3 நாட்களில் 2 வது சம்பவம் - இந்தியாவில் அடுத்தடுத்து திடீர் மரணமடைந்த முன்னணி பாடகர்கள்
கொல்கத்தா: கேரளாவை சேர்ந்த பிரபல பாடகர் எடவா பஷீர் கடந்த 29 ஆம் தேதி மேடையிலேயே மயங்கி விழுந்து உயிரிழந்த நிலையில், நேற்று கொல்கத்தாவில் பிரபல பாடகர் கிருஷ்ணகுமார் குன்னத் மாரடைப்பால் மரணித்துள்ளார்.
கேரள தலைநகரான திருவனந்தபுரத்தின் எடவா பகுதியை சேர்ந்தவர் பஷீர். மலையாள இசை பிரியர்கள் மத்தியில் எடவா பஷீர் என்றால் மிகவும் பிரபலம்.
78 வயதாகும் இவர் ஏராளமான மலையாள திரைப்படங்களில் பின்னணி பாடல்களை பாடி இருக்கிறார்.

எடவா பஷீர்
திரைப்படங்கள் மட்டுமின்றி சங்கீதாலயா என்ற இசைக்கச்சேரி குழுவையும் இவர் நடத்தி வருகிறார். எடவா பஷீர் திரைப்பட பாடல்கள் மட்டுமின்றி கச்சேரிகளிலும் பிரபலமான முகமாக அறியப்பட்டு வந்தார். கேரளாவின் எந்த பகுதியில் கச்சேரி, நிகழ்ச்சிகள் நடந்தாலும் அங்கு எடவா பஷீரின் குரல் ஒலிக்கும் அளவுக்கு புகழ் பெற்று இருந்தார்.

மேடையில் மயக்கம்
கேரளா மட்டுமின்றி வெளிநாடுகள், வெளிமாநிலங்களுக்கும் சுற்றுப் பயணம் செய்து பாடல் கச்சேரிகளை நடத்தி வந்தார். 50 ஆண்டுகளுக்கும் மேலாக தனது குரல் வளத்தால் மலையாள மக்களை கட்டிப்போட்டு வைத்திருந்த எடவா பஷீர் கடந்த 29 ஆம் தேதி ஆலப்புழாவில் நடைபெற்ற கச்சேரியில் பாட்டுப்பாடிக் கொண்டிருந்தபோதே மயங்கி விழுந்தார்.

ரசிகர்கள் அதிர்ச்சி
அங்கிருந்தவர்கள் பதறியடித்து எடவா பஷீரை தூக்கிக்கொண்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அவரை பரிசோதித்துப் பார்த்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். பஷீரின் மரணம் ஒட்டுமொத்த இசை ரசிகர்களையுமே அதிர்ச்சியில் ஆழ்த்தியது. கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், திரையுலக பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் பலர் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்தனர்.

கிருஷ்ணகுமார் குன்னன் (கே.கே.)
இந்த அதிர்ச்சி அடங்குவதற்குள் கொல்கத்தாவில் மற்றொரு சம்பவம் நடந்துள்ளது. தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் ஏராளமான பாடல்களை பாடிய கிருஷ்ணகுமார் குன்னத் கொல்கத்தாவின் நஸ்ருல் மஞ்சா என்ற அரங்கத்தில் நேற்று நடைபெற்ற இசை நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார்.

திடீர் மரணம்
ரசிகர்களை தனது அழகிய குரல்வளத்தால் மயக்கிவிட்டு தான் தங்கியிருந்த விடுதியின் அறைக்கு திரும்பிய அவர், படிக்கட்டுகளில் ஏறும்போது மயங்கி விழுந்தார். படிக்கட்டுகளில் உருண்டு கீழே விழுந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே உயிர் பிரிந்துவிட்டதாக தெரிவித்தனர்.
Recommended Video

தமிழில் பாடிய ஹிட் பாடல்கள்
பாலிவுட்டில் அறிமுகமாகி இருந்தாலும் பிரபலமான பல தமிழ் பாடல்களை பாடி உள்ளார். 7ஜி ரெயின்போ காலனியில் வரும் நினைத்து நினைத்து பார்த்தேன், கில்லி படத்தின் அப்படி போடு, ரெட் திரைப்படத்தில் இடம்பெற்ற ஒல்லிக்குச்சி உடம்புக்காரி, காக்க காக்கவில் வரும் உயிரின் உயிரே, உள்ளிட்டவை கேகே பாடியது. அவரது மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, அரசியல் பிரபலங்கள், திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications