வெட்கமா இருக்கு! நிலவுக்கு போக எங்களுக்கு இன்னும் 30 வருஷமாகும்! இஸ்ரோவை புகழ்ந்த பாகிஸ்தான் நடிகை
இஸ்லாமாபாத்: சந்திரயான் 3 வெற்றிக்கு வாழ்த்து சொன்ன பாகிஸ்தான் நடிகை சேகர் ஷின்வாரி, ‛‛நிலாவுக்கு நாங்கள் செல்ல இன்னும் 30 வருஷமாகும். இந்தியா இன்று அடைந்துள்ள நிலையை எண்ணி நாம் வெட்கி தலைக்குனிய வேண்டும் என ட்விட்டரில் கூறி பரபரப்பை கிளப்பி உள்ளது.
இந்தியா நிலவின் தென்துருவத்தை ஆராய பிஎஸ்எல்வி எல்விஎம் 3 ராக்கெட் மூலம் கடந்த மாதம் 14ம் தேதி சந்திரயான் 3யை விண்ணில் ஏவியது. உந்துவிசை கலன், விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவர் உள்ளிட்டவை இடம்பெற்றிருந்தது.

திட்டமிட்டப்படி உந்துவிசை கலனில் இருந்து விக்ரம் லேண்டர் பிரிந்து நிலவின் தரைப்பகுதியை நோக்கி தரையிறங்கியது. நேற்று மாலையில் 6.04 மணிக்கு விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக நிலவின் தென்துருவத்தில் சாப்ட் லேண்டிங் முறையில் தரையிறங்கியது.
இதையடுத்து விக்ரம் லேண்டரில் இருந்து பிரக்யான் ரோவர் வாகனம் வெளியேறி ஆய்வை தொடங்கி உள்ளது. இந்தியாவின் இந்த வெற்றிக்கு உலகின் பல்வேறு நாட்டு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். கடந்த முறை சந்திரயான் 2 திட்டம் மயிரிழையில் மிஸ்ஸான நிலையில் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் இந்தியாவை ட்ரோல் செய்த நிலையில் தற்போது அவர்கள் வாயடைத்து போய் உள்ளனர்.
இத்தகைய நிலையில் தான் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த நடிகை சேகர் ஷின்வாரி சந்திரயான் - 3 திட்டத்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதோடு விண்வெளி துறையில் பின்தங்கி உள்ள பாகிஸ்தானை அவர் விளாசி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
இதுதொடர்பாக நடிகை சேகர் ஷின்வாரி தனது ட்விட்டர் பக்கத்தில், ‛‛இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவுக்கு வாழ்த்துகள். இந்தியாவுடனான மோதலுக்கு அப்பாற்பட்டு நான் இந்த வாழ்த்தை தெரிவித்து கொள்வேன். உண்மையிலேயே இஸ்ரோவை வாழ்த்துகிறேன். ஏனென்றால் பாகிஸ்தானுக்கும், இந்தியாவுக்குமான இடைவெளி என்பது அனைத்து விஷயங்களிலும் அதிகரித்துள்ளது.
பாகிஸ்தானை பொறுத்தமட்டில் நிலவில் தரையிறங்க வேண்டும் என்றால் 2 முதல் 3 தசாப்தங்கள் (20 முதல் 30 ஆண்டுகள்) ஆகும். இன்னும் சொல்ல வேண்டும் என்றால் நமது இன்றைய பிரச்சனைகளுக்கு நாமே தான் காரணம்'' என தெரிவித்துள்ளார். மேலும் அவர் இன்னொரு ட்விட்டர் பதிவையும் செய்துள்ளார்.
அதில், ‛‛இந்தியா இன்று எத்தகைய நிலையை அடைந்துள்ளது என்பதை எண்ணிப்பார்த்தால் நாம் வெட்கி தலைக்குனிய வேண்டும். ஏனென்றால் நாம் நாட்டுக்குள்ளேயே சட்டம் மற்றும் அரசியல் சார்ந்த மேலாதிக்க பிரச்சனைகளை சரிசெய்ய பாடுபட்டு வருகிறோம். இப்படி இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான வித்தியாசம் என்பது இந்தியாவின் வெற்றியை நெருங்குவது பாகிஸ்தானுக்கு சுலபமல்ல என்பதை நிரூபித்து உள்ளது'' என தெரிவித்துள்ளார்.
முன்னதாக பாகிஸ்தானில் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கைது செய்யப்பட்ட பிறகு அங்கு பிரச்சனை வெடிக்கும் சூழல் ஏற்பட்டது. இந்த வேளையில் நமது பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உளவுத்துறையின் ரா ஆகியோரின் மீது நடிகை சேகர் ஷின்சாரி புகார் அளித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications