வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.
மேலும், காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தான், நிதிஷ்குமாரின் பீகார் மாநிலங்களில் நடைபெற்ற சமீபத்திய குற்றங்களை அடுக்கடுக்காக பதிவு செய்து, காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் ஏதும் நடக்காததுபோல் குற்றச்சாட்டுகள் வருகிறது" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications