ஜார்க்கண்ட் சட்டமன்ற தேர்தல்.. களத்தில் கல்பனா சோரன்! கவனம் பெறும் பெண் வேட்பாளர்கள்!
ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பெண் வேட்பாளர்கள் களத்தில் தீவிரம் காட்டி வருகின்றனர். குறிப்பாக முதல்வர் ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா சோரன் வெற்றிக்காக தீவிரமாக பணியாற்றி வருகிறார்.
சமீப காலங்களாக அரசியல் குழப்பங்கள் அதிகம் நடக்கும் மாநிலங்களில் ஜார்க்கண்டும் ஒன்று. இம்மாநிலத்தில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி ஆட்சியில் இருக்கிறது. எதிர்கட்சியாக பாஜக இருக்கிறது. இந்நிலையில் கடந்த ஆண்டு முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு எதிராக அமலாக்கத்துறை நடவடிக்கையில் இறங்கியது. சட்டவிரோதமாக சுரங்க குத்தகை முறைகேட்டில் சோரன் சிக்கியிருப்பதாகவும், அவருக்கு எதிரான சட்டரீதியான நடவடிக்கையை நாங்கள் மேற்கொள்கிறோம் என ED தனது வேட்டையை தொடங்கியது.

குற்றச்சாட்டு குறித்து விசாரணைக்காக ஆஜராக வேண்டும் என்று சோரனுக்கு தொடர்ந்து சம்மன் அனுப்பியது. எந்த சம்மனுக்கும் அவர் ஆஜராகாத நிலையில், அவரை கைது செய்ய திட்டமிட்டது. ஒரு மாநில முதலமைச்சரை அமலாக்கத்துறை அதிரடியாக கைது செய்வது இதுவே முதல்முறை என்றும் பேசப்பட்டது. இறுதியாக சோரன் தனது பதவியை ராஜினாமா செய்தார். அதனை தொடர்ந்து உடனே அவரை ED கைது செய்தது.
கைதுக்கு பிறகு யார் ஜார்க்கண்ட் மாநிலத்தின் புதிய முதல்வர்? என்கிற கேள்வி எழுந்தது. ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா சோரன்தான் அடுத்த முதல்வராக இருப்பார் என பேசப்பட்ட நிலையில், கட்சியின் முன்னணி களப்போராட்ட தலைவரான சம்பாய் சோரன் முதல்வராக்கப்பட்டார். ஒருவேளை கல்பனா சோரன் முதல்வராகியிருந்தால், வாரிசு அரசியல் என்று கட்சி தலைவர்கள் அதிருப்தியடைந்திருப்பார்கள். ஆனால் சம்பாய் சோரனை முதல்வராக்கியதன் மூலம் கட்சியை ஹேமந்த் காப்பாற்றிவிட்டார்.
இதெல்லாம் ஓகேதான். சம்பாய் சோரன் நம்பிக்கையானவரா? என்பதை ஹேமந்த் பரிசோதிக்க தவறிவிட்டார். ஏனெனில் ஹேமந்த் சிறையிலிருந்து வந்த பின்னர் அவர் மீண்டும் முதல்வராக பொறுப்பேற்றுக்கொள்ள, சம்பாய் சோரன் ஜேஎம்எம் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் ஐக்கியமானார். இப்போது சட்டமன்ற தேர்தலில் ஹேமந்த் சோரனுக்கு எதிராகவும், ஜேஎம்எம் கட்சியிக்கு எதிராகவும் பாஜக சார்பில் சம்பாய் தீவிர பரப்புரையில் இறங்கியுள்ளார்.
எனவே களத்தில் தனது மனைவி கல்பனா சோரணையும், ஹேமந்த் களமிறக்கியுள்ளார். காண்டே தொகுதியில் கல்பனா போட்டியிடுகிறார். அவருக்கு எதிராக பாஜக, முனியா தேவி என்பதை வேட்பாளராக நிறுத்தியுள்ளது. கடந்த மே மாதம் இந்த தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளரை வீழ்த்தி கல்பனா வெற்றி பெற்றார். காண்டே தவிர டும்ரி, ராம்கர் மற்றும் ஜாரியா ஆகிய தொகுதிகளிலும் பெண்கள் போட்டியிட்டுள்ளனர்.
இதில் ஜாரியா தொகுதியும் மிகுந்த கவனம் பெற்றிருக்கிறது. அதாவது இந்த தொகுதியில், பூர்ணிமா நீரஜ் சிங் vs ராகினி சிங் என ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு மருமகள்கள், இருவேறு கட்சியிலிருந்து வேட்பாளர்களாக களம் இறங்கியுள்ளனர். இதில் பூர்ணிமா நீரஜ் சிங் காங்கிரஸ் சார்பிலும், ராகினி சிங் பாஜக சார்பிலும் களமிறங்குகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications