பற்றி எரியும் திருப்பதி லட்டு விவகாரம்.. உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணை
அமராவதி: திருப்பதியில் பக்தர்களுக்குப் வழங்கப்படும் லட்டுப் பிரசாதத்தில் மாடு, பன்றி, மீன் உள்ளிட்ட விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் உள்ள பக்தர்களை அதிர்ச்சிக்குள்ளாகியுள்ள நிலையில், இச்சம்பவம் தொடர்பாக விசாரிக்க கோரியிருந்த மனுக்கள் வரும் திங்கள்கிழமையன்று (செப்டம்பர் 30) உச்சநீதிமன்றம் விசாரிக்க உள்ளது.
திருப்பதியில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோயிலில் பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளைத் தயாரிக்க விலங்குகளின் கொழுப்பை பயன்படுத்தியதாக தற்போதைய முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறியுள்ளது ஆந்திர அரசியலில் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் ஆட்சியில் திருமலையின் புனிதத்தைக் கெடுத்துவிட்டனர். திருப்பதி லட்டில் நெய்க்குப் பதிலாக விலங்குகளின் கொழுப்பைப் பயன்படுத்தி அசுத்தப்படுத்திவிட்டனர் என்று குற்றச்சாட்டு வைத்தார்.

இதையடுத்து, கடந்த திங்கள்கிழமை தேவஸ்தானம் சார்பில் கோயிலில் தீட்டு கழிப்பதற்காக பரிகார பூஜைகள் நடத்தப்பட்டன. திருமலையில் மட்டுமல்லாமல் மாநிலத்தில் உள்ள அனைத்துக் கோயில்களிலும் சிறப்பு பூஜைகள் நடத்த அரசு முடிவெடுத்துள்ளது. இனிமேல் திருப்பதி லட்டு பிரசாதத்தில் கர்நாடக கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சம்மேளனத்தின் நந்தினி நெய்யை பயன்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி சியாமளா ராவ், திருப்பதி பிரசாதமான லட்டு மற்றும் நெய்யின் தரத்தில் இனி எந்தவிதமான சமரசமும் இருக்காது என்று தெரிவித்திருந்தார். இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த ஆந்திரா அரசு சார்பில் சிறப்பு விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது. ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் கடந்த ஞாயிற்றுக்கிழமை பரிகாரத்தை துவங்கினார். இந்த பரிகாரம் அக்டோபர் 2 ஆம் தேதி ஏழுமலையான் கோயிலில் நிறைவடையவுள்ளது.
அக்டோபர் 1 ஆம் தேதி துணை முதல்வர் பவன் கல்யாண் அலிபிரி வழியாக பாத யாத்திரையாக வந்து சுவாமியை தரிசனம் செய்து தீட்சையை நிறைவு செய்யவுள்ளார். இதற்கிடையே, திருப்பதி கோயிலில் பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படும் லட்டு பிரசாதத்தின் புனித்தைக் கெடுக்கும் வகையில் முதல்வர் சந்திரபாபு நாயுடு செய்த பாவத்தைப் போக்க சிறப்பு பூஜை இன்று நடத்தப்படவுள்ளது என்று கூறி ஜெகன்மோகன் ரெட்டி சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது.
ஆனால், ஏழுமலையான் மீது நம்பிக்கையுள்ளது என தெரிவிக்கும் தேவஸ்தான ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்ட பின்னரே ஜெகனை கோயிலுக்குள் அனுமதிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் மத்தியில் இருந்தும் கோரிக்கை வலுத்ததால் ஜெகனமோகனின் பயணம் ரத்து செய்யப்பட்டாக நேற்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், திருப்பதி லட்டு தயாரிக்க விலங்குகளின் கொழுப்பைப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக விசாரிக்க கோரியிருந்த மனுக்கள் மீதான உச்சநீதிமன்ற விசாரணை செப்டம்பர் 30 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
பாஜக தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி எம்பியும், திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் முன்னாள் தலைவருமான சுப்பா ரெட்டி ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர். இவர்களின் மனுக்களை நீதிபதிகள் பி.ஆர்.கவாய், கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் கொண்ட அமர்வு விசாரிக்க உள்ளது.
பாஜக தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தாக்கல் செய்த மனுவில், திருப்பதி லட்டு தயாரிக்கப் பயன்படுத்தப்படும் நெய் குறித்த விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய ஆந்திரப்பிரதேச அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றும், விரிவான தடயவியல் அறிக்கை கோரியும் தெரிவிக்கப்பட்டிருந்தது
அதேபோல, எம்பி சுப்பா ரெட்டி தாக்கல் செய்திருந்த மனுவில், முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் குற்றச்சாட்டுகளை விசாரிக்க ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதியால் கண்காணிக்கப்படும் சுதந்திரமான சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications