ஓயாத திருப்பதி லட்டு சர்ச்சை: உத்தராகண்ட் நெய் நிறுவனத்தில் அதிரடி ரெய்டு! 70,000 கிலோ நெய் சப்ளையா?
ரூர்கி: திருப்பதி லட்டு தயாரிக்க கலப்பட நெய் பயன்படுத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள நெய் தயாரிப்பு நிறுவனத்தில் அதிகாரிகள் சோதனை நடத்தி உள்ளனர். ஆந்திராவில் இருந்து சென்ற உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள், உத்தராகண்ட் மாநில உணவு பாதுகாப்பு அதிகாரிகளுடன் இணைந்து ஆய்வு நடத்தி உள்ளனர்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். அவர்களுக்கு பிரசாதமாக லட்டு வழங்கப்படுகிறது. திருப்பதி லட்டுக்கு என்றே பெரும் ரசிகர் கூட்டம் உள்ளது. இந்நிலையில், முந்தைய ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சியில் திருப்பதி லட்டுவில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டதாக தற்போதைய ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.

சந்திரபாபுவின் இந்த குற்றச்சாட்டுக்கு ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்தது. ஆனால் அடுத்த நாளே ஒரு ஆய்வக பரிசோதனை அறிக்கை வெளியானது. திருப்பதி லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யை பரிசோதனை செய்த ஆய்வகத்தின் அறிக்கையின்படி, நெய்யில் மாட்டுக் கொழுப்பு, பன்றி கொழுப்பு மற்றும் மீன் எண்ணெய் ஆகியவை உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதனால் இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்தது.
திருப்பதி திருமலை தேவஸ்தானத்துக்கு நெய் சப்ளை செய்யும் திண்டுக்கல் ஏ.ஆர் டெய்ரி ஃபுட் நிறுவனம் மீது திருப்பதி தேவஸ்தானம் போலீசில் புகார் அளித்தது. திருப்பதி கோயிலுக்கு விநியோகித்த நெய்யில் நிபந்தனைகளை மீறி கலப்படம் செய்து 4 டேங்கர் லாரிகளில் ஏ.ஆர் டெய்ரி நிறுவனம் விநியோகம் செய்ததாக அந்த புகார் மனுவில் குற்றம்சாட்டப்பட்டது.
திருப்பதி லட்டு விவகாரத்தில் கலப்பட நெய் அனுப்பியதாக திண்டுக்கல் ஏ.ஆர் டெய்ரி ஃபுட் நிறுவனம் மீது திருப்பதி கிழக்கு காவல் நிலையத்தில் 10 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட கலப்பட நெய், திண்டுக்கல் ஏ.ஆர் டெய்ரி ஃபுட் நிறுவனத்தில் தயாரிக்கப்படவில்லை என்றும், ஏ.ஆர் டெய்ரி நிறுவனம் தெலுங்கானாவைச் சேர்ந்த வைஷ்ணவி டெய்ரி நிறுவனத்தில் இருந்து அந்த நெய்யை வாங்கியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், திருப்பதி லட்டு கலப்பட நெய் விவகாரம் தொடர்பாக உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள நெய் தயாரிப்பு நிறுவனத்தில் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். ரூர்கியில் உள்ள பகவான்பூரில் அமைந்துள்ள நெய் தயாரிப்பு நிறுவனத்தில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். ஆந்திராவில் இருந்து சென்ற உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள், உத்தராகண்ட் மாநில உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகளுடன் இணைந்து ஆய்வு நடத்தினர்.
திருப்பதி லட்டு தயாரிக்க உத்தராகண்ட் மாநிலம் ரூர்கியில் உள்ள நெய் நிறுவனம் 70,000 கிலோ நெய் விநியோகம் செய்துள்ளது. இந்நிலையில், அங்கு இந்த ஆய்வு நடைபெற்றுள்ளது. அங்கு நெய் மாதிரிகளை சேகரித்து உணவுப் பாதுகாப்பு சோதனைக்கு அனுப்பி உள்ளனர். மாட்டுக் கொழுப்பு சர்ச்சை விவகாரத்தில் அடுத்தடுத்து பரபரப்பு நிலவி வருகிறது.












Click it and Unblock the Notifications