பாகிஸ்தான் நிருபரின் மூக்கை உடைத்த ஜெய்சங்கர்.. மத்திய அரசு மீது டென்ஷனான ஓமர் அப்துல்லா- என்னாச்சு?
ஜம்மு காஷ்மீர்: ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தான் பத்திரிகையாளர் கேட்ட கேள்விக்கு, ‛பாகிஸ்தான் திருடி ஆக்கிரமித்து வைத்துள்ள காஷ்மீரை மீட்பது தான் இன்னும் மிச்சம் உள்ளது'' என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பதிலளித்தார். அப்போது ஜெய்சங்கர் பேசிய பேச்சுக்கு ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஓமர் அப்துல்லா டென்ஷனாகி கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் நேற்று லண்டனில் பத்திரிகையாளரை சந்தித்தார். அப்போது பாகிஸ்தான் பத்திரிகையாளர் ஒருவர், ‛‛நான் இப்போது ஜெய்சங்கரை கொஞ்சம் பதற்றப்பட வைக்கப்போகிறேன்'' எனக்கூறி காஷ்மீர் தொடர்பாக கேள்வி ஒன்றை எழுப்பினார்.

பாகிஸ்தான் பத்திரிகையாளர், ‛‛காஷ்மீரை இந்தியா சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளது. காஷ்மீர் மக்கள் ஆயுதம் ஏந்தி எதிர்த்து நிற்கின்றனர். காஷ்மீரில் 70 லட்சம் மக்கள் உள்ளனர். இவர்களை கட்டுப்படுத்த 10 லட்சம் ராணுவ வீரர்களை குவித்து இருக்கிறீர்கள். பிரதமர் மோடி தனது நண்பரான அமெரிக்க அதிபர் டிரம்புடன் பேசி காஷ்மீர் பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வருவாரா?'' என்று கேள்வி கேட்டார்.
அதற்கு சற்றும் அசராத ஜெய்சங்கர், ‛‛காஷ்மீர் பிரச்னைகளை தீர்ப்பதில் இந்தியா சிறப்பாக செயல்பட்டு வருகிறது. முதல்படியாக காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370-ஐ நீக்கி உள்ளது. 2வது நடவடிக்கையாக காஷ்மீரின் வளர்ச்சி, பொருளாதார திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. சமூக நீதியை மீட்டெடுத்துள்ளது. 3வது நடவடிக்கையாக அதிக ஓட்டு பதிவாகும் வகையில் தேர்தலை நடத்தி முடித்துள்ளது. இன்னும் ஒரே ஒரு விவகாரம் மட்டும் தான் தீர்க்கப்படாமல் உள்ளது. அந்த பிரச்னை இப்போது இந்தியாவுக்கு வெளியே உள்ளது.
அதுதான் மொத்த இந்தியாவும் காத்திருக்கும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் என்னும் திருடப்பட்ட காஷ்மீர். அதை மட்டும் மீட்டு கொண்டு வந்துவிட்டால் மொத்த காஷ்மீர் பிரச்சனையும் தீர்க்கப்பட்டு விடும் என உங்களிடம் உறுதி அளிக்கிறேன்'' என்று ஜெய்சங்கர் பதில் கொடுத்தார்.
இந்நிலையில் தான் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அளித்த பதிலுக்கு ஜம்மு காஷ்மீர் முதல்வராக தேசிய மாநாட்டு கட்சியை சேர்ந்த ஓமர் அப்துல்லா காட்டமாக கேள்விகளை எழுப்பி உள்ளார். இதுதொடர்பாக அவர் நேற்று ஜம்மு காஷ்மீர் சட்டசபையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் ஓமர் அப்துல்லா பேசியதாவது: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்கும் விஷயத்தில் உங்களை யார் தடுத்தார்கள்? ஜம்மு காஷ்மீரின் ஒருபகுதி பாகிஸ்தானில் உள்ளது. அதனை மீட்டெடுக்க வேண்டாம் என்று எப்போதாவது நாங்கள் கூறினோமோ?
கார்கில் போர் சமயத்தில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்டு எடுத்து இருக்கலாம். ஆனால் அதனை செய்யவில்லை. இப்போது நீங்கள் அதனை மீட்டெடுக்க விரும்பினால் நாங்கள் யாராவது வேண்டாம் என்று கூறினோமோ? பாகிஸ்தான் மட்டுமில்லை. சீனாவும் காஷ்மீரின் ஒருபகுதியை ஆக்கிரமித்து வைத்துள்ளது. சீனா ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் பற்றி ஏன் பேசவில்லை? நீங்கள் (மத்திய அரசு) பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்டெடுக்கும்போது சீனாவின் ஒருபகுதியாக உள்ள ஆக்கிரமிப்பு காஷ்மீரையும் மீட்டெடுத்து வழங்க வேண்டும். இதுதான் எங்களுக்கு உதவியாக இருக்கும்'' என்றார்.
இதுதவிர மத்திய பாஜக அரசை கடுமையாக ஓமர் அப்துல்லா விமர்சனம் செய்தார். அதாவது கடைசி டோக்ரா ஆட்சியாளரான மகாராஜா ஹரிசிங்கின்(ஜம்மு காஷ்மீரை கடைசியாக ஆண்ட மன்னர்) ஜம்மு காஷ்மீர் தொடர்பான பாரம்பரியத்தை பாஜக அழித்துவிட்டது. மாநிலமாக இருந்த ஜம்மு காஷ்மீரை 2 யூனியன் பிரதேசமாகபிரித்து விட்டது. ஜம்மு காஷ்மீரை சேர்ந்த மக்களுக்கான நிலம், வேலைவாய்ப்புகளை உறுதி செய்யும் சட்டத்தை (அரசியலமைப்பு சட்டப்பிரிவு 370) நீக்கிவிட்டது. ஆனாலும் மாநிலத்தில் பயங்கரவாத செயல் உள்ளது. ஜம்மு மற்றும் ரிசி பகுதியில் 2019 ம் ஆண்டுக்கு முன்பு இருந்ததை விட தற்போது பயங்கரவாத தாக்குதல் அதிகரிக்க தொடங்கி உள்ளது என்று சாடி உள்ளார்.













Click it and Unblock the Notifications