ம்ஹூம்.. அசைய மறுக்கும் கெஜ்ரிவால்.. 2000 போலீஸார் குவிப்பு.. டென்ஷன் டெல்லி!
டெல்லி: டெல்லியில் நிலவும் கடும் குளிர் மற்றும் லேசான மழை ஆகியவற்றுக்கு மத்தியிலும் கெஜ்ரிவாலும் அவரது அமைச்சரவை சகாக்களும், ஆதரவாளர்களும் போராட்டத்தைக் கைவிடாமல் தொடர்ந்து கொண்டுள்ளனர். இதனால் தொடர்ந்து பதட்டம் நிலவுகிறது.
எந்தவிதமான பிரச்சினையும் ஏற்பட்டு விடாமல் கண்காணிப்பதிலும், போராட்டக்காரர்கள் வேறு பகுதி வழியாக அமைச்சரக அலுவலகங்களுக்குள் ஊடுறுவிடாமல் தடுப்பதிலும் போலீஸார் கடுமையான கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
கிட்டத்தட்ட 2000 போலீஸார், போராட்டம் நடந்து வரும் பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர்.

ரொம்பக் கஷ்டமப்பா
டெல்லி போலீஸார் மிகக் கடுமையான நெருக்கடியில் தற்போது உள்ளனர். ஆம் ஆத்மியினரின் போராட்டத்தை தடுத்து நிறுத்தியுள்ள போதிலும் அவர்கள் வேறு மார்க்கத்தில் போராட்டத்தை விஸ்தரித்து விடாமல் தடுப்பில் கண்காணிப்பாக இருக்க வேண்டிய நிலையில் போலீஸார் உள்ளனர்.

16 டிசி.. ஆயிரக்கணக்கான பிசி
16 துணை கமிஷனர்கள் தலைமையில் 2000 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்தப் படையில் 34 உதவி கமிஷனர்கள், 50க்கும் மேற்பட்ட இன்ஸ்பெக்டர்களும் இடம் பெற்றுள்ளனர். இவ்வளவு அலர்ட்டாக இது நாள் வரை இவர்கள் இருந்திருப்பார்களோ என்னவோ.. அப்படி ஒரு அலர்ட்னஸ்ஸில் இந்தக் காவலர்கள் கடமையில் உள்ளனர்.

காலை 6 மணி முதல்
இந்தப் போலீஸார் காலை 6 மணி முதல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவர்களது முக்கிய வேலையே கெஜ்ரிவால் உள்ளிட்டோர் இப்போது இருக்கும் இடத்தை விட்டு வேறு இடத்திற்கு எஸ்கேப் ஆகி போய் விடாமல் கண்காணிப்பதுதான். மேலும் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படாமலும் அவர்கள் பார்த்துக் கொள்ள வேண்டியுள்ளது.

இந்தப் பக்கம் போராட்டம்.. அந்தப் பக்கம் பரேடு
ஒருபக்கம் போராட்டம் நடந்து வரும் நிலையில் குடியரசு தின விழா அணிவகுப்பு ஒத்திகை மற்றொரு பகுதியில் அதாவது இதே பகுதியில் இன்னொரு இடத்தில் நடந்து வருகிறது. அதற்கு குந்தகம் ஏற்படாத வகையிலும் இந்தப் போலீஸ் படை கண்காணிப்புடன் காவல் காத்து வருகிறது.

அந்தாண்டை இந்தாண்ட நகரை முடியலையே
இங்கு பாதுகாப்பில் ஈடுபட்டிருக்கும் போலீஸாரால் சாப்பிடக் கூட போக முடியாத அளவுக்கு டென்ஷனான நிலை நிலவி வருகிறது. இதனால் போலீஸார் பசியையும் தாங்கியபடி காவல் காத்து நிற்கின்றனர்.

மறு உத்தரவு வரும் வரை மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடல்
இதற்கிடையே, நார்த் பிளாக் பகுதிக்குட்பட்ட படேல் செளக், சென்ட்ரல் செக்ரட்டரியேட், உத்யோக் பவன், ரேஸ் கோர்ஸ் ஆகிய நான்கு மெட்ரோ ரயில் நிலையங்களையும் மறு உத்தரவு வரும் வரை திறக்க வேண்டாம் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே அவை தொடர்ந்து மூடப்பட்டுள்ளன. நேற்று முதலே இவை மூடிக் கிடக்கின்றன. இதுதொடர்பான உத்தரவு நேற்று இரவு பிறப்பிக்கப்பட்டது.

பயணிகள் பேரவதி
இந்த ரயில் நிலைய மூடலால் தலைமைச் செயலகத்திற்கு ரயிலில் வரும் அரசு ஊழியர்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். மற்ற பயணிகளின் நிலையும் மோசமாகவே உள்ளது. அத்தனை பேரும் பாதிக்கப்ட்டுள்ளனர்... அதாவது ஆம் ஆத்மியினரின் போராட்டத்தால் ஆம் ஆத்மியான சாமானிய மக்களுக்கே பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தடுப்புகளை உடைத்து ஆதரவாளர்களை இழுக்க முயன்ற கெஜ்ரிவால்
இதற்கிடையே, போராட்டத்தில் கலந்து கொள்ள வரும் ஆதரவாளர்களை தான் இருக்கும் பகுதிக்குள் இழுக்கும் நோக்கத்தில், முதல்வர் கெஜ்ரிவால், போலீஸ் தடுப்புகளை உடைக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும் அவரது முயற்சி பலனளிக்கவில்லை.

மழை - குளிரைப் பொருட்படுத்தாமல்
நேற்று இரவு முழுவதும் கடும் குளிர் வீசியபோதிலும் கம்பளிப் போர்வையை இறுக்கமாக போர்த்தியபடி சாலையோரமாகவே கழித்தார் கெஜ்ரிவால். இன்று லேசான மழையும் பெய்தது. ஆனாலும் போராட்டம் கலையவில்லை.












Click it and Unblock the Notifications