பதம் பார்த்த கூர்மையான ஆயுதங்கள், தீப்பந்தம்.. மேற்கு வங்கத்தில் யானை உயிரிழந்த சோகம்
கொல்கத்தா: ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 12ம் தேதி சர்வதேச யானைகள் தினம் கொண்டாடப்படும். அதன்படி இந்தாண்டு கடந்த திங்கள் கிழமை யானைகள் தினம் கொண்டாடப்பட்டது. அந்த நாளில் யானைகளின் முக்கியத்துவம் குறித்து பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. யானைகள் தினம் கொண்டாடப்பட்டு ஒரு வாரம் முடிவதற்குள் மேற்கு வங்க மாநிலத்தில் ஒரு யானை மிகவும் பரிதாபகரமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
காடுகளை ஒட்டிய பகுதிகளில் யானைகள் நடமாட்டம் வழக்கமாகிவிட்டது. நாடு முழுவதுமே யானை - மனித மோதல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. யானைகளின் வழித்தடங்களில் ஏற்பட்ட மாற்றங்கள் ஒருபக்கம் என்றால், யானைகள் தங்களின் வீடுகளையும், விளை நிலங்களையும் சேதப்படுத்துவதாக மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். காட்டில் இருந்து வெளியில் வரும் யானைகளை மக்கள் வனத்துறையினருடன் இணைந்து காட்டுக்குள் விரட்டியடிப்பது வழக்கம். தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா போல மேற்கு வங்க மாநிலத்திலும் யானை - மனித மோதல் மிகப்பெரிய பிரச்னையாக உருவெடுத்துள்ளது.

இந்நிலையில், மேற்கு வங்க மாநிலம், ஜர்கிராம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இரண்டு குட்டி யானைகளுடன், ஆறு காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்துள்ளன. யானைகள் ஊருக்குள் வந்ததால் அங்கு பதற்றம் தொற்றி கொண்டது. பாதிப்பை தடுப்பதற்காக உள்ளூர் மக்கள் யானைகளை விரட்டுவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். யானைகள் கோபமடைந்து சுற்றுசுவர்களை இடித்து சேதப்படுத்தின. மேலும் யானைகள் தாக்கியதில் அந்த ஊரில் இருந்த முதியவர் ஒருவர் உயிரிழந்தார்.
பொதுவாக யானைகளை விரட்டுவதற்காக, வனத்துறையினர் அங்கு 'ஹுல்லா’ என்ற அணியினருக்கு சிறப்புப் பயிற்சி வழங்கியுள்ளனர். இதையடுத்து அந்த யானைக் கூட்டத்தை விரட்ட ஹுல்லா அணியினர் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் கூர்மையான ஆயுதங்கள் மற்றும் தீப்பந்தங்களை யானைகள் மீது எறிந்து விரட்டியடித்தனர்.
யானைகள் ஒரு மைதானத்தில் நின்றபோது ஹுல்லா அணியினர் தீப்பந்தங்கள் மற்றும் கூரிய ஆயுதங்களால் தாக்கியதில், ஒரு பெண் யானை பலத்த காயமடைந்தது. இதனால் அந்த யானை சரியாக நடக்க முடியாமல் தவித்தது. கூர்மையான தீப்பந்தம் பெண் யானையின் முதுகெலும்பில் சிக்கி பாதிப்படைய செய்தது. அந்த யானையை வனத்துறையினர் மீட்டு சிகிச்சை அளித்தனர். ஆனால் மருத்துவக் குழுவின் முயற்சி கைக்கொடுக்கவில்லை. சிகிச்சை பலன் இல்லாமல் யானை பரிதாபமாக உயிரிழந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக காட்டூயிர் ஆர்வலர் பிரார்னா சிங் பிந்த்ரா சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர், நாம் யானைகளை பாதுகாப்பதாகவும், அவற்றை வணங்குவதாகவும் கூறுகிறோம். ஆனால் அவற்றிற்கு வாழ இடம் கொடுக்க மறுக்கிறோம். யானைகளை விரட்ட தீப்பந்தங்கள் பயன்படுத்துவதற்கு உச்ச நீதிமன்றம் கடந்த 2018 ஆம் ஆண்டு தடை விதித்தது. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை கடைபிடிப்பதில்லை.
முக்கியமாக வனத்துறைக்கு தெரிந்தே ஹுல்லா அணியினர், தீப்பந்தங்களைப் பயன்படுத்தி, யானைகளைத் தாக்குவதையும், விரட்டுவதையும் வாடிக்கையாக வைத்துள்ளனர்.” என்று குற்றம்சாட்டியுள்ளார். இதேபோல நிற்கவே முடியாத ஒரு யானையை புல்டோசரை பயன்படுத்தி காட்டுக்குள் தள்ளினர் என்றும் பிந்த்ரா குற்றம் சாட்டியிருக்கிறார்.
இந்த சம்பவம் நாடு முழுவதும் உள்ள வன விலங்கு ஆர்வலர்களிடையே அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. "உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை முறையாக கடைபிடித்து யானைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்." என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.












Click it and Unblock the Notifications