ஷேக் ஹசீனாவை கொல்ல முகமது யூனுஸ் சதி? பகீர் கிளப்பிய மாஜி பிரதமர்.. இந்தியாவுக்கு வங்கதேசம் சம்மன்
டாக்கா: வங்கதேச இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸ் தன்னை கொல்ல முயன்றதாக நம் நாட்டில் தங்கியுள்ள அந்நாட்டு முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா பரபரப்பான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள வங்கதேசம் அங்குள்ள நம் நாட்டின் இந்திய தூதருக்கு சம்மன் வழங்கி உள்ளது.
வங்கதேசத்தில் கடந்த ஆண்டு மாணவர்கள் போராட்டம் வெடித்தது. பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா பதவியை ராஜினாமா செய்து நம் நாட்டில் தஞ்சமடைந்தார். தற்போது வங்கதேசத்தில் முகமது யூனுஷ் தலைமையில் இடைக்கால அரசு நடந்து வருகிறது. இவர் பாகிஸ்தான் ஆதரவாளர். இதனால் தற்போது வங்கதேசத்துக்கும் நம் நாட்டுக்கும் இடையேயான உறவு என்பது மோசமாகி உள்ளது.

இதற்கிடையே தான் ஷேக் ஹசீனாவை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று நம் நாட்டிடம் தொடர்ந்து வங்கதேசம் வலியுறுத்தி வருகிறது. ஷேக் ஹசீனாவுக்கு எதிராக பல வழக்குகள் நிலுவையில் உள்ளதை சுட்டிக்காட்டி தங்களிடம் ஒப்படைக்கும்படி வங்கதேசம் கதறி வருகிறது.
ஆனால் ஷேக் ஹசீனா நம் நாட்டுடன் நல்ல உறவில் இருந்தார். அதோடு ஷேக் ஹசீனாவுக்கு வங்கதேசத்தில் ஆபத்து ஏற்படும் சூழல் உள்ளது. இதனால் மத்திய அரசு அவரை திரும்ப அனுப்பவில்லை. இது வங்கதேசத்தை கோபமாக்கி உள்ளது. இதற்கிடையே தான் நேற்று முன்தினம் மீண்டும் வங்கதேசத்தில் வன்முறை அரங்கேறியது. வங்கதேசத்தின் தந்தையாக அழைக்கப்படும் ஷேக் ஹசீனாவின் தந்தை முஜிபர் ரஹ்மானின் நினைவிடம் மற்றும் வீட்டை ஒரு கும்பல் இடித்து சேதப்படுத்தியது. வீட்டுக்கு தீவைத்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஷேக் ஹசீனா , வங்கதேச இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் மீது பரபரப்பான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். இதுதொடர்பாக ஷேக் ஹசீனா பேஸ்புக் லைவ் வீடியோவில் கூறியுள்ளதாவது: வங்கதேசத்தில் குழப்பமான சூழல் நிலவி வருகிறது. வளர்ந்து வந்த வங்கதேசம் தற்போது பயங்கரவாதிகள் மற்றும் போராட்டக்காரர்களின் புகலிடமாக மாறி உள்ளது. வங்கதேசத்தில் அழிவுக்கான சகாப்தம் என்பது தொடங்கி உள்ளது. முகமது யூனுஸ் அரசு அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது. பணத்தை பயன்படுத்தியும், மக்களை கொன்றும் அவர் ஆட்சியை பிடித்துள்ளார். என்னையும், எனது சகோதரியையும் கொலை செய்ய முகமது யூனுஸ் சதி செய்கிறார்'' என்றார்.
ஷேக் ஹசீனாவின் இந்த பேச்சு என்பது வங்கதேசத்தை கடும் கோபத்துக்கு உள்ளாக்கி உள்ளது. அதோடு ஷேக் ஹசீனா இந்தியாவில் இருந்து இத்தகைய குற்றச்சாட்டுகளை வைத்திருப்பதை வங்கதேசத்தால் தாங்கி கொள்ள முடியவில்லை. இதனால் ஷேக் ஹசீனா விவகாரம் தொடர்பாக வங்கதேசத்துக்கான இந்திய தூதருக்கு அந்த நாடு சம்மன் அனுப்பி உள்ளது. ஷேக் ஹசீனாவின் இந்த குற்றச்சாட்டு என்பது பொய்யானது என்று முற்றிலுமாக வங்கதேச வெளியுறவுத்துறை மறுத்துள்ளது. அதோடு அந்நாட்டுக்கான இந்திய தூதர் (பொறுப்பு) பவன் பாதியை அழைத்து சம்மன் வழங்கி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இதுபற்றி வங்கதேச வெளியுறவுத்துறை அமைச்சகம் பேஸ்புக் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளது. அதில், ''முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா சமூக ஊடகங்கள் உட்பட பல்வேறு தளங்களில் தொடர்ந்து வெளியிட்டு வரும் தவறான மற்றும் ஜோடிக்கப்பட்ட கருத்துக்கள், அறிக்கைகள் குறித்து வங்கதேச வெளியுறவு அமைச்சகம் இந்திய அரசுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. டாக்காவில் உள்ள இந்திய பொறுப்பு தூதரிடம் எதிர்ப்பை பதிவு செய்துள்ளது.
வங்கதேச மக்களின் உணர்வுகளை புண்படுத்துவதாக கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய நடவடிக்கைக்கு ஆட்சேபனைகள் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற நடவடிக்கைகள் என்பது வங்கதேசத்திற்கு விரோதமான செயலாக இருப்பதோடு இருநாடுகள் இடையேயான ஆரோக்கியமான உறவை ஏற்படுத்த இது உகந்ததாக இருக்காது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications