"மோப்ப நாய்.." கொல்கத்தா மருத்துவர் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை.. திரிணாமுல் எம்பிக்கு சம்மன்
கொல்கத்தா: கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. இதற்கிடையே இந்த விவகாரத்தில் இப்போது திரிணாமுல் காங்கிரஸ் எம்பி சுகேந்து சேகர் ரேக்கு கொல்கத்தா போலீசார் சம்மன் அனுப்பியுள்ளது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கார் மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுக் கொல்லப்பட்டார். இந்த விவகாரத்தில் இதுவரை ஒருவர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த விவகாரத்தால் அங்கே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே இந்த விவகாரம் தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் எம்பி சுகேந்து சேகர் ரேக்கு கொல்கத்தா போலீசார் இன்று சம்மன் அனுப்பியுள்ளது.
நோட்டீஸ்: இன்று மாலை சுகேந்து சேகர் விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. கொல்கத்தா பயிற்சி மருத்துவர் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக சுகேந்து சேகர் சில கருத்துகளைக் கூறிய நிலையில், அந்த விவகாரத்தில் தான் இவருக்கு இப்போது நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
அதாவது இந்த விவகாரத்தில் திரிணாமுல் காங்கிரஸ் எம்பி சுகேந்து சேகர், "சிபிஐ நியாயமாகச் செயல்பட வேண்டும். அந்த மருத்துவர் தற்கொலை செய்து கொண்டதாக முதலில் தகவலைப் பரப்பியது ஏன் என்பது குறித்து கல்லூரியின் முன்னாள் முதல்வர் மற்றும் போலீஸ் கமிஷனரை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டியது அவசியம். மேலும், செமினார் ஹாலின் சுவர் அவசர அவசரமாக இடிக்கப்பட்டது ஏன்?
மோப்ப நாய்: இந்த விவகாரத்தில் (கைதான) ராய்க்கு பின்னணியில் இருப்பது யார்? சம்பவம் நடந்த இடத்தில் 3 நாட்களுக்குப் பிறகு மோப்ப நாய் பயன்படுத்தப்பட்டது ஏன்? இதுபோல பல நூறு கேள்விகள் இருக்கிறது.. இதற்கான பதிலை சிபிஐ தான் சொல்ல வேண்டும்" என்று ட்வீட் செய்திருந்தார். அவரது இந்த ட்வீட்டிற்காகவே இப்போது கொல்கத்தா போலீசார் அவருக்குச் சம்மன் அனுப்பியுள்ளனர்.
மேலும், மூன்று நாட்களுக்குப் பிறகு குற்றம் நடந்த இடத்திற்கு மோப்ப நாய்கள் அனுப்பப்பட்டதாக சுகேந்து சேகர் கூறியுள்ள நிலையில், அதைக் கொல்கத்தா போலீசார் திட்டவட்டமாக மறுத்துள்ளனர், இது குறித்து போலீசார் கூறுகையில், "மூன்று நாட்களுக்குப் பிறகு மோப்ப நாய் அனுப்பப்பட்டது என்ற தகவல் முற்றிலும் தவறானது. மோப்ப நாய் இரண்டு முறை அனுப்பப்பட்டது, 9ஆம் தேதி ஒரு முறையும், பின்னர் ஆகஸ்ட் 12-ஆம் தேதி மற்றொரு முறையும் அனுப்பப்பட்டது. இப்போது பிஎன்எஸ் பிரிவு 35(1)-ன் கீழ் சுகேந்து சேகர் ரேக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது" என்று கூறப்பட்டுள்ளது.
கொல்கத்தா போலீஸ்: ஏற்கனவே இந்த விவகாரத்தில் தவறான தகவல்களைப் பரப்பியதாக நடிகரும், பாஜக தலைவருமான லாக்கெட் சட்டர்ஜிக்கு கொல்கத்தா போலீஸ் சம்மன் அனுப்பியுள்ளது. மேலும், மருத்துவர்கள் குணால் சர்க்கார் மற்றும் சுபர்னோ கோஸ்வாமி ஆகியோருக்கும் கொல்கத்தா போலீஸ் சம்மன் அனுப்பி இருந்த நிலையில், இப்போது திரிணாமுல் கட்சியின் எம்பிக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
விமர்சனம்: அதேபோல சுகேந்து ரேயின் இந்த கருத்தை சக திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் குணால் கோஷ் கடுமையாக விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டரில், "ஆர்.ஜி.கார் வழக்கில் நீதி வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.. ஆனால் சுகேந்து ரேயின் கருத்தை நான் கடுமையாக எதிர்க்கிறேன். கொல்கத்தா போலீசார் உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நேரத்தில் சுகேந்து ரேயின் கருத்து ஏற்கும்படி இல்லை" என்று பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications