ஜப்பான் பிரதமர் பங்கேற்ற கூட்டத்தில் குண்டு வீச்சு.. பெரும் பதற்றம்.. அதிர்ஷ்டவசமாக தப்பினார்
டோக்கியோ: ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது அவரை நோக்கி ஒருவர் கையெறி குண்டை வீசினார். குண்டு வெடித்ததில் அப்பகுதி முழுவதும் கரும் புகை சூழ்ந்தது. இந்த குண்டு வீச்சில் அதிர்ஷ்டவசமாக ஜப்பான் பிரதமர் உயிர் தப்பினார்.
கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்று ஜப்பான்.. தீவு நாடான ஜப்பானின் பிரதமராக ஃபுமியோ கிஷிடா பதவி வகித்து வருகிறார். கடந்த 2020 ஆம் ஆண்டு அப்போது பிரதமராக இருந்த ஷின்சோ அபே தனது பதவியை ராஜினமா செய்தார். இதையடுத்து ஜப்பானின் புதிய பிரதமராக ஃபுமியோ கிஷிடா பதவியேற்றார்.

ஜப்பானில் விரைவில் தேர்தல் நடைபெற உள்ளதால் ஆளும் கட்சிக்கு ஆதரவாக பிரதமர் கிஷிடா தீவிரமாக பிரசாரம் செய்து வருகிறார். அந்த வகையில், ஜப்பானின் மேற்கு பகுதி நகரமான வகயமாவில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார். திறந்த மேடையில் ஜப்பான் பிரத்மர் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது பிரதமரை குறிவைத்து மர்ம பொருள் வீசப்பட்டது.
மேடைக்கு முன்பாக விழுந்து சத்தத்துடன் வெடித்தது. இதனால், அப்பகுதி முழுவதும் கரும்புகை கிளம்பியது. அதிர்ஷ்டவசமாக பிரதமர் கிஷிடா தப்பினார். உடனடியாக பாதுகாப்பு அதிகாரிகள் கிஷிடாவை அங்கிருந்து பத்திரமாக மீட்டு அழைத்து சென்றனர். இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. எனினும், கூட்டத்தில் பிரதமரை குறிவைத்து வீசப்பட்ட பொருள் வெடித்ததால் மக்கள் மத்தியில் பெரும் பீதி ஏற்பட்டது.
அலறியடித்து மக்கள் ஓட்டம் பிடித்த காட்சிகள் உள்ளூர் ஊடகங்களில் வெளியாகின. பிரதமரை குறிவைத்து ஸ்மோக் பாம்ப் எனப்படும் பைப் வெடிகுண்டாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதாக ஜப்பான் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக பிரதமர் கூட்டத்தில் வெடிபொருளை வீசிய நபரை பாதுகாப்பு படையினர் மடக்கி பிடித்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

ஜப்பானில் கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை 8 ஆம் தேதி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு இருந்த முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே சுட்டுக்கொலை செய்யப்பட்டார். ஜப்பான் கடற்படையின் முன்னாள் வீரர் பட்ட பகலில் சுட்டுக்கொன்றது உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
ஜப்பானின் முன்னாள் பிரதமரும் உலகம் முழுவதும் பிரபலமான அறியப்பட்ட ஒரு தலைவராக இருந்த ஷின்சோ அபே துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்டது பெரும் பரபரப்பையும் அந்த நாட்டில் தலைவர்களுக்கு கொடுக்கப்படும் பாதுகாப்பு குறித்த கேள்விகளையும் எழுப்பியிருந்தது. முன்னாள் பிரதமர் துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்ட 9 மாதங்களில் இன்று பிரதமர் பங்கேற்ற கூட்டத்தில் வெடிபொருள் வெடித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications