கார்த்தி சிதம்பரத்திற்கு எதிரான சிபிஐயின் ஆயுதம் இதுதான்!
Recommended Video

டெல்லி: கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய இந்திராணி முகர்ஜி அளித்த வாக்குமூலம் உதவியாக இருந்ததாக சிபிஐ வட்டாரங்கள் கூறுகின்றன.
மும்பையைச் சேர்ந்த இந்திராணி முகர்ஜி, அவரது கணவர் பீட்டர் முகர்ஜி ஆகியோர் நடத்தி வந்த 'ஐஎன்எக்ஸ் மீடியா' என்ற தொலைக்காட்சி நிறுவனம், விதிமுறைகளை மீறி ரூ.305 கோடிக்கு தனது பங்குகளை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்றுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதற்கு அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தின் தடையில்லா சான்றிதழ் வாங்குவதற்காக கார்த்தி சிதம்பரம் உதவி செய்ததாகவும் இதில், கார்த்தி சிதம்பரத்தின் நிறுவனங்களுக்கு மொரீஷியஸ் நாட்டில் இருந்து பணம் வந்துள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இந்திராணி முகர்ஜி
ஷீனா போரா கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள, இந்திராணி முகர்ஜி, மகாராஷ்டிர மாநிலம், மும்பை பைகுல்லா மகளிர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐ அவரிடம் விசாரணை நடத்தியிருந்தது. அப்போது, அவர் கார்த்தி சிதம்பரத்திற்கு எதிராக வாக்குமூலம் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

அனுமதிக்கு மறுப்பு
இதுகுறித்து சிபிஐ வட்டாரங்கள் கூறுகையில், அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்திடம் ரூ.305 கோடிக்கு தடையில்லா சான்று கேட்டபோது, அது வெறும் ரூ.5 கோடிக்கு மட்டுமே அனுமதித்ததாக கூறியுள்ளார். இதையடுத்து செய்வதறியாது திகைத்துள்ளார்.

கார்த்தி செய்துகாட்டினார்
இதையடுத்து கார்த்தி சிதம்பரம் நடத்திய செஸ் மேனேஜ்மென்ட் என்ற நிறுவனத்தை அணுகியதாகவும், அதற்கு சேவை கட்டணமாக ரூ.10 லட்சம் வழங்கியதாகவும், இதையடுத்து, அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரிய அனுமதி கிடைத்துவிட்டதாகவும் கூறியுள்ளார். இது நடைபெற்றபோது மத்திய நிதி அமைச்சராக ப.சிதம்பரம் பதவி வகித்தது குறிப்பிடத்தக்கது.

சிபிஐக்கு ஆயுதம்
இந்திராணி முகர்ஜி அளித்த இந்த வாக்குமூலம் அடிப்படையில், கார்த்தி சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ இன்று டெல்லி, பாட்டியாலா நீதிமன்றத்தில் அனுமதி கேட்கும் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications