ரத்த கண்ணீர் விடும் அர்ஜென்டினா நீரோடை.. வரிசையாக செத்து மிதக்கும் மீன்கள்! இதற்கு என்னதான் காரணம்?
பியூனஸ் அயர்ஸ்: அர்ஜென்டினாவில் உள்ள முக்கிய நகரின் பிரதான பகுதியில் ஓடும் ஒரு நீரோடை திடீரென சிவப்பு கலருக்கு மாறியிருக்கிறது. காலை மக்கள் எழுந்து பார்க்கும் போது நீரோடை ஏதோ ரத்த கண்ணீர் வடிப்பது போல முழுக்க முழுக்க சிவப்பு நிறத்தில் ரத்தம் பாய்ந்து செல்கிறது. இது தொடர்பான போட்டோக்கள் இணையத்தில் டிரெண்டிாகி வருகிறது. இந்த நீரோடை திடீரென ரத்த கலரில் மாற என்ன காரணம் என்பதை நாம் பார்க்கலாம்.
இந்த உலகில் பல வினோதமான சம்பவங்கள் அடுத்தடுத்து நடந்து வருகிறது. அதில் பல விஷயங்கள் இயற்கையான ஒன்றாக இருந்தாலும், சில விஷயங்களுக்கு மனிதர்களின் செயல்பாடுகளே காரணமாக இருக்கிறது.

அர்ஜென்டினா நீரோடை:
அப்படியொரு சம்பவம் தான் இப்போது தென் அமெரிக்க நாடான அர்ஜென்டினாவில் அரங்கேறியுள்ளது. அங்குள்ள ஒரு முக்கியமான நீரோடை ஏதோ ரத்த கண்ணீர் வடிப்பது போல முழுக்க முழுக்க சிவப்பு கலரில் மாறியிருக்கிறது. ஏன் இதுபோல மாறியது. இதற்கு என்ன காரணம் என்பதை வல்லுநர்கள் விளக்குகிறார்கள். அங்குள்ள பியூனஸ் அயர்ஸின் புறநகரில் உள்ள மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் சரண்டி என்ற ஓடை ஓடுகிறது. இதுதான் இப்போது சிவப்பு கலரில் மாறியிருக்கிறது.
ரியோ டி லா பிளாட்டாவின் துணை நதியான இது, பல கீமீ பயணித்து கடைசியில் ஆறில் கலக்கும். அது செல்லும் பகுதியில் ஏராளமான தோல் பதனிடும் தொழிற்சாலைகள் உள்ளன. அங்கிருந்து வெளியேறும் கழிவுகள் இந்த ஓடையில் கலக்கிறது. இதுவே ஆறின் கலர் மாறும் அளவுக்கு நிலைமை மோசமாகக் காரணமாக இருக்கிறது.
முதல்முறை இல்லை:
அதேநேரம் சரண்டி நீரோடை தனது இயல்பை விட்டு இதுபோல வினோதமான கலர்களில் மாறுவது இது முதல்முறை இல்லை. ஏற்கனவே கடந்த காலங்களில் பல முறை இதுபோல வித்தியாசமான கலர்களில் அது மாறியிருக்கிறது. சில சமயங்களில் அது எண்ணெய் போலவும் சில நேரம் சாம்பல் அல்லது ஊதா நிறத்தில் கூட மாறியிருக்கிறது. அப்போதே சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இது தொடர்பாகத் தொடர்ந்து அச்சம் தெரிவித்து வந்தனர்.
பொதுமக்கள்:
இந்தச் சூழலில் தான் நீரோடை மொத்தமாகச் சிவப்பு கலரில் மாறியிருக்கிறது. பார்க்கவே ரத்த கலரில் இருக்கும் இந்த ஓடையைப் பார்த்து அப்பகுதி மக்கள் மிரண்டு போய் இருக்கிறார்கள். இப்போது தான் இது உண்மையில் எந்தளவுக்குப் பேராபத்தை விளைவிக்கும் என்று உணர்ந்துள்ளனர். இது தொடர்பாக அப்பகுதியில் வசிப்போர் கூறுகையில், "திடீரென சில நாட்களுக்கு முன்பு காலை இதுபோல கலர் மாறிவிட்டது. நீரோடை ஏரோ ரத்த கண்ணீர் வடிப்பது போல இருக்கிறது. இதுபோல ஒரு விஷயத்தை இதுவரை நாங்கள் பார்த்ததே இல்லை" என்றார்.
சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்:
இது தொடர்பாகச் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுகையில், "தண்ணீரில் மிக மோசமான கெமிக்கல்கள் கலந்துள்ளன. இதுவே கலரை மாற்றுகிறது. இது இங்குள்ள மனிதர்களுக்கு மட்டுமின்றி வனவிலங்குகளுக்கும் மிக மோசமான ஆபத்தை ஏற்படுத்தும். அதேநேரம் ஆறு திடீர் திடீரென கலர் மாறுகிறது.. எனவே, உண்மையில் என்ன பிரச்சினை.. இதற்கு யார் காரணம் என்பதைக் கண்டறிய அது உடல்நலக் கேடு விளைவிக்கிறதா என்பதையும் கண்டறிய இங்குத் தண்ணீர் மாதிரிகளை எடுத்துச் சோதிக்க வேண்டும்" என்றார்.


Click it and Unblock the Notifications
